மாந்துறை ஆம்ரவனேசுவரர் கோயில்
தேவாரம் பாடல் பெற்ற மாந்துறை ஆம்ரவனேசுவரர் திருக்கோயில் | |
---|---|
பெயர் | |
புராண பெயர்(கள்): | திருமாந்துறை, வடகரை மாந்துறை |
பெயர்: | மாந்துறை ஆம்ரவனேசுவரர் திருக்கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | மாந்துறை |
மாவட்டம்: | திருச்சிராப்பள்ளி |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | ஆம்ரவனேஸ்வரர், மிருகண்டீஸ்வரர் |
தாயார்: | பாலாம்பிகை |
தல விருட்சம்: | மாமரம் |
தீர்த்தம்: | காவேரி, காயத்ரி தீர்த்தம் |
ஆகமம்: | காமிகம் |
பாடல் | |
பாடல் வகை: | தேவாரம் |
பாடியவர்கள்: | திருஞானசம்பந்தர், அருணகிரியார் |
வரலாறு | |
அமைத்தவர்: | சோழர் |
திருமாந்துறை ஆம்ரவனேசுவரர் கோயில் மாந்துறை கிராமத்தில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 58வது சிவத்தலமாகும். மாந்துறை திருச்சிராப்பள்ளி - லால்குடி பேருந்துத் தடத்தில் உள்ள ஒரு சிறு கிராமம். இது லால்குடியிலிருந்து மேற்காக சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சி, லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகியவற்றில் இருந்து பேருந்து மூலம் செல்ல வசதி கொண்டுள்ளது. இச்சிற்றூரின் பெரும் சிறப்பு இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான தொன்மை வாய்ந்த கோயில் கொண்ட திருத்தலமாக இது இருப்பதே.[1]
இரு மாந்துறைகள்
தமிழ்நாட்டில் மாந்துறை என்ற பெயரில் இரண்டு சிவன் கோயில்கள் உள்ளன. அவை வடகரை மாந்துறை, தென்கரை மாந்துறை என்று அழைக்கப்படுகின்றன.வடகரை மாந்துறை, திருச்சியில் இருந்து லால்குடி செல்லும் வழியிலுள்ள பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் 58ஆவது தலமாகும். தென்கரை மாந்துறை, கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறையிலிருந்து திருப்பனந்தாள் செல்லும் வழியில் சூரியனார்கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு தேவார வைப்புத் தலமாகும். [2] இது வடகரை மாந்துறையில் உள்ள சிவன் கோயில் ஆகும்.
தல வரலாறு
முனிவர் ஒருவர் தாம் சிவனுக்குச் செய்த தவறால், இத்தலத்தில் மான்களாகப் பிறந்து வந்த ஒரு அசுர தம்பதியினருக்கு மகனாக அவதரித்தார். ஒரு முறை இரைதேடச் சென்ற மான்கள் தமது சாப விமோசனம் வேண்டவே சிவன் அம்பால் அவற்றை வீழ்த்தி அவற்றிற்கு முக்தி அளித்தார். தாய் தந்தையரைக் காணாத பிஞ்சு மான் கலங்கி நிற்க, அம்மையப்பனே தாய்-தந்தை மான்களாக வடிவெடுத்து சிறு மானை ஆற்றுப்படுத்த அன்னையின் பாலாம் அமுதுண்ட பிஞ்சு மான் ஞானம் அடைந்தது.
தலச்சிறப்பு
திருவண்ணாமலையில் சிவபெருமானின் முடி கண்டதாகப் பொய்யுரைத்த பிரமன் இத்தலத்தில் தவமியற்றித் தனது பாவத்தைப் போக்கிக் கொண்டதாகவும் கூறுவர்.
கோயிற் சிறப்பு
மாந்துறையின் சிறப்பு இங்கு அமைந்துள்ள பழமையான சிவன் கோவில். இது அருணகிரிநாதர் மற்றும் அப்பர், திருஞானசம்பந்தர் முதலிய நாயன்மார்கள் ஆகியோரால் பாடப் பெற்ற திருவிடமாகும். முன்னர் மாந்தோப்புக்கள் நிறைந்து காணப்பட்டமையாலேயே "மா-உறை" இடம் எனக் கூறப்பட்டுப் பின்னர் மாந்துறை என வழக்கில் மாறியது என்பர். தல வரலாற்றின்படி, மான்களாய்ப் பிறப்பெடுத்த அசுரர்களுக்கு முக்தி அளித்தமையால், மான்- உறை என்பதே மாந்துறையானது என்பதும் உண்டு. இந்தக் கோயிலின் தல மரம் மாமரமே என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கிராமத்தில் சோழர் காலக் கல்வெட்டுக்கள் இரண்டு படி எடுக்கப்பட்டுள்ளமை இதன் தொன்மையைப் பறைசாற்றுவதாக உள்ளது.[1]
இக்கோயிலின் மூலவர் ஆம்ரனேஸ்வரர் எனப்படுகிறார் (ஆம்- என்பது வடமொழியில் மாங்காயைக் குறிப்பது). மிருகண்டு முனிவர் இங்கு வந்து வழிபட்டமையால் இவருக்கு மிருகண்டீஸ்வரர் என்று மற்றொரு பெயரும் உண்டு. அம்மனின் பெயர் வாலாம்பிகா (தமிழில் அழகம்மை; அழகு உயர்ந்த அம்மை என்று கூறுவதும் உண்டு) எனப்படுகிறது. சூரியனார், சந்திரனார் மற்றும் இந்திரன் ஆகியோர் இங்கு வழிபட்டதாக நம்பிக்கை நிலவுகிறது.
லால்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஆங்கரை போன்ற கிராமங்களில் வசித்தவர்களும், அவர்கள் மரபில் வந்து தற்போது உலகெங்கும் பரவியுள்ள பலரும், மாந்துறையில் உள்ள இக்கோயிலினை இன்றளவும் புண்ணியத்தலமாகவும், இந்த இறைவனை மாந்துறையான் என்ற வழக்குப் பெயருடன் குல தெய்வமாகவும் கொண்டுள்ளனர்.
காவல் தெய்வம்
இக்கோயிலை ஒட்டி கிராமத்துத் தெய்வமான கருப்பண்ணசாமியின் பூசையிடமும் அமைந்துள்ளது. கிராமத்து வழக்கப்படி மூலவர் என சிலை ஏதும் இல்லாது, குதிரைகளும், வேல்களுமே காவல் தெய்வத்தின் உருவகமாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். இக்காவல் தெய்வத்தின் காலடி மண் நோய்களைப் போக்கும் சக்தி கொண்டது எனும் நம்பிக்கை இங்கு வரும் பக்தர்களுக்கு மிக அதிகம் உண்டு.
கோயிலின் படங்கள்
திருத்தலப் பாடல்கள்
வடகரை மாந்துறை பாடல் பெற்ற ஒரு தொன்மையான திருத்தலம். நாயன்மார்கள் மற்றும் அருணகிரிநாதர் போன்ற சைவப் பெருந்தகையினர் இத்தலத்து ஈசனை வழிபட்டு பாடல்கள் பொழிந்து சென்றுள்ளனர்.
திருஞான சம்பந்தர்
இவ்வடகரை மாந்துறையானை திருஞான சம்பந்தர் அருளிச் செய்த திருப்பாடற்திரட்டில் இரண்டொன்றைக் கீழே காணலாம்:
மந்த மார்பொழில் மாங்கனி மாந்திட மந்திகள் மாணிக்கம்
உந்தி நீர்வரு காவிரி வடகரை மாந்துறை யுறைவானை
நிந்தி யாவெடுத் தார்த்தவல் லரக்கனை நெரித்திடு விரலானைச்
சிந்தி யாமனத் தாரவர் சேர்வது தீநெறி யதுதானே
வரைவ ளங்கவர் காவிரி வடகரை மாந்துறை யுறைவானைச்
சிரபு ரம்பதி யுடையவன் கவுணியன் செழுமறை நிறைநாவன்
அரவெ னும்பணி வல்லவன் ஞானசம் பந்தனன் புறுமாலை
பரவி டுந்தொழில் வல்லவர் அல்லலும் பாவமும் இலர்தாமே.
அருணகிரிநாதர்
முருகன் அருள் பெற்று திருப்புகழ் பலவற்றினை வாய்மலர்ந்த அருணகிரிநாதரும் இத்தலத்தைப் பற்றிப் பாடியுள்ளார்:
ஆங்குடல் வளைந்து நீங்குபல் நெகிழ்ந்து ஆய்ஞ்சுதளர் சிந்தை தடுமாறி
ஆர்ந்துள கடன்கள் வாங்கவு மறிந்து ஆண்டுபல சென்று கிடையோடே
ஊங்கிருமல் வந்து வீங்குகுடல் நொந்து ஓய்ந்துணர் வழிந்து உயிர்போமுன்
ஓங்குமயில் வந்து சேண்பெறஇ சைந்து ஊன்றிய பதங்கள் தருவாயே
வேங்கையு முயர்ந்த தீம்புன மிருந்த வேந்திழையி னின்ப மணவாளா
வேண்டுமவர் தங்கள் பூண்டபத மிஞ்ச வேண்டிய பதங்கள் புரிவோனே
மாங்கனி யுடைந்து தேங்கவயல் வந்து மாண்புநெல் விளைந்த வளநாடா
மாந்தர்தவ ரும்பர் கோன்பரவி நின்ற மாந்துறை யமர்ந்த பெருமாளே.
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
குறிப்புதவிகள்
1. http://www.thevaaram.org/thirumurai_1/koil_view.php?koil_idField=231
புற இணைப்புகள்
- திருச்சி-லால்குடி வழியில் மாந்துறையின் இருப்பிடத்தைக் காட்டும் வரைபடம்
- மாந்துறை பற்றிய ஒரு வலைத்தளம் பரணிடப்பட்டது 2010-12-23 at the வந்தவழி இயந்திரம்
- மாந்துறை தல வரலாறு, படங்களுடன் மற்றொரு வலைத்தளம் பரணிடப்பட்டது 2010-02-04 at the வந்தவழி இயந்திரம்
- திருஞான சம்பந்தர் அருளிச் செய்த பாக்கள் தெளிவுரையுடன் காணப்படும் ஒரு வலைத்தளம்
- திருமாந்துறை பற்றிய ஒரு ஓலி, ஒளிக்காட்சி
திருமாந்துறை | |||
---|---|---|---|
முந்தைய திருத்தலம்: அன்பிலாலந்துறை |
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தலம் | அடுத்த திருத்தலம் திருப்பாற்றுறை ஆதிமூலேசுவரர் கோயில் |
|
தேவாரப்பாடல் பெற்ற சோழநாட்டு காவிரி வடகரைத் திருத்தல எண்: 58 | தேவாரப்பாடல் பெற்ற திருத்தல எண்: 58 |