சடையவர்மன் குலசேகர பாண்டியன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1162 முதல் 1175 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான்.சீவல்லப பாண்டியனின் மகனான இம்மன்னன் கி.பி. 1162 ஆம் ஆண்டளவில் முடிசூடிக்கொண்டான்.இவனது மெய்க்கீர்த்திகள் 'பூதலமடந்தை' எனத் தொடங்கும்.நெல்லையிலிருந்து பாண்டிய நாட்டில் இவன் ஆட்சி புரிந்தவேளை பராக்கிரம பாண்டியன் மதுரையிலிருந்து ஆட்சி செய்தான்.பாண்டிய நாடு முழுவதனையும் ஆட்சி செய்ய வேண்டுமென்ற போட்டி இருவரிடத்திலும் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


சடையவர்மன் குலசேகர பாண்டியன் காலத்துப் போர்கள்

பாண்டிய நாடு முழுவதனையும் ஆட்சி செய்யவேண்டும் என்ற அவாவினால் சடையவர்மன் குலசேகர பாண்டியன் மதுரையை முற்றுகையிட்டு பராக்கிரம பாண்டியனைப் போருக்கு அழைத்தான். பராக்கிரம பாண்டியன் இலங்கை மன்னனான பராக்கிரம பாகுவிடம் படையுதவிகள் வழங்குமாறு கேட்டதன் பொருட்டு தண்ட நாயகன் என்றவன் தலைமையில் பெரும்படையினை அனுப்பி வைத்தான். அப்படை மதுரையினை வந்தடைவதற்குள் பராக்கிரம பாண்டியனையும் அவன் மனைவி மக்களையும் கொன்று மதுரையினைக் கைப்பற்றியிருந்தான் சடையவர்மன் குலசேகர பாண்டியன்.இதனால் கோபமுற்ற தண்ட நாயகன் இராமேச்சுரம்,குந்துகாலம் போன்ற ஊர்களை மீட்டு வெற்றி பெற்றான்.இலங்கைப் படை அடிக்கடி போர் செய்தது இப்போர்களில் பாண்டிராசன் மற்றும் சுந்தரபாண்டியன் ஆகியோர் தோற்றனர்.ஆளவந்தான் என்ற படைத்தலைவன் ஒருவனும் இறந்தான்.தண்ட நாயகன் போரில் வெற்றி பெற்றான்.கொங்கு நாட்டு மன்னனான தனது மாமனிடம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் படை உதவி கேட்டுப்பெற்றான்.இரு படைகளுடன் தண்ட நாயகனை எதிர்த்துப் போரிட்டான் இப்போரில் தண்ட நாயகன் வெற்றி பெற்றான்.மதுரையைக் கைப்பற்றினான். பராக்கிரம பாண்டியன்|பராக்கிரம பாண்டியனின் இறுதி மகனான சடையவர்மன் வீரபாண்டியன் மலை நாடு|மலை நாட்டில் மறைந்து வாழ்ந்தான் இவனை அழைத்து மதுரை ஆட்சிப் பொறுப்பினை அளித்தான் தண்ட நாயகன். மேலும் கீழை மங்கலம் மேலை மங்கலம் ஆகிய ஊர்களை கண்ட தேவ மழவராயனிடம் வழங்கி ஆட்சி செய்யச் சொன்னான். தொண்டி,கருத்தங்குடி,திருவேகம்பம் ஆகிய ஊர்களின் ஆட்சிப் பொறுப்பினை மழவச்சக்ரவர்த்திக்கு அளித்தான்.


சடையவர்மன் குலசேகர பாண்டியன் மீண்டும் ஒருமுறை படை திரட்டியதை அறிந்த சடையவர்மன் வீரபாண்டியன்மழவச்சக்ரவர்த்தி, மற்றும் கண்ட தேவ மழவராயன் மூவரும் தண்ட நாயகனுடன் சேர்ந்து சடையவர்மன் குலசேகர பாண்டியனை மதுரையை விட்டுத் துரத்தினர்.பராக்கிரம பாகுவிடம் படையுதவியைப் பெற்ற தண்ட நாயகன் சகத்விசய தண்டநாயகன் தலைமையில் பெரும்படையினைப் பெற்றான்.இப்படை வலிமையுடன் சடையவர்மன் குலசேகர பாண்டியனை வென்று மீண்டும் சடையவர்மன் வீரபாண்டியனிற்கு மதுரையை ஆளும் பொறுப்பினைக் கொடுத்தான் தண்ட நாயகன்.இப்போரின் பின்னர் சீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற போரிலும் சடையவர்மன் குலசேகர பாண்டியன் தோல்வியைத் தழுவி நெல்லிக்குச் சென்று தங்கினான் என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி. 1167 ஆம் ஆண்டளவில் சடையவர்மன் குலசேகர பாண்டியன் சோழ மன்னன் இராசாதிராசனிடம் உதவி பெற்று திருச்சிற்றம்பமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் படையினைப் பெற்று சிங்களப் படைகளுடன் போரில் ஈடுபட்டான். தொண்டி,பாசிப்பட்டினம் ஆகிய ஊர்களில் போர் நடைபெற்று இலங்கைப் படையே வெற்றியினை ஈட்டியது.காஞ்சியை அடுத்துள்ள ஆர்ப்பாக்கத்தில் உள்ள கல்வெட்டின்படி சோழ மண்டலம்,கொங்கு மண்டலம் ஆகிய ஊர்களில் வாழ்ந்த மக்கள் இலங்கைப் படையினரால் அச்சம் அடைந்தனர் எனக் குறிக்கப்பட்டுள்ளது.


இராசாதிராசன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்குப் போர் உதவியாக தனது படைத் தலைவனான பெருமான் நம்பிப் பல்லவராயன் மூலம் சிங்களப் படைகளை அழித்தான்.சிங்களப் படைத்தலைவர்கள் இருவரையும் கொன்று தலைகளை மதுரைக்கோட்டை வாயிலில் வைத்ததாகக் கருதப்படுகின்றது.இதன் பின்னர் சடையவர்மன் குலசேகர பாண்டியன் தலைமையில் ஆட்சி நடைபெற்றது.இவற்றினை அறிந்த சிங்கள மன்னன் பராக்கிரம பாகு கோபம்கொண்டு சோழனையும்,பாண்டியனையும் தாக்கச் சமயம் பார்த்திருந்தான்.சடையவர்மன் குலசேகர பாண்டியனை நண்பனாக்கிக் கொள்ள பரிசு பல அனுப்பி அவனது நட்பைப்பெற்றான்.சோழனது உதவியை மறந்து சிங்கள மன்னனுடன் நட்புக் கொண்ட சடையவர்மன் குலசேகர பாண்டியன் அவனுடன் மணத் தொடர்பு கொள்ளவும் செய்து,சோழனுக்கு பிடிக்காத செயல்களையும் செய்யத் தொடங்கினான்.சோழனுக்குத் தொடர்புடைய இராசராசக் கற்குடி மாராயன்,இராச கம்பீரன் அஞ்சுக்கோட்டை நாடாள்வான் ஆகிய படைத்தலைவர்களை வெள்ளாற்றுக்கும் வடக்கே போகுமாறு செய்து பின் மதுரை வாயிலில் இருந்த இலங்கைப் படைத் தலைவர்களின் தலைகளை நீக்குமாறும் உத்தரவு பிறப்பித்தான்.இவற்றை அறிந்த சோழன் இராசாதிராசன் குலசேகர பாண்டியனைத் தண்டிக்க நினைத்து பராக்கிரம பாண்டியன் மகனான் வீரபாண்டியனுக்கு மதுரையினை அளிக்க நினைத்து தன் அமைச்சன் வேதவனமுடையான்,அம்மையப்பன் அண்ணன் பல்லவராயன் ஆகியோருக்கு ஆணையிட்டான்.இம்மூவரின் பெரும்படையின் தாக்குதல்களால் சடையவர்மன் குலசேக பாண்டியன் போரில் தோற்று மறைந்து வாழ்ந்தான்.கி.பி. 1168 ஆம் ஆண்டளவில் ஆட்சியினை ஏற்ற சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1175 ஆம் ஆண்டளவில் நன்றி கெட்டதனால் ஆட்சியினை இழந்தான்.