முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
இம்மன்னன் வென்ற தென்னிந்தியப் பகுதிகளும், இலங்கை பகுதிகளும்

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி 1268 முதல் கி.பி 1311 வரை அரசாண்ட பாண்டிய பேரரசர் ஆவார். முதலாம் சடையவர்மன் சுந்தர பாண்டியனை அடுத்து முடி சூடியவனான இவன் தன் இறப்பு வரை ஆட்சி புரிந்தான்.

ஆற்றிய போர்கள்

மாறவர்மன் குலசேகரபாண்டியன் காலத்துப் போர் நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கவை அவன் சேரநாட்டில் உள்ள கொல்லத்தைக் கைப்பற்றியதும், ஈழ நாட்டின் மீது படையெடுத்ததும் ஆகும். மாறவர்மன் குலசேகரபாண்டியன் கி.பி. 1274இல் சேரநாட்டின் மீது படையெடுத்துச் சென்று அந்நாட்டில் உள்ள கொல்லத்தை வென்று அதனைக் கைப்பற்றிக் கொண்டான். அதனால் இவன் கொல்லம் கொண்ட பாண்டியன் என்னும் பட்டப்பெயர் பெற்றான்.

மாறவர்மன் குலசேகரபாண்டியனின் ஈழப் படையெடுப்பைப் பற்றி இலங்கை வரலாற்று நூலாகிய மகாவம்சம் விரிவாகக் கூறுகிறது. இப்பாண்டியன் கி.பி. 1284இல் ஆரியச் சக்கரவர்த்தி என்பவன் தலைமையில் பெரும்படை ஒன்றை இலங்கைக்கு அனுப்பிவைத்தான். அப்படைத்தலைவன் ஈழத்தின் பல பகுதிகளைப் பேரழிவிற்கு உள்ளாக்கி நகரங்களைக் கொள்ளையிட்டுச் சுபகிரி என்னும் நகரில் இருந்த பெருங்கோட்டையைக் கைப்பற்றினான்.[1] இறுதியில் அந்நாட்டில் உள்ள பெருஞ்செல்வங்களையும் புத்தரது பல்லையும் கைப்பற்றிக் கொண்டு வெற்றியுடன் பாண்டிய நாட்டிற்குத் திரும்பினான். புத்தரின் பல்லை ஈழ நாட்டார் புனிதப் பொருளாகக் கருதி வந்தனர். பாண்டியரோடு போர் புரிந்து அப்பல்லைப் பெறுவதற்கு இயலாத நிலையில் இருந்த ஈழநாட்டு மன்னன் மூன்றாம் பராக்கிரமபாகு என்பவன் பாண்டிய நாடு வந்தான். மாறவர்மன் குலசேகரபாண்டியனைப் பணிந்து நட்புரிமை கொண்டு புத்தரின் பல்லைப் பெற்றுச் சென்றான்.[2]

போசளர் ராமதானையும் மூன்றாம் ராஜேந்திர சோழனையும் கி.பி. 1279ல் போரில் ஒருசேர தோற்கடித்தான். அத்துடன் தமிழ்நாட்டில் இருந்த போசளர் ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.[3]

ஆட்சிப்பகுதிகள்

இவனது ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாடு உயர்நிலையில் இருந்தது. வெனிஸ் நாட்டு வழிப்போக்கனான மார்க்கோ போலோ[4] என்பவனும் பெர்சிய நாட்டைச் சார்ந்த இசுலாமிய வரலாற்றாசிரியர் வாசாப்[5] என்பவரும் இவனுடைய காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தனர்.

சோழ நாடு, கொங்கு நாடு, தொண்டை நாடு ஆகிய நாடுகளில் உள்ள பல ஊர்களில் இவன் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. ஆகவே இந்நாடுகள் எல்லாம் இவன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன எனலாம்.[3] இவனுக்கு முன் அரசாண்ட சடையவர்மன் சுந்தரபாண்டியனது ஆட்சியில் பாண்டியப் பேரரசின் கீழ் அடங்கியிருந்த எல்லா நாடுகளும் இவனது ஆட்சிக் காலத்திலும் அங்ஙனமே இருந்தன என்பதில் ஐயமில்லை.[6] எனவே சடையவர்மன் சுந்தர பாண்டியனைப் போலவே இம்மாறவர்மன் குலசேகரபாண்டியனும் எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ குலசேகர பாண்டியன் என வழங்கப்பெற்றான். மேலும் இவன் தன் பேரரசிற்கு உட்பட்டிருந்த நாடுகள் எல்லாம் அமைதியாக இருத்தல் வேண்டித் தன் தம்பிமார்களான மாறவர்மன் விக்கிரம பாண்டியன், சடையவர்மன் குலசேகரபாண்டியன் ஆகியோரை அந்நாடுகளில் அரசப் பிரதிநிதிகளாக இருந்து ஆட்சி செய்து வருமாறு ஏற்பாடு செய்தான்.[6]

குலசேகரன் அரசவையில் தகியுத்தீன் அப்துர் ரகுமான் என்பவர் முதன்மை மந்திரியாக இருந்து ஆட்சிக்கு துணை புரிந்தமைக்காக காயல் பட்டினம், பிடான், மாலி பிடான் என்ற கடலோர நகரங்கள் அளிக்கப்பட்டதாக அப்துல்லா வசாப் எனும் அரபிய வரலாற்றாளர் குறிப்பிட்டுள்ளார்.[7].இந்த காலகட்டத்தில் வருகை புரிந்த பயணி மார்க்கோ போலோ உலகின் புனிதம் வாய்ந்த நகராக குறிப்பிடுகிறார். மணப்பாறையையடுத்த பொன்முச்சந்தி என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலில் இரண்டாம் பாண்டியர் காலத்தைச் சார்ந்த கல்வெட்டில் இவர் கோவிலுக்கு நிலங்களை பரிசாக வழங்கிய வரலாறுகுறிப்பிடப்பட்டுள்ளது.[8]

வீழ்ச்சி

மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மறைவிற்கு பிறகு அவனது இரு மகன்கள் சுந்தர பாண்டியன், வீரபாண்டியன் ஆகியோரிடையே எழுந்த உரிமைச் சண்டையைப் பயன்படுத்தி தில்லி சுல்தான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.

மேற்கோள்கள்

  1. Kunarasa, p.66
  2. Aiyangar, P.58
  3. 3.0 3.1 KA Nilakanta Sastri, p197
  4. Aiyangar, P.65
  5. Aiyangar, p.97
  6. 6.0 6.1 "1.2 பிற்காலப் பாண்டிய மன்னர்கள் CCA 2.0". www.tamilvu.org/. 2020-08-11. பார்க்கப்பட்ட நாள் 2020-08-11.
  7. Prashant More, p.9
  8. மணப்பாறை அருகே கிராமக் கோயிலில் பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு தி இந்து தமிழ் 17 சனவரி 2016

மேற்கோள் நூல்கள்

வெளியிணைப்புகள்