முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்
முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னனாவான். இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக்கொண்டான். மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன்,எம்மண்டலமும் கொண்டருளியவன்,எல்லாம் தலையானான் பெருமாள்,[1] கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன்[2] போன்ற பட்டப்பெயர்களினைப் பெற்றான். இவனது காலத்தில் பாண்டிய நாட்டில் சிறப்பான ஆட்சி நிலவியதாகக் கருதப்படுகின்றது. சித்திரை மாதம் மூல நட்சத்திரத்தில் பிறந்த இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் சிறப்புற்று விளங்கினான் என்பதும் குறிப்பிடத்தக்கது. வரலாற்றில் இறுதிச்சோழ மன்னனாக அறியப்படும் மூன்றாம் இராசேந்திரன் காலத்தில் சோழர் வம்சம் முற்றிலும் அழிந்ததற்கான காரணங்களில் இம்முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனின் சோழ நாட்டுப் படையெடுப்பும் ஒரு முக்கிய காரணம்.[3]
ஆற்றிய போர்கள்
- சேர மன்னன் வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் மீது படையெடுத்து வெற்றி கொண்டான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.[4]
- மூன்றாம் இராசராசன் மகனான மூன்றாம் இராசேந்திரனையும் வென்று திறை செலுத்துமாறு ஆணையிட்டான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
- போசளர் கண்ணனூரினைத் (சமயபுரம்) தம் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த சமயம் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் போசள மன்னனான வீரசோமேசுவரன் என்பவனை தோற்கச்செய்து தண்ட நாயகன் சிங்கணனை கொன்று கண்ணனூரினை மீட்டான்.[5]
- கண்ணனூரில் நடைபெற்ற கொப்பத்துப் போரில் போசாள மன்னன் வீரராம நாதனை தோற்கடித்து அவன் தளபதி சோமன் என்பவனைக் கொன்றான்.[6]
- இலங்கையின் திரிகோணமலையில் ஆட்சி செய்த தம்பர்லிங்கா(தாய்லாந்து) அரசன் சந்திரபானுவின் மீது படையெடுத்து வெற்றி பெற்று யானைகள் மற்றும் மணிகள் அனைத்தினையும் திறையாகப் பெற்றான்.[7]
- பல்லவர்களின் வழித் தோன்றல்களான காடவர் குல மன்னனான கோப்பெருஞ்சிங்கனை போரில் வென்று அவனது தலைநகரான சேந்தமங்கலத்தை முற்றுகையிட்டுக் கைப்பற்றினான்.காடவ மன்னனின் யானை,குதிரை மற்றும் பிற செல்வங்கள் அனைத்தினையும் கவர்ந்து கொண்டு சேந்தமங்கலத்தினை ஆளும் பொறுப்பினைக் கோப்பெருஞ்சிங்கனிடமே அளித்தான்.[8]
- சேலம் மாவட்டத்தின கிழக்கும் தென்னார்க்காட்டின மேற்குப் பகுதிகளுமான மகத நாட்டினை வாணர்களான வாணாதிராசர், வாணகோவரையர் போன்றவர்களிடமிருந்து கைப்பற்றி ஆத்தூர் அருகில் உள்ள அகழியூர - அறகழூரினைத் தலைநகராக்கிப் பின் கொங்கு நாட்டினையும் கைப்பற்றி ஆட்சி புரிந்தான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
- தெலுங்குச் சோழ மன்னனான விசயகண்ட கோபாலனை போரில் கொன்று காஞ்சிமாநகரைக் கைப்பற்றி விசயகண்ட கோபாலனின் தம்பிக்கு ஆட்சிப் பொறுப்பினை அளித்தான். வடநாடு சென்று காகதீய மன்னன் கணபதியைப் போரில் வென்றான். நெல்லூரைக் கைப்பற்றி வீராபிடேகம் செய்துகொண்டான்.
ஆற்றிய கோயில் அறப்பணிகள் - சிதம்பரத்தில் ஆற்றிய பணிகள்
சிதம்பரத்தில் தில்லையம்பதியில் உள்ள திருமால்,சிவன் கோயில்களிற்குத் துலாபார தானங்களை வழங்கினான். தில்லை நடராசப் பெருமானின் கோயில் கோபுரத்திற்குப் பொன்தகடு வேய்ந்து,அங்குள்ள நான்கு ராஜகோபுரங்களில் மேற்குக் கோபுரத்தினைக் கட்டினான் அக்கோபுரமும் சுந்தரபாண்டியன் கோபுரம் எனப் பெயர் பெற்றது.
திருவரங்கத்தில் ஆற்றிய பணிகள்
திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் திருவரங்கம் என அழைக்கப்படும். திருமாலை வணங்கிய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டுள்ள பெருமானின் கோபுரத்தை வேய்ந்து அக்கோயிலிலேயே முடிசூடியும் கொண்டான்.கோயில் பணிகளிற்காக நிலங்களினைக் காணிக்கையாக அளித்து அக்கோயில் இறைவனுக்கு அணிகலன்கள் பலவனவற்றை அளித்தான்.இக்கோயிலில் வடமொழியில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டில் இவனது பணிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.இவன் செய்த பணிகள் காரணமாக "கோயில் பொன் வேய்ந்த பொருள்" என்ற பட்டத்தினைப் பெற்றான்.இவனது படிமங்கள் பல பட்டப்பெயருடன் திருவரங்கத்திலும் பிற இடங்களிலும் அமைக்கப்பட்டன.திங்கள் தோறும் தனது பிறந்தநாளான மூலநாளில் விழா நடத்த ஏற்பாடு செய்யச்சொல்வானெனவும் சித்திரைத் திங்கள் மூலநாளில் திருவானைக்கா திருக்கோயிலில்,"சேரனை வென்றான்" என்ற பெயருடைய திருவிழாவொன்றை நடத்தி வைத்து மூன்று ஊர்களை நிவந்தமாக்கினான் என்பதும் வரலாறு.
காஞ்சிபுரத்தில் ஆற்றிய பணிகள்
தெலுங்குச் சோழனை வென்று காஞ்சி நகரைக் கைப்பற்றிய காரணத்தினால் காஞ்சீபுர வராதீசுவரன்,காஞ்சீபுரங்கொண்டான் போன்ற பட்டங்களினையும் எல்லாந் தலையனானான் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றான். காஞ்சியிலும் வீராபிடேகம் செய்தான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன். கச்சீசுவரர் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் இரண்டிற்கும் திருப்பணிகள் செய்தான்.காஞ்சீபுரம் திருப்புட்குழித் திருமால் கோயிலில் இவனைப் பற்றிய வாழ்த்துப்பா உள்ளது. அப்பாடலில்
“ | "வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி
வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன் வாழ்க மண்டலம் யாவையும் கொண்டவன் வாழ்க சுந்தர பாண்டியன் தென்னனே" |
” |
என இவனைப் பாடப்பட்டுள்ளது.தமிழ்பற்றும்,வட மொழி அறிவும் உடைய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனது கல்வெட்டுக்கள் தமிழகம் முழுவதினிலும் காணலாம்.
மறைவு
இவன் தன் வழிவந்தவனான முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பவனிடம் 1267ல் ஆட்சியை ஒப்படைத்து விட்டு கி.பி. 1271 ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தான் எனபது வரலாறு.[9]
நாணயவியல்
இவனது ஆட்சியில் 7 விதமான பெயர்களுடன் காசுகள் வெளியிடப்பட்டுள்ளன. அவை,
- சுந்தரபாண்டியன்
- வீரபாண்டியன்
- சோணாடு கொண்டான்
- கச்சி வழங்கும் பெருமாள்
- கோதண்டராமன்
- எல்லாம் தலையாயன்
- குலசேகர
இவற்றில் கச்சி வழங்கும் பெருமாள் என்று பெயர் பொறித்த நாணயங்கள் நாணயவியல் தந்தை வால்டர் எலியட் என்பவரால் அவரது நூலில் 145ஆவது படமாக வெளியிடப்பட்டுள்ளது.[10]. பொ.பி. 1260 - 1365க்கும் இடைப்பட்ட காலங்களில் வெளியிடப்பட்ட இவற்றில் கச்சி வழங்கும் பெருமாள் என்று மூன்று வரிகளில் எழுதப்பட்டுளன. மற்றொரு வகைக்காசில் இரு கயல்களுக்கிடையில் சு என்னும் எழுத்தும் காணப்படுகின்றது.[11]
அடுத்து எல்லாம் தலையாயன் என்று பெயர் பொறித்த ஐந்து வகைக்காசுகள் கிடைத்துளன. இப்படி கிடைத்ததை கொண்டு அதிகளவு காசுகளின் வேறுபாடு அறிவதற்காக வேண்டுமென்றே இதைப்போல காசுகள் வெளியிடப்பட்டது என்பதை அறியலாம்.[12]
அடுத்து கோதண்டராமன் என்று பெயர் பொறித்த நாணயங்கள் கிடைத்துளன. கோதண்டராமன் நாண்யங்கள் பற்றி மாற்று கருத்துகள் இருந்த போதிலும்[13] இம்மன்னனின் கல்வெட்டுகளில் இவன் பட்டப்பெயர் கோதண்டராமன் என்றிருப்பதைக் கொண்டு[14] இவை முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் வெளியிடப்பட்டது என்பதை அறியலாம்.
வெளியிணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி, 91-95
- ↑ இக்கட்டுரையின் நாணயவியல் துணையடக்கத்தை பார்க்கவும்
- ↑ http://www.tamilvu.org/courses/diploma/a031/a0314/html/a0314444.htm
- ↑ சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி, 21-25
- ↑ சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி, 26-30
- ↑ சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி, 36-40
- ↑ சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி, 46-50
- ↑ சடையவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தி, 51-55
- ↑ Sethuraman, p124
- ↑ Coins of South India, 1975, plate 4 no.145
- ↑ Ibid, p.101
- ↑ Tamil Coins A study, p.101
- ↑ இராமன் பெயரில் பாண்டியர் காசுகள், தினமலர், 23 மே 1989
- ↑ நம் பேரால் கட்டின கோதண்டராமன் சந்திக்கு, கடலூர் மாவட்ட தீர்த்தநகரி கல்வெட்டு