மூன்றாம் இராசசிம்மன்
மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் கி.பி. 900 முதல் 946 வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். பராந்தக பாண்டியனுக்கும், சேர நாட்டு இளவரசி வானவன்மாதேவிக்கும் மகனான[1] இவன் கி.பி. 900 ஆம் ஆண்டில் முடிசூடிக்கொண்டான். சடையன் மாறன், இராச சிகாமணி, சீகாந்தன், மந்தரகௌரவமேடு போன்ற பட்டங்களினை உடையவனாவான். பிரம்மதேயம், தேவதானம், பள்ளிச்சந்தம் ஆகிய அறச்செயல்களை அதிக அளவில் செய்தவன் என்ற பெருமையினை உடையவனும் ஆவான்.
மூன்றாம் இராசசிம்மன் காலத்துப் பதிவுகள்
- மந்தர கௌரவ மங்கலம் என அழைக்கப்பெற்ற நற்செய்கைப்புத்தூர் என்னும் ஊரை அந்தணர்களுக்குப் பிரமதேயமாக மூன்றாம் இராசசிம்மன் அளித்தான் எனவும் மேலும் இவனது முன்னோர்களின் வரலாறுகள் மற்றும் சிறப்புகளையும் உள்ளடக்கியதாக உள்ளது சின்னமனூர்ச் செப்பேடு.
- முதலாம் பராந்தகச் சோழன் கல்வெட்டு ஒன்றின் படி மூன்றாம் இராசசிம்மன் போரொன்றில் தோற்றதாகவும் முதற் பராந்தகச் சோழன் மதுரைகொண்டான் என்ற பட்டத்தினைப் பெற்றிருந்தான் மேலும் திருவாங்கூர் நாட்டில் உள்ள கல்வெட்டு ஒன்றிலும் இத்தகவல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
- பாண்டிய மன்னனொருவனின் தோல்வியும் சோழ மன்னன் ஒருவனின் வெற்றியினைப் பற்றியும் இரண்டாம் இரண்டாம் பிருதிவிபதியின் கல்வெட்டிலும் உதயேந்திரச் செப்பேட்டிலும் குறிக்கப்பட்டுள்ளது.
மூன்றாம் இராசசிம்மன் ஆற்றிய போர்கள்
- உலப்பிலி மங்கலத்தில் மூன்றாம் இராசசிம்மனிற்குப் பகையாக இருந்தவர்களினை எதிர்த்துப் போர் செய்தான்.
- கொடும்பாளூர் அரசனான பூதி விக்கிரம கேசரியை போரில் மூன்றாம் இராசசிம்மன் வெற்றி பெற்றான்.
- வஞ்சிமாநகரில் பெரும்போர் ஒன்று நிகழ்ந்தது. அங்கு சோழன் ஒருவனை வைப்பூரிலும், நாவற்பதியிலும் வென்று துரத்தினான் மூன்றாம் இராசசிம்மன்.
- கி.பி.910 ஆம் ஆண்டளவில் முதற் பராந்தகச் சோழனுடன் போரிட்டுத் தோல்வியைத் தழுவினான்.
- வெள்ளூரில் சோழ மன்னன் ஒருவனுடன் போர் புரிவதன் பொருட்டு இலங்கை மன்னன் ஐந்தாம் காசிபனிடம் மூன்றாம் இராசசிம்மன் போரிற்குத் தேவையான யானைப் படையினை சக்கசேனாபதியுடன் பெற்றான் ஆனால் இப்போரில் மூன்றாம் இராசசிம்மன் தோல்வியுற்று பாண்டிய நாட்டினை இழந்தான். இதன் காரணமாகப் பாண்டிய நாடு சோழர் வசமானது[1].
மூன்றாம் இராசசிம்மனது இறுதிக் காலம்
வெள்ளூர்ப் போரின் பின்னர் மூன்றாம் இராசசிம்மன் இலங்கையில் சென்று வாழ்ந்தான். பாண்டிய நாட்டினை மீட்டெடுக்கப் பல முயற்சிகள் செய்தும் தோற்றான். ஐந்தாம் காசிபனிடம் பாண்டிய நாட்டின் மதிப்பிற்குரிய சுந்தரமுடியையும், வாள், குடையையும் அளித்துத் தன் தாயான வானவன் மாதேவி பிறந்த சேர நாட்டிற்குச் சென்று தன் இறுதிக் காலத்தினைக் கழித்தான். மூன்றாம் இராசசிம்மன் கி.பி.946 ஆம் ஆண்டில் இறந்தான். பாண்டிய நாடும் இவனது ஆட்சியின் பின்னர் வீழ்ச்சியுற்றது.
சோழப் பேரரசு பாண்டிய நாட்டையும் சேர்த்துக் கொண்டு விரிவாகத் தொடங்கியது. அவ்வப்போது சில பாண்டியர்கள் திடீரென எழுச்சியுற்று சில ஆண்டுகள் பாண்டிய நாட்டு ஆட்சியை கைப்பற்றினாலும் பேரரசு என்னும் நிலையை எட்டவில்லை. சில பாண்டியர் சோழருக்கு கப்பம் கட்டி அவரின் கீழ் பாண்டிய நாட்டை ஆண்டனர். பதிமூன்றாம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி வரை பேரரசு என்ற நிலைமையை பாண்டியர்கள் எட்ட முடியாமல் போனார்கள். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சியில் இருந்து இரண்டாம் பாண்டியப் பேரரசு எழுந்தது.
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "4.2.9 பராந்தக பாண்டியனும் அவனது மகனும் (கி.பி. 885-920)". தமிழ் இணையப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 18 சூலை 2015.