பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
குடுமி என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். கடைச்சங்க காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது. மூத்த குடும்பன் என்பதனால் முதுகுடுமி என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.வழுதி என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.[1] ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி சின்னமனூர் செப்பேடு "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்.பிரளயத்தில் உலகம் அழிந்தது.எங்கும் நீர் சூழ்ந்தது.பூமியில் நிலப்பரப்பு இல்லை.சூரியன் கதிர்கள் பட்டு நிலபரப்பு உருவாகி மனிதவர்க்கம் உருவாக ஆரம்பித்தது. அது, ஒரு பாண்டிய மன்னரான சத்தியவிரத பாண்டியன் மற்றும் சப்தரிஷிகள் மூலிகைகள் என காக்கப்பட்டு பகவான் மச்ச அவதாரம் இன்று இருந்துவரும் இந்து மகா சமுத்திரத்தில் நிகழ்ந்தது.அந்த ஒரு பாண்டியனின் பெயர் சத்யவிரத பாண்டியன். இவனே,பிரளயம் முடிந்து பின்னாளில், 7- வது மநுவாக நியமிக்கப்பட்டார்.
வேள்விக்குடிச் செப்பேட்டில்.
“ | கொல்யானை பலஓட்டிக்
கூடாமன்னர் குழாந்தவிர்த்த பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி |
” |
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி மருதனார் இவனது சிறப்பினைப் பற்றிப் பாடுகையில்
“ | பல்சாலை முதுகுடுமித்
தொல்ஆணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் |
” |
— (759,61,62) |
இவனைப் பற்றிப் புறநானூற்றில் "முதுகுடுமிப் பெருவழுதி ஆற்றல் மிக்க படையோன்;அரசர் பலரையும் புறங்கண்டவன்;புலவர்களுக்கு வேண்டிய அளவு கொடுத்துச் சிறந்தவன்;இரவலர்க்கு இல்லையெனாது ஈயும் பெருங்கொடையான்;வேள்வி பல செய்து புகழ் பெற்றவன்;சிவ பெருமானிடத்து பேரன்பு உடையோன்;பெரியோர்களை மதிப்பவன்" (புறம்-6,9,12,15,64)
காரிக்கிழார் பெருவழுதியைப் பற்றிப் பாடுகையில்
“ | தண்டா ஈகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவும்,தெறுசுடர் ஒண்கதிர் ஞாயிறு போலவும், மன்னிய பெரும! நீ நிலமிசையானே! |
” |
— (புறம்-6) |
நெட்டிமையார் இவனைப் பற்றிப் பாடுகையில்
“ | எம்கோ வாழிய குடுமி-தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த முந்நீர் விழவின் நெடியோன்! |
” |
— (புறம்-9) |
மேலும் இவனைப் பற்றிப் புகழும் பாடல்கள் பின்வருமாறு "விறல் மாண்குடுமி பிறர் மண்கொண்டு பாணர்க்குப் பொன் தாமரையும்,புலவர்க்கு யானையும்,தேரும் பரிசாக நல்கினான்" எனப் புறம்-12 கூறுகின்றது.
நால்வேதங்கூறியாங்கு "வியாச் சிறப்பின் வேள்ளி முற்றச் செய்தான்" எனப் புறம்-15 இல் நெட்டிமையார் கூறுகின்றார். இவ்வரசன் வீரம் செறிந்தவனாக இருந்தான், புலவர்களுக்கும் இரவலர்களுக்கும் இல்லை என்னாது கொடுத்த வள்ளன்மை கொண்டவன், சிவபெருமானிடம் பேரன்பு பூண்டவன் எனத் தெரிகின்றது. சங்க காலத்துப் புலவர்கள் காரிக்கிழார், பெண்பாற் புலவர் நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் முதலியோர் இவ்வரசனைப் பாடியுள்ளார்கள்.
இவ்வரசன் போருக்குப் போகும் முன் முதலில் போரில் பங்கு கொள்ளாதவர்களை விலகச் செய்த பின் தான் அறப்போர் செய்யத் துவங்குவான் என்பது இவன் புகழ். நெட்டிமையார் பாடலில் கீழ்க்காணுமாறு கூறுகின்றார்:
“ | ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெணிட்ரும், பிணியுடை யீரும் பேணித் தென்புலம் வாழ்நர்க்கு அருங்க்டன் இறுக்கும் பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும் எம்அம்பு கடிவிடுதும், நும் அரண சேர்மின் என" "அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின் கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும் எங்கோ, வாழிய குடுமி! தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த, முந்நீர் விழவின், நெடியோன் நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே |
” |
பாண்டியன் பல்யாகசாலை முதுமுடுமிப் பெருவழுதி
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவர்.
காலநிரல்
இவனது வரலாற்றைத் திரட்டிப் பார்க்கும்போது காலநிரல் ஒன்று தெளிவாகிறது.
- பல்சாலை முதுகுடுமிப் பெருவழுதி
- நிலந்தரு திருவின் நெடியோன்
- தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
வழுதி 5 பேர்
வழுதி என்னும் பெயர் பூண்ட பாண்டிய அரசர்கள் நான்கு பேர்.
அவர்களும் அவர்களைப் பற்றிப் பாடப்பட்ட புறநானூற்றுப் பாடல்களும் இவை.
- வழுதி – கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி - 3
- வழுதி – கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி - 21
- வழுதி – கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி – 51, 52,
- வழுதி – பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி – 12, 15, 9, 6, 64,
- வழுதி - கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி.
வழுதிக்கு அறிவுரை
‘தண்டா ஈகைத் தகைமாண் வழுதி’ எனப் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போற்றப்படுகிறார். இவரது வெற்றிகளைப் பாராட்டிய காரிகிழார் இவருக்குக் கூறும் அறிவுரைகள் எண்ணத்தக்கன.
- ஞமன் என்னும் யமனின் தெரிகோல் போல் ஒருதிறம் சாயாமல் நடுவுநிலைமையைக் கைக்கொள்க.
- நன்கலம் பரிசில் மாக்கட்கு வரிசையுடன் நல்குக.
- சிவன் திருவிழாக் காலத்தில் தெருவில் உலா வரும்போது உன் குடை பணியட்டும்.
- நான்மறை முனிவர் கையேந்தும்போது நீ தலை வணங்குக.
- பகைவர் நாட்டைச் சுடும் புகையில் நின் மாலை வாடுக.
- மகளிர் கண்ணீர் வடிக்கும்போது உன் சினம் ஓடி மறைக [2]
போரில் அறத்தாறு கடைப்பிடித்தவன்
போரில் அறத்தாற்றைக் கடைப்பிடித்தவன் இந்தப் பாண்டியன்
'போர் தொடுக்கப்போகிறேன். ஆனிரை, ஆனிரை போன்ற இயல்புடைய பார்ப்பன மாக்கள், பெண்டிர், பிணியுடையவர், மக்கட்செல்வம் இல்லாதவர், ஆகியோர் பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள்' என முன்கூட்டியே அறிவித்தல் போர்அறம்.
இப்படிப்பட்ட அறநெறியாளன், கடலில் விழாக் கொண்டாடிய நெடியோன் நாட்டில் பாயும் பஃறுளி ஆற்று மணலைக்காட்டிலும் பல்லாண்டு வாழ்க.[3]
வெற்றித்தூணும் வேள்வித்தூணும் நாட்டியவன்
நின்னோடு போரிட்டுத் தோற்றவர் பலரா? (அப்போது நீ நாட்டிய வெற்றித்தூண் பலவா?)
அல்லது நால்வேத நெறியில் நெய் ஊற்றிச் செய்த வேள்விக்காக நட்ட தூண் பலவா?
யா பல என வினவி அவனது ஆட்சியைப் படம்பிடிக்கிறார்.[4]
போர்க்களத்திலும் கொடை வழங்குபவன்
குடுமிக்கோமான் போர்களத்தில் இருக்கும்போதும் விறலியர்க்குக் கொடை வழங்கும் பண்புள்ளவன்.[5]
புலவர்களைப் புணர்கூட்டு என்னும் பெயரில் கூட்டிச் சங்கம் நிறுவியவன்.
நிலந்தரு திருவின் நெடியோன் என்னும் பாண்டியன் தொல்லாணை நல்லாசிரியர்களைக் கூட்டி புலவர்களின் புணர்கூட்டு(சங்கம்) என்னும் நல்வேள்வி செய்தான். இதில் கூட்டப்பட்ட நல்லாசிரியர்கள் பல்சாலை முதுகுடுமியால் முன்பே ஒருங்கிணையக் கூட்டப்பட்டவர்கள்.[6]
அடிக்குறிப்பு
- ↑ பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி் - தமிழ் இணையக் கல்விக் கழகம்
- ↑ காரிகிழார் – புறம் 6
- ↑ நெட்டிமையார் – புறம் 9
- ↑ நெட்டிமையார் புறம் 15
- ↑ நெடும்பல்லியத்தனார் – புறம் 64
- ↑ பல்சாலை முதுகுடுமியின் நல்வேள்வித் துறை போகிய தொல்லாணை நல்லாசிரியர் புணர்கூட்டுண்ட புகழ்சால் சிறப்பின் நிலந்தரு திருவின் நெடியோன் போலத் (தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் விளங்கினானாம். மாங்குடி மருதனார் - மதுரைக்காஞ்சி 759-765