இராசம்மா பூபாலன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ராசம்மா பூபாலன் Rasammah Bhupalan 拉斯阿妈 |
---|---|
பிறந்ததிகதி | 1 மே 1927 |
பிறந்தஇடம் | மலேசியா ஈப்போ, பேராக் |
பணி | சமூக நலவாதி |
தேசியம் | மலேசியர் |
கல்வி | மலாயாப் பல்கலைக்கழகம் (சிங்கப்பூர்) |
பணியகம் | மலேசியக் கல்வியமைச்சு |
அறியப்படுவது | மலேசியப் பெண்ணுரிமை போராட்டவாதி, ஜான்சி ராணி படை போராளி, இந்திய விடுதலை போராளி, மலேசியக் கல்வியாளர், போதைப் பொருள் ஒழிப்பாளர், மலாயா கூட்டரசு ஆசிரியைகள் சங்க நிறுவனர் (1960), உலக ஆசிரியர்கள் சம்மேளனத்தின் ஆசியப் பிரதிநிதி |
துணைவர் | ராஜேந்திரன் பூபாலன் |
ராசம்மா பூபாலன், (மலாய்: Rasammah Bhupalan, சீனம்: 拉斯阿妈,, பிறப்பு: 1927) என்பவர் மலேசிய விடுதலைப் போராளி[1], மலேசியப் பெண்ணுரிமை போராட்டவாதி, ஜான்சி ராணி படைப் போராளி[2], மலேசிய சமூக சேவகி, கல்வியாளர். 1943-இல் நேதாஜி தொடங்கிய இந்திய தேசிய ராணுவத்தின் ஜான்சி ராணி படையில் இணைந்து இரண்டாம் உலகப்போரின் பர்மா போரில் சேவை செய்தவர்[3].
இந்திய-மியான்மார் எல்லையில் பிரித்தானியர்களின் விமானத் தாக்குதல்களில் இருந்து உயிர் பிழைத்து வந்தவர். ராசம்மா பூபாலன் மலேசிய ஆசிரியைகளுக்காக ஒரு தேசிய சங்கத்தை உருவாக்கியவர். அவர்களின் சம ஊதியத்துக்காகப் போராட்டம் நடத்தி வெற்றியும் பெற்றவர்[4].
வாழ்க்கைப் பின்னணி
ராசம்மா பூபாலன் ஒரு நடுத்தர வர்க்க இலங்கைத் தமிழர் பாரம்பரியக் குடும்பத்தில் பிறந்தவர். ஓர் அடக்கமான மிதவாதக் குடும்பப் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப பெற்றோருக்கு அடங்கிய பிள்ளையாக தன் இளவயதுக் கல்வியைத் தொடர்ந்தார். பிற மலேசியர்களைப் போலவே சப்பானியர் காலத்து அடக்கு முறைகளினால் ராசம்மா பூபாலனின் குடும்பமும் பாதிக்கப்பட்டது.
1942இல் இந்திய தேசிய இயக்கம் விடுதலை கோரி எழுந்தபோது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உலக இந்தியர்கள் அனைவரின் மனங்களிலும் இந்திய விடுதலைப் போராட்ட உணர்வுகளைக் கொந்தளிக்கச் செய்தார்.
ஜான்சி ராணிப் படையில்
அந்த உணர்வுகள் ஈப்போவில் ஒரு சாதாரண நடுத்தரக் குடும்பத்தில் வாழ்ந்து கொண்டிருந்த இரண்டு இளம் சகோதரிகளையும் பாதித்தன. அந்தப் பாதிப்புத் தன்மையைத் தாளமுடியாமல் ராசம்மாவும் அவருடைய சகோதரி பொன்னம்மாவும் ஜான்சி ராணிப் படையில் சேர்ந்தனர். பயிற்சிகளையும் பெறறனர்[5].
அடிப்படைப் பயிற்சியை மலாயாவிலேயே முடித்தனர். பின்னர், இந்திய விடுதலைக்காக பிரித்தானிய இராணுவத்துக்கு எதிராகப் போரிட அவர்கள் ரங்கூனுக்கு தொடருந்து மார்க்கமாக அனுப்பப்பட்டனர். சயாம் மரண ரயில்வேயின் வழியாகப் பிரயாணம் செய்த அனுபவத்தைத் தனது வாழ்க்கை வரலாற்று நூலில் ராசம்மா பூபாலன் பதிவு செய்து இருக்கிறார் [6].
அந்தப் பிரயாணத்தின் இறுதியில் ரங்கூனை அடைந்தனர். அங்கு அடர்ந்த காடுகளின் மத்தியில் கூடாரம் அமைத்து இந்திய எல்லைக்குச் செல்லத் தயாராக இருந்தனர்.
மியான்மார் காடுகளில் இன்னல்கள்
ஆனால் பிரித்தானியரின் தாக்குதல்களில் இந்திய தேசிய ராணுவம் பல சேதங்களை அடைந்தது. ஜான்சி ராணிப் படையினரால் முன்னேற முடியவில்லை. அதன் பின்னர் ஒரு சில வாரங்கள் அங்கேயே தங்கினர். மியான்மார் காடுகளில் பல வேதனைகளை அவர் எதிர்நோக்கினார். பல இன்னல்களுக்கு பிறகு மலாயாவுக்கே திருப்பி அனுப்பப் பட்டார்.[7]
ஜான்சி ராணி படையில் கிடைத்த அனுபவங்கள் ராசம்மாவின் பிற்கால வாழ்க்கைக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தன. இரண்டாம் உலகப் போரில் சப்பானியர்கள் தோல்வியுற்றனர். மலாயாவிலிருந்து வெளியேறினர். பிரித்தானிய ஆட்சியில் வழக்கநிலை வந்தது. பிறகு ராசம்மா தனது இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார்.
கல்வி
1955-ஆம் ஆண்டு மலாயாப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து வரலாற்றுத் துறையில் பட்டமும் பெற்றார். அப்போது மலாயாப் பல்கலைக்கழகம் சிங்கப்பூரில் இயங்கி வந்தது. பினாங்கு மெதடிஸ்ட் பள்ளியில் ஆசிரியர் பணியில் நியமிக்கப்பட்டார். ஆசிரியர் பணியில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து கோலாலம்பூர் மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளியின் தலைமை ஆசிரியையாகப் பதவி உயர்வு பெற்றார்.
பெண்களுக்குச் சம சம்பளப் போராட்டம்
மலேசியக் கல்வித் துறையில் ஆண் ஆசிரியர்களுக்கும் பெண் ஆசிரியைகளுக்கும் ஊதியம் சமமாக இல்லை என்பது குறித்து ராசம்மா ஆசிரியர் சங்கங்களின் மூலமாகக் கேள்விகள் எழுப்பினார். நீண்ட காலமாகியும் அதற்குச் சரியான தீர்வு கிடைக்கவில்லை.
ஆகவே ராசம்மா ஆசிரியைகளுக்கான தேசிய சங்கம் ஒன்றினை அமைத்தார்[8]. நாடு முழுவதும் சுற்றி அதற்கான ஆதரவைத் திரட்டினார். சில ஆண்டுகள் தீவிரமான முயற்சிக்குப் பிறகு ஆசிரியர்களுக்கும் ஆசிரியைகளுக்கும் சரிசமமான சம்பளம் கொடுக்க மலேசிய அரசு ஒப்புக்கொண்டது[9].
கோலாலம்பூர் மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளி
ராசம்மாவின் பொது வாழ்க்கையில் இதுவே சிகரம் என்றாலும் தமது பிற்கால வாழ்க்கையில் அவர் வேறு பல துறைகளிலும் தம் கவனத்தைச் செலுத்தி சேவைகள் புரிந்து இருக்கிறார். கோலாலம்பூர் மெதடிஸ்ட் ஆங்கிலப் பள்ளியை மலேசியாவிலேயே தலை சிறந்த பள்ளியாக உருவாக்கிக் காட்டியதும் அவருடைய ஆக்ககரமான செயல்முறைகளில் ஒன்றாகும்.
அது மட்டும் அல்ல. கல்விப் பணியாளர்களின் உலக சம்மேளனத்தில் அவர் செயற்குழு உறுப்பினராகவும் இருந்து இருக்கிறார். 1963-இல் ராசம்மாவின் முயற்சியில் மகளிர் சங்கங்களின் தேசிய மன்றம் ஒன்றும் அமைந்தது. அதன்அமைப்புக் குழுவில் தலைவராகப் பொறுப்பேற்றார். பின் சங்கம் பதிவு பெற்ற போது அதன் செயலாளராகவும் பணியாற்றினார்.
வாழ்க்கை வரலாற்று நூல்
சாரணியர் இயக்கத்திலும் அவர் தலைமைப் பொறுப்புகள் வகித்து இருக்கிறார். உலகின் ஏராளமான நாடுகளில் அவர் மலேசியாவைப் பிரதிநிதித்து இருக்கிறார். ராசம்மா பூபாலன், தம்முடைய 90 வயதிலும், அரச மலேசிய போதைப் பொருள் ஒழிப்பு சங்கத்தில் முக்கிய அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார்[10].
ராசம்மா பூபாலனைப் பற்றி Footprints on The Sands of Time, Rasammah Bhupalan: A Life of Purpose எனும் வாழ்க்கை வரலாற்று நூல் 2006 நவம்பர் 21ஆம் தேதி மலேசியக் கலை கலாசார, சுற்றுலாத்துறை அமைச்சர் டத்தோ டாக்டர் ராயிஸ் யாத்திம் வெளியிட்டார்.
அந்த நூலை மலாயாப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியர் டாக்டர் அருணா கோபிநாத் என்பவர் எழுதியுள்ளார். இந்த நூல் வெளியிடப்படுவதற்கான செலவுத் தொகையை தேசிய ஆவணக் காப்பகம், மலேசியக் கலை பண்பாடு, சுற்றுலாத்துறை அமைச்சு, தேசிய இளம் கிறித்தவப் பெண்கள் ஆகிய அமைப்புகள் ஏற்றுக் கொண்டன.
சாதனைகள்
- மலாயாக் கூட்டரசு பெண் ஆசிரியர்கள் சங்கம்: நிறுவனர், தலைவர் (1960).[11]
- மலாயா ஆசிரியர் தேசிய காங்கிரஸ்: பொதுச் செயலாளர்.
- கல்விப் பணியாளர்களின் உலகச் சம்மேளனம்: செயற்குழு உறுப்பினர்.[12]
- மலேசிய மெதடிஸ்ட் கல்லூரி: நிறுவனர், தலைவர் (1983).[13]
- மலேசிய அரசாங்கத்தின் ‘ஆசிரிய ஞானி’ (Tokoh Guru) விருது (1986).[14]
- பெண்கள் சங்கங்களின் தேசிய மன்றம் National Council of Women’s Organisations (NCWO): முதல் பொதுச் செயலாளர்.[15]
- பெண்களுக்கான சட்ட, மனித உரிமை அமைப்புகளின் தேசிய மன்றம் (National Council of Women’s Organisations’ Law and Human Rights Commission): தலைவர்
- கோலாலம்பூர் இளம் கிறித்தவப் பெண்கள் அமைப்பின் தலைவர்
- மெதடிஸ்ட் கல்வி அறவாரியம்: நிர்வாகி
பொது
மலேசிய தேசிய விடுதலைக்காக ராசம்மா ஆற்றிய அரிய சேவைகள் கவனிக்கப்படவில்லை.[16] அவற்றிற்கு முறையான அங்கீகாரங்கள் வழங்கப்படவில்லை எனும் பரவலான கருத்தும் மலேசியர்களிடையே நிலவி வருகிறது. இதைப்பற்றி மலேசிய ஆங்கில நாளேடு ஒரு செய்தியையும் வெளியிட்டுள்ளது.[17]
2009 ஆகஸ்டு 18ஆம் தேதி மலேசியாவுக்கான இந்தியத் தூதரகம் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட மலேசிய இந்தியர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்பித்தது. அந்தக் கௌரவிப்பில் இராசம்மா பூபாலனும் ஒருவராகச் சிறப்பிக்கப்பட்டார்[18].
மேற்கோள்கள்
- ↑ Ministry in search of remarkable Malaysians. Footprints on The Sands of Time, Rasammah Bhupalan: A Life of Purpose by Associate Professor Dr Aruna Gopinath.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Mrs F.R. Bhupalan joined the Rani of Jhansi regiment, the women's wing of the Indian National Army, to fight the British.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Indian National Army – Rasammah_Bhupalan.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ A community leader who contributed to getting equal pay for women; tireless social welfare activist; articulate champion of women’s causes.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Datuk Rasammah Bhupalan dalam memperjuangkan semangat kemerdekaan mula berputik apabila beliau menyertai rejimen Jhansi Rani." இம் மூலத்தில் இருந்து 2011-11-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111103084226/http://gambargambarpelik.blogspot.com/2010/08/berjuang-tanpa-mengira-kaum.html/.
- ↑ Footprints on the Sands of Time – 2006.
- ↑ ரெ.கார்த்திகேசுவின் கோபுர மலேசியர்கள் - ரெகா அஞ்சல் நெட்.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "She was founder president of the Women Teachers Union of the Federation of Malaya in 1960." இம் மூலத்தில் இருந்து 2012-01-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120118013604/http://allmalaysia.info/2011/03/08/100-memorable-malaysian-women/.
- ↑ From girl soldier to woman warrior[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ She was also very active in the National Council of Women’s Organisation (NCWO) and Pemadam.
- ↑ The Straits Times, 13 March 1960, Page 5.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Education International (EI-IE) is a global union federation of teachers' trade unions.
- ↑ Methodist College Kuala Lumpur (MCKL) was founded in January 1983. The Founder Principal was Mrs. F R Bhupalan.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ Tokoh Guru Malaysia – Pn. Rasammah Naomi Bhupalan-Rajendran.
- ↑ The National Council of Women’s Organisations Malaysia (NCWO) was officially established on 25th August 1963.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "Cry of the silent millions goes unheeded." இம் மூலத்தில் இருந்து 2012-01-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120121111213/http://national-express-malaysia.blogspot.com/2011_09_03_archive.html#4560359372164792912/.
- ↑ Unsung heroes’ stories told[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ In remembrance of Netaji Subhas Chandra Bose and to honour the veterans of the Indian National Army (INA), the High Commission of India and Netaji Service Centre have jointly organized a felicitation function for the INA veterans in Malaysia on Tuesday, 18 August 2009
வெளி இணைப்புகள்
- Ministry in search of remarkable Malaysians பரணிடப்பட்டது 2011-06-08 at the வந்தவழி இயந்திரம், The Star, November 22, 2006
- Mothers of substance பரணிடப்பட்டது 2011-05-21 at the வந்தவழி இயந்திரம், The Star, August 20, 2007.
- They dared to take up public office பரணிடப்பட்டது 2011-05-21 at the வந்தவழி இயந்திரம், The Star, August 20, 2007.