ஹொங்கொங் தமிழர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ஹொங்கொங் தமிழர் அல்லது ஹாங்காங் தமிழர் என்போர் ஹொங்கொங்கில் நிரந்தர வதிவிட உரிமை பெற்று வாழ்ந்து வரும் தமிழர்கள் ஆவர். ஹொங்கொங் வாழ் தமிழர்களின் எண்ணிக்கைத் தொடர்பான சரியான புள்ளிவிபர அறிக்கைகளோ பதிவுகளோ எதுவும் இல்லை. ஆனால் கிட்டத்தட்ட 2000 பேர் இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இவர்களில் பெருமான்மையானோர் தமிழகத்தை தாயகமாகக் கொண்டவர்களாவர். இருப்பினும் இவர்கள் அனைவரும் தமிழகத்தில் இருந்தே ஹொங்கொங் வந்தவர்கள் அல்லர். பர்மா, வியட்நாம், மலேசியா போன்ற நாடுகளில் இருந்தும் வந்துள்ளனர். இலங்கையில் இருந்து வந்தவர்களும் உள்ளனர். இவர்களால் உருவாக்கப்பட்ட ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் 1967 ஆம் ஆண்டில் இருந்தே இயங்கி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஹொங்கொங் தமிழர் வரலாறு

ஹொங்கொங் நாட்டிற்கும் தமிழருக்குமான உறவு எத்தனையாம் ஆண்டு முதல் இருந்து வருகின்றது என்பது தொடர்பான சரியான சான்றுகள் எதுவும் இல்லை. ஹொங்கொங் பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளில் ஒன்றாக இருந்தப் பொழுது; ஹொங்கொங் விக்டோரியா துறைமுகம் தென்சீனாவிற்கு உட்புகும் முத்து ஆற்றின் முகத்துவாரமாகவும், ஆசிய நாடுகளுக்கான வணிக மையமாகவும் பிரசித்திப்பெற்று விளங்கியதால், மிகவும் பரப்பான ஒரு துறைமுகமாக பிரசித்துப்பெற்றிருந்தது. அத்துடன் பல்வேறு கடல் வழி பிரயானம் செய்வோருக்கான மையமாகவும், இடை தங்குமிடமாகவும் ஹொங்கொங் விக்டோரியா துறைமுகம் விளங்கியது. அப்பொழுது ஹொங்கொங்கில் விமான சேவை இருக்கவில்லை.

முதல் தமிழர் வருகை

அக்காலத்தில் கடல் வழி கப்பல் பயணங்களை மேற்கோண்டோரில் சில தமிழர்களும் ஹொங்கொங் வந்து சென்றதற்கான தகவல்கள் உள்ளன. ஆனால் அதற்கான சான்றுகள் எதுவும் இல்லை. குறிப்பாக பர்மாவில் வசித்தவரும் தமிழகத்தை தாயகமாகக்a கொண்டவருமான ஏ. கே. செட்டியார் எனும் பிரசித்திப்பெற்ற தமிழர், 1938 ஆம் ஆண்டு ஜப்பான் செல்லும் தமது கப்பல் பயனத்தின் பொழுது இடைத் தங்குமிடமாக ஹொங்கொங் வந்துச் சென்றதற்கான தகவல்கள் உள்ளன. ஏ. கே. செட்டியார் பர்மாவில் வெளியாகிய தனவணிகன் எனும் வார இதழின் பதிப்பாசிரியரும் நடத்துனரும் ஆவார். 1940 மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படத்தை, மகாத்மா காந்தி வாழ் நாட்களிலேயெ எடுத்தவரும் ஆவார்.[1] [2] [3] இதுவே குறிப்பிடும் படியான ஹொங்கொங் வந்த முதல் தமிழர் எனும் தகவலாக உள்ளது. இதனைத் தவிர அக்காலப்பகுதியில் ஹொங்கொங்கில் இந்தியன் வங்கி அதிகாரிகளாகவும் ஊழியர்களாகவும் பல தமிழர்கள் பணிப்புரிந்தனர் எனும் தகவல்கள் உள்ளன. அவைத்தொடர்பான சான்றுகள் எதுவும் இதுவரைக் கிடைக்கப்பெறவில்லை.

முதல் தமிழர் நிறுவனம்

1954 ஆம் ஆண்டு எம். ஜே. எம். மொஹிதீன் மற்றும் அவர் சகோதரரான ஜே. எம் இஸ்மாயில் எனும் இருவர் ஹொங்கொங் வந்து சாலிமார் நிறுவனம் எனும் பெயரில் ஒரு நிறுவனத்ததை திறந்துள்ளனர். இதுவே ஹொங்கொங் வரலாற்றில் முதல் தமிழரின் நிறுவனமாகும். அத்துடன் கபே டிஸ்யூம் எனும் பெயரில் ஒரு உணவகமும் திறந்துள்ளனர். இதுவே முதல் தமிழர் உணவகமுமாகும். இவர்கள் தமிழகத்தில் கூத்தா நல்லூர் எனும் இடத்தைச் சேர்ந்தவர்கள் எனிலும், வியட்நாமில் இருந்தே ஹொங்கொங் வந்தவர்கள். அதனடிப்படையில் ஹொங்கொங் வந்த முதல் தமிழர்கள் என்று பார்த்தால், அவர்கள் வியட்நாமில் இருந்து வந்தடைந்தவர்களே ஆகும். அக்காலப்பகுதியில் வியட்நாமில் நடைபெற்ற எழுச்சிப் போராட்டத்தில் தமிழர் பலர் வியட்நாமில் கொல்லப்பட்டுள்ளனர். பலரது சொத்து பரிமுதல் செய்யப்பட்டுள்ளது. அப்போது ஹொங்கொங் வந்தடைந்த தமிழர்கள் சிலர் உள்ளனர். அவ்வாறு வியட்நாமில் இருந்து வந்தவர்களில் ஒருவரே தற்போது ஹொங்கொங் தமிழர் சமூகத்தின் மூத்தப் பிரமுகர் என அழைக்கப்படும் திரு. செல்வக்கனி முஹம்மது யூனூஸ் என்பவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.[4] அதன் பின் பர்மா வில் இருந்து சில தமிழர்கள் ஹொங்கொங் வந்துள்ளனர். ஆனால் இதற்கு முன்பாகவே இலங்கையில் இருந்து சில தமிழ் மாணிக்கக் கற்கள் வணிகர்களான ஹாஜி. காரிம், ஹாஜி. குஹாபா போன்றோர் ஹொங்கொங் வந்தடைந்திருந்தனர். 1955 ஆம் ஆண்டு எல். எம். ஷா என்பவர்...

முதல் தமிழகத் தமிழர்

1956 ஆம் ஆண்டு தமிழ்நாடு, கீழக்கரை எனும் பகுதியில் இருந்து பீ. எஸ். அப்துல் ரஹ்மான் என்பவரே நேரடியாக தமிழ்நாட்டில் இருந்து ஹொங்கொங் வந்தவராவர். இவர் மாணிக்கக் கற்கள் வணிக நோக்கில் ஹொங்கொங் வந்தவராவர். அதே ஆண்டு தமிழகம், காயல்பட்டினம் எனும் இடத்தில் இருந்தும் சிலர் வந்துள்ளனர். அவர்களில் முதல் வந்தடைந்தவர்களின் பெயர்கள்; விளக்கு லெப்பை காக்கா, சுலைமான், காசிம், ஆவை அமீட், சுகூர் போன்றவர்களாகும்.

எவ்வாறு நிரந்தர வதிவிட உரிமை கிடைக்கப்பெற்றது

ஹொங்கொங் தமிழர்கள் எவ்வாறு வதிவிட உரிமை பெற்றனர் என்றால், அப்பொழுதிருந்த பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளின் அரசியல் அமைப்பையும் அதன் கொள்கைகளையும் சற்று பார்க்கவேண்டும். பிரித்தானியர் ஹொங்கொங்கை கைப்பற்றுவதற்கு காரணியாய் அமைந்த முதலாம் அபின் போரின் போது பிரித்தானியர் "பட்டான்" எனும் இந்தியப் படையணிகளையும், நேப்பாள் "குர்கா" படையணிகளையும் பயன்படுத்தியிருந்தனர். போரின் வெற்றியைத் தொடர்ந்து அவர்களில் பலர் ஹொங்கொங் நாட்டிலேயே வசிக்கலாயினர். இப்படையணிகளில் எவருமே தமிழர்களோ, தென்னிந்தியர்களோ இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்கு வந்த ஹொங்கொங் நிலப்பரப்பின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு பல்வேறு துறைச்சார்ந்த பணியாளர்கள் தேவைப்பட்டனர். பிரித்தானிய முடிக்குரிய குடியேற்றநாடுகளில் இருந்து எவரும் ஹொங்கொங் வந்து எவ்விதச் சிக்கலுமின்றி பணிப்புரியக் கூடியதாக இருந்தது. ஹொங்கொங் வந்தடைந்தவுடன் உள்நுழைவு அனுமதி கிடைத்துவிடும். அந்த உள்நுழைவு அனுமதி படிவத்தை ஹொங்கொங் குடிவரவு திணைக்களத்தில் காட்டினால் தமது தொழில் தொடர்பான ஒரு அடையாள அட்டை உடனடியாகவே கிடைத்துவிடும். இந்த அடையாள அட்டை தொழிலுக்கானதாகவோ, வதிவிட உரிமை தொடர்பானதாகவோ இருக்கவில்லை. அதாவது எந்தக்கட்டுப்பாடுகளையும் கொண்டதாக இருக்கவில்லை.[5] இச்சட்டம் 1962 வரையிருந்தது. அடையாள அட்டை பெற்ற ஒருவர் ஹொங்கொங்கில் எவ்வளவு காலம் விரும்பினாலும் வேலை செய்யலாம். நாடு செல்வோர் மீண்டும் திரும்பிவந்து தமது அடையாள அட்டையைக் காட்டி விட்டு வேலையைத் தொடரலாம் அல்லது வேறு வேலையை தேடிக்கொள்ளலாம். இந்தியா ஒரு மனிதவளம் மிக்க நாடாகும். எனவே இந்தியாவில் இருந்து பல்வேறு துறைச்சார்ந்தோரையும் ஹொங்கொங் பிரித்தானிய அரசு எடுபித்து பணிகளில் அமர்த்தியது. அதேசமயம் ஹொங்கொங் வணிக மையமாக திகழ்ந்ததுடன், அதன் வளர்ச்சி போக்கு உலகின் பலப்பாகங்களில் இருந்தம் வணிகர்களை ஈர்த்தது. உலகின் பலப்பாகங்களில் இருந்தும் வந்த வணிகர்கள் தமது முதலீடுகளை இட்டு பல்வேறு வணிகங்களைத் தொடங்கினர். இவ்வாறான பின்னணியில் தான் ஹொங்கொங் வந்தடைந்த முதல் தமிழரின் வருகையும், அதனைத் தொடர்ந்த வந்தடைந்தவர்களின் வருகையும் அமைகின்றது. ஹொங்கொங் வந்திருந்தவர்கள் எவரும் ஹொங்கொங்கை தமது வாழ்விட நாடாக கருதி வசிக்கவில்லை. தமது பணித்தொடர்பில் இருப்பதும் விடுமுறையின் போது தாயகம் சென்றுவிடுவதும், விடுமுறை முடிந்தவுடன் மீண்டும் வந்து பணியில் அமர்வதுமாகவே இருந்துள்ளனர். வணிகர்களும் அவ்வாறே இருந்துள்ளனர். தொடர்ச்சியாக குடும்பத்துடன் ஹொங்கொங்கை வாழ்விடமாகக் கொண்டு வசித்த தமிழர்கள் எவரும் இருக்கவில்லை.

ஹொங்கொங்கின் திறந்தப் பொருளாதாரக் கொள்கையினால் உலகின் பல்துறைச் சார்ந்த வணிகவியலாளர்களின் முதலீடு ஹொங்கொங்கில் பெருகியது. உலகின் பலப்பாகங்களில் இருந்தும் அதிகமான மக்கள் வெவ்வேறு பணிகளிற்காகவும் ஹொங்கொங் வந்தடைந்தனர். அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஐரோப்பா உட்பட ஆசிய நாடுகள் என பல வணிகரின் முதலீடுகளுமே ஹொங்கொங்கின் முன்னேற்றத்திற்கு காரணாமானது. அதனை தொடர்ந்து தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியாக 1969 ஆம் ஆண்டு ஹொங்கொங்கில் 7 ஆண்டுகள் வீசா அனுமதியுடன் வசிப்போருக்கு நிரந்த வதிவுரிமை வழங்கும் சட்டமே உருவானது. இருப்பினும் இச்சட்டம் 1971 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.[6] இச்சட்டத்தின் படி ஹொங்கொங்கில் நிரந்தர வதிவுரிமை பெற்றோர் ஆரம்பத்தில் ஒரு சிறிய தொகையினராகவே இருந்துள்ளனர்.

உணவகப் பணியாளர்களாக தமிழர்கள் வருகை

அதன்பின் அதிகமான தமிழர்கள் ஹொங்கொங் வந்தடைவதற்கு காரணியான இன்னுமொரு பின்னணி நிகழ்வும் உள்ளது. அதாவது தமிழகத் தமிழர்கள் பலர் மலேசியாவில் உணவகத் தொழிலாளர்களாகவும், சமையல் தொழிலார்களாகவும் பணிப்புரிந்துள்ளனர். அவர்கள் பணிப்புரிந்த ஒரு உணவகம் பனானா லீப் நிறுவனமாகும். இது ஒரு மலேசியரினின் நிறுவனமாகும். மலேசியாவில் பல கிளைக்களைக் கொண்ட இந்நிறுவனத்தின் பார்வை ஹொங்கொங் பக்கமும் திரும்பியுள்ளது. இந்நிறுவனம் ஹொங்கொங்கில் பல கிளைகளை நிறுவியது. இவற்றில் மலேசிய உணவுகள் இருந்தாலும், தென்னிந்திய உணவுகளுக்கே பிரசித்திப்பெற்றது. (குறிப்பாக தமிழர் உணவுகள்) எனவே மலேசியாவில் வீசா அற்று களவாக பணிப்புரிந்த பலருக்கு இது வாய்ப்பானது. அந்நிறுவனத்தின் உரிமையாளரின் அறிவுருத்தலின் படி பலர் இந்தியா திரும்பியுள்ளனர். இந்தியா சென்ற அவர்கள் புதியக் கடவுச்சீட்டுகளில் ஊடாக ஹொங்கொங் வந்தடைந்தனர். அவ்வாறு வந்தடைந்தவர்களின் உண்மையானப் பெயர்கள் மறைக்கப்பட்டு போலிப்பெயர்களின் ஹொங்கொங் இறங்கினர். எடுத்துக்காட்டாக: குப்புசாமி - சந்திரசேகர் ஆனார், குமாரசாமி - ரகுவரன் ஆனார். இவ்வாரு வந்தடைந்தவர்கள் நூற்றுக்கணக்கானோர்களாகும். இவர்களின் வருகையைத் தொடர்ந்து அவர்களின் உறவினர்களும் அவ்வாறே வந்தடைந்தனர். இவர்கள் வீசா அனுமதியுடன் 7 ஆண்டுகள் ஹொங்கொங்கில் வசித்ததால் இவர்களுக்கும் ஹொங்கொங் நிரந்தர வதிவுரிமை கிடைக்கப்பெற்றது. இன்றும் ஹொங்கொங்கில் நிரந்தர வதிவுரிமை பெற்று வசிக்கும் தமிழர்களில் அதிகமானோர் உணவகப் பணியாளர்களாகவே உள்ளனர்.

ஹொங்கொங் தமிழர்களின் வாழ்க்கை முறைமை

ஹொங்கொங் தமிழர்களின் வாழ்க்கை முறைமையை இரண்டு வகையாக வகைப்படுத்திக் கூறலாம்.

முதல் தமிழர் அமைப்பு

ஹொங்கொங்கில் முதல் தமிழர் அமைப்பு என்றால் அது ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகம் ஆகும். இது 1966 ஆம் ஆண்டிறுதியில் முறைப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பாகும். அவ்வமைப்பு எவ்வாறான பின்னணியில் தோற்றம் பெற்றது என்றால், அக்காலப்பகுதியில் ஹொங்கொங்கில் வசித்து வந்த தமிழரின் பொழுதுபோக்கு அம்சத்தின் விளைவாகவே தோற்றம் பெற்றுள்ளது. அதாவது ஹொங்கொங் வாழ் பிற இனத்தவர்கள் குறிப்பாக சீனர்கள் தமது பொழுதுபோக்கு அம்சமாக சூதாட்ட விடுதிகளிலும், பந்தயக் களங்களிலும், உல்லாச அரங்குகளிலுமே களிப்பவர்களாக இருந்தனர். ஆனால் தமிழர்களுக்கோ இவ்வாறான பொழுதுபோக்கு அம்சம் பொருத்தமற்றமாக இருந்துள்ளது. அவ்வாறான சூழ்நிலைப் பின்னணியில் ஹொங்கொங்கில் வசித்து வந்த தமிழர் கிட்டத்தட்ட 50 பேர் இந்தியாவில் இருந்து தமிழ் திரைப்படங்களை எடுப்பித்து பார்க்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர். ஒரு திரைப்படத்தை இந்தியாவில் இருந்து எடுப்பிப்பதானால் அதற்கான சில சட்டவிதிமுறைகள் இருந்துள்ளன. அதில் முதன்மையானது ஒரு திரைப்படத்தை இந்தியாவில் இருந்து ஹொங்கொங் எடுப்பிப்பதற்கு சட்டப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பு இருக்கவேண்டும். அதற்கமைவாக அப்பொழுது இருந்தவர்கள் கலந்தாலோசித்து பதிவுசெய்யப்பட்டு உருவாக்கம் பெற்றதே ஹொங்கொங் தமிழ் பண்பாட்டுக் கழகமாகும். இது காலப்போக்கில் தமிழர் பண்பாட்டுடன் தொடர்புடைய பல்வேறு நிகழ்ச்சிகளையும் செயற்திட்டங்களையும் கொண்ட அமைப்பாக வளரத்தொடங்கியுள்ளது.

தமிழர் அமைப்புகள்

இந்திய இளம் நண்பர்கள் குழு (YIFC) எனும் பெயரில் ஒரு குழுவாக செயல்ப்பட்டு வரும் தமிழ் இளைஞர்களால் ஹொங்கொங்கில் தமிழ்மொழிப் பாட வகுப்புகளும் நடாத்தப்பட்டு வருகின்றன.

அனுமதி பெற்று தொழில் புரிவோர்

ஹொங்கொங்கில் நிரந்தர வதிவுரிமை பெற்று வசிப்போரைத் தவிர, ஹொங்கொங்கில் தொழில் அனுமதிப் பத்திரம் பெற்று தொழில் புரிவோர் கிட்டத்தட்ட 300-500 எண்ணிக்கையானோர் இருக்கலாம். இவர்களில் 200-300 தமிழகத் தமிழர்களும், 200-300 இலங்கைத் தமிழர்களும் இருக்கலாம்.

அகதி கோரிக்கை விண்ணப்பத்தாரர்கள்

ஹொங்கொங்கில் அரசியல் புகலிடம் கோரி ஐக்கிய அகதிகளுக்கான ஆனையத்தில் விண்ணப்பம் செய்து அதன் முடிவுக்காக ஹொங்கொங்கில் வசிக்கும் தமிழர்களாக (குறிப்பாக இலங்கை வடக்கு கிழக்கு) பகுதிகளைச் சேர்ந்த இலங்கைத் தமிழர்கள் 200 - 300 வரையிலானோர் உள்ளனர். (2007-2009 இவ்வெண்ணிக்கை மாறக்கூடியது) 2006/7 ஆம் ஆண்டுகளின் பின் வடக்கு கிழக்கைத் தவிர்ந்த ஹொங்கொங் ஈழத்தமிழர்- எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கின. தற்போது இவ்வெண்ணிக்கை 1000 ஆயிரங்களுக்கும் மேலாகும். தமிழக தமிழர்களும் ஐக்கிய அகதிகளுக்கான அனையத்தில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பம் செய்துவிட்டு தொழில் புரிவோர் கிட்டத்தட்ட 300-350 வரையில் இருக்கின்றனர்.

மேற்கோள்கள்

  1. http://www.isvarmurti.com/2007/06/27/akchettiar-the-man-to-make-the-first-documentary-film-on-mahatama-gandhi-when-gandhi-was-very-much-alive/ -
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2009-05-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090504152631/http://www.flipkart.com/tracks-mahatma-chettiar-editor-venkatachalapathy/8125031421-nu23fyj49c. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-09-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100907190628/http://hindu.com/2005/12/23/stories/2005122302411300.htm. 
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2009-12-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091205025404/http://www.ilakkyavattam.com/ilakkyavelli. 
  5. குடிவரவு சட்டம் 1962[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2009-09-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090901201652/http://www.britishcitizen.info/IA1971.pdf. 

இவற்றையும் பார்க்க

Regional Emblem of Hong Kong.svg.png ஒங்கொங்:விக்கிவாசல்
"https://tamilar.wiki/index.php?title=ஹொங்கொங்_தமிழர்&oldid=26424" இருந்து மீள்விக்கப்பட்டது