மங்கையர்க்கரசியார் நாயனார்
மங்கையர்க்கரசியார் நாயனார் | |
---|---|
பெயர்: | மங்கையர்க்கரசியார் நாயனார் |
குலம்: | அரசர் |
பூசை நாள்: | சித்திரை ரோகிணி |
அவதாரத் தலம்: | பழையாறை (கீழப் பழையாறை) |
முக்தித் தலம்: | மதுரை [1] |
மங்கையர்க்கரசியார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[2][3]. சோழ இளவரசியான இவர், நின்றசீர்நெடுமாறன் என்ற பாண்டிய மன்னனை மணந்தார். பாண்டிய நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த போது, சைவ சமயத்தினை பின்பற்றிய இருவர்களில் மங்கையர்கரசியாரும் ஒருவர். இதனால் சைவர்கள் மங்கையர்களுக்கு அரசி என்ற பொருளில் மங்கையர்கரசி என்று பிற்பாடு வழங்கினார்கள்.[4]
பாண்டியனுடன் மணம்
மங்கையற்கரசியார் பழையாறையை ஆட்சி செய்த சோழமன்னன் ஒருவருக்கு மகளாகப் பிறந்தார். அவர் சைவ ஒழுக்கத்தில் சிறந்தவராய் வளர்ந்து திருமணப் பருவம் அடைந்தார். சோழமன்னன் அவரை நின்றசீர்நெடுமாறன் என்னும் பாண்டிய மன்னனுக்கு திருமணஞ் செய்து வைத்தார்.
சமண சார்பு
பாண்டிய மன்னன் சமணசமயத்தைச் சார்ந்து ஒழுகினான். சமண அடிகள்மாரை அவன் பெரிதும் மதித்தான். குடிகளெல்லாரும் சமணராயினர். அரசவையில் குலச்சிறையார் என்னும் ஓரமைச்சர் தவிர மற்றையோரெல்லாம் சமண சமயத்தவராகவே இருந்தனர். நாட்டில் இவ்வாறு சமண சமயத்திற்கு செல்வாக்கு அதிகம் இருப்பதை அறிந்த சைவாரான மங்கையர்க்கரசியார் மனம் வருந்தினார். மீண்டும் பாண்டிய நாட்டில் சைவம் செல்வாக்கு பெற வேண்டும் என்று விரும்பினார்.
ஞானசம்பந்தர் வருகை
இவ்வாறிருக்கும் பொழுது திருஞானசம்பந்தப்பிள்ளையார், பாண்டி நாட்டுக்கு அடுத்த திருமறைக்காட்டிற்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்டார். இச்செய்தியைக் கேள்விப்பட்டதும் சைவம் தழைப்பதற்கான வழி பிறந்தது விட்டது என்று மங்கையற்கரசியார் மகிழ்ந்தார். அமைச்சரான குலச்சிறையாரோடு ஆலோசித்து சம்பந்தப்பெருமானிடம் தூதுவரை அனுப்பிவைத்தார். தூதுவர் சென்று திருஞான சம்பந்தரை வணங்கி மங்கையற்கரசியாரின் மனக்கருத்தைக் கூறினார்கள். சம்பந்தரும் பாண்டிநாட்டுக்கு வருவதாகக் கூறினார். சம்பந்தப்பிள்ளையார் பல திருப்பதிகங்களையும் வணங்கி மதுரையம்பதியை நெருங்கிய வேளையில் மங்கையற்கரசியாருக்கு நன்நிமித்தங்கள் தோன்றின. அப்போது திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் முத்துச் சிவிகை மீதமர்ந்து சிவனடியார் சூழ மதுரை வந்தணைந்தனர் என்ற செய்தியைக் கண்டோர் வந்து கூறினர். அந்த மங்கலகரமான செய்தியைச் சொன்னோர்க்கு மங்கையற்கரசியார் பரிசில் அளித்து மகிழ்ந்தார். அவ்வேளையில் குலச்சிறையாரும் வந்து அடிபணிந்து நின்றார். அவரிடம் ‘நமக்கு வாழ்வளிக்க வந்த வள்ளலை எதிர்கொண்டு அழைத்துவாரும்’ எனப் பணித்தார். தாமும் ஆலவாய் அண்ணலை வழிபட்டு வருவதாக அரசனிடம் கூறிச் சென்று நல்வரவளிப்பதற்காகக் காத்து நின்றார்.
ஆலவாயமர்ந்தபிரானை வணங்கும் அன்புறு காதலுடன் வருகின்ற சம்பந்தப்பிள்ளையாருக்கு எதிர்செல்லாது மங்கையற்கரசியார் ஒரு புறம் ஒதுங்கி நின்றார். வழிபட்டுத் திருப்பதிகமும் பாடிப் பரவி கோயில் முன்றில் வந்தபோது தலைமிசைக் குவித்தகையராய் முன்சென்றார். பிள்ளையாரது அருகில் நின்ற குலச்சிறையார் முன்வருமிவரே பாண்டிமாதேவியாரெனக் காட்டியதும் பிள்ளையார் விரைவோடும் அரசியார் பக்கமாகச் சென்றார். தேவியார், சிவக்கன்றின் செங்கமலப் பொற்பாத்தை வீழ்ந்து வணங்கினார். வீழ்ந்து கும்பிட்டுக் கிடக்கும் மங்கையர்க்கரசியாரைப் பிள்ளையார் பெருகிய அருளோடு கைகளால் எடுத்தார். எழுந்து கையாரத்தொழுது நின்ற அரசியார் கண்ணீர் மல்க “யானும் என்பதியும் செய்த தவம் என்கொல்” (அதாவது நானும் என்கணவரும் செய்த தவம் எவ்வளவு பெரியது) எனவாய் குழறிக் கூறிநின்றார். பிள்ளையாரும் “பரசமயச் சூழலில் தொண்டராய் வாழும் உங்களைக் காண வந்தோம்” என அருள் மொழி கூறினார்.
பிள்ளையார் அருள் பெற்றுப் பாண்டி நாடு உய்ந்ததென்ற உறுதியோடு அரசியார் அரண்மனை புகுந்தார். அன்று பள்ளியறைக்கு வந்த மன்னன் யாதும் பேசாமல் சோகமாயிருந்தான். அரசியார் “மன்ன! உமக்கு நேர்ந்ததென்ன? துயரத்துடன் இருக்கிறீரே என விசாரித்தார். அதற்கு அரசன் “சோழ நாட்டுச் சிவவேதியர் ஒருவர் நமது அடிகள்மாரை வாதினில் வெல்ல வந்திருக்கின்றார். அவரை அடிகள் மார் ‘கண்டு முட்டு’ (அதாவது கண்டதால் துடக்கு) யான் அதனை ‘கேட்டு முட்டு’ (அதாவது கேட்டதால் துடக்கு) எனக் கூறினான். ‘வாதினில் வென்றவர் பக்கம் சேர்தலே முறை. அதன் பொருட்டுக் கவலை ஏன்? கவலை ஒழிக’ என ஆறியிருக்கச் செய்தார் அரசியார். அரசனுக்கு ஆறுதல் கூறினாரேனும் அன்றிரவு கவலையுடனேயே இருந்தார். வஞ்சனையால் வெல்ல அமணரால் சம்பந்தப்பிள்ளையாருக்கு என்ன ஆபத்து நேருமோ எனபதே அவர்தம் கவலை. அவ்வாறு ஆபத்தேதும் நேரின் உயிர் துறப்பதே செய்யத்தக்கது எனும் உறுதியும் பூண்டார்.
அரசியார் அஞ்சியவண்ணமே அன்று இரவு அமண்தீயர் ஆளுடைய பிள்ளையார் உறைந்த (தங்கியிருந்த) மடத்துக்குத் தீவைத்தனர். இச்செய்தி மானியாருக்கு எட்டியபொழுது பெரிதும் மனம் வருந்தினார். தாமும் குலச்சிறையாரும் பிள்ளையாரை இத்தீயர் வாழும் நாட்டுக்கு வரவழைத்ததே பெரிதும் பிழையாயிற்று என்றும் இதற்குக் கழுவாய் மாழ்வதே எனவும் துணிந்தார். அப்பொழுது அமண்பாதகர் வைத்த தீயால் திருமடத்திற்குத் தீதொன்றும் ஆகவில்லை என்றறிந்து ஆறுதலுற்றார். இந்நிலையிலே மன்னன் வெப்புநோய் பற்றி பற்றி வருத்தும் செய்தியைக் காவலாளர் வந்து கூறினர். அதுகேட்ட அரசியார் விரைந்து அரசனிடம் சென்றார். மருத்துவராலும் அமண் அடிகளின் மந்திரத்தாலும் வெப்பம் சிறிதும் தணியாது அரசன் வருந்துவது கண்டு அச்சமுற்றார். பிள்ளையார் பொருட்டு வைத்த தீயே இவ்வண்ணம் வெப்புநோயாக வருத்துகிறதென எண்ணியவராய் “திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகளை அழைத்தாலே இந்நோய் தீரும்” எனக் கூறினார். “ஞானசம்பந்தன்” எனும் நாமமந்திரம் காதிற்புக்க அளவில் அயர்வு நீங்கி உணர்வு பெற்ற பாண்டியன் ‘அவரை அழைப்பீராக’ எனப் பணித்தான்.
அரசியார் அமைச்சருடன் அணையுடைத்துப் பாயும் வெள்ளம் போன்றதோர் அன்பு பெருவெள்ளத்துடன் ஆளுடையபிள்ளையார் தங்கியிருக்கும் திருமடத்தை அடைந்தார். அங்கு ஞானத்திருவுருவாயும், வேதகாவலராகவும், மண்ணில் வளரும் மதிக்கொழுந்தாகவும், சிவபெருமானது சீர் பாடும் ஏழிசை அமுதமாயும் தோன்றிய சிவபுரப்பிள்ளையைக் கண்களிப்பக் கண்டார். இச்சிவம்பெருக்கும் பிள்ளைக்கு அமணர் செய்த ஆபத்தை நினைத்துச் சலிப்படைந்தவராய் அடிகளில் வீழ்ந்து அழுது அரற்றினார். பிள்ளையார் ‘தீங்குளவோ?’ என வினவினார். அரசியார் ‘சமணர் செய்த தீச்செயல் அரசனுக்குத் தீப்பிணியாய் பற்றியது. இத்தீப்பிணியைத் தீர்த்து எமதுயிரும் மன்னவனுயிரும் காத்தருள வேண்டும்’ எனப் பணித்தார். ஆளுடைய பிள்ளையார் ‘ஒன்றும் நீர் அஞ்ச வேண்டாம், அமணரை வாதில் வென்று அரசனைத் திருநீறு அணிவிப்பேன்’ என உறுதி மொழி கூறினார்.
சம்பந்தப்பிள்ளையார் முத்துச்சிவிகையிலேறி அரண்மனைக்கு எழுந்தருள மங்கையற்கரசியாரும் சிவிகையிலேறி அரண்மனை வந்தார். பாண்டியமன்னன் சம்பந்தப்பிள்ளையாருக்குத் தனது தலைப்புறமாக ஓர் பொன்னாசனம் காட்டினான். செம்பொற்பீடத்தே வீற்றிருக்கும் சம்பந்தரைப் கண்டு பொறாத சமணர்கள் கோலும் நூலும் கொண்டு குரைத்தனர். அநேகராய் பிள்ளையாரைச் சூழ்ந்து பதறிக் கதறும் கொடுமை கண்டு மங்கையற்கரசியார் அரசனிடம் “இப்பாலன் வாயொரு பாலகரை அமணர்கள் திரளாகச் சூழ்ந்து கதறுவது அழகன்று; உங்கள் தீப்பிணியைப் பிள்ளையார் தீர்த்த பிறகு சமணர் வல்லமையுடையவராயின் வாது செய்யலாம்” எனக் கூறினர். அரசன் அதுவே நன்றென்று அமணரை நோக்கி “நீங்கள் செய்யத்தக்க வாது என் சுரநோயைத் தீர்த்தலே. அதனைச் செய்யுங்கள்” எனக் கூறினான். சமணரது மருந்து மந்திரமெல்லாம் மேலும் சுரத்தை அதிகரிக்கவே செய்தன. சம்பந்தப்பிள்ளையார் திருநீற்றுப்பதிகம் பாடிப் பூசிய திருநீறு மன்னனைக் குணமாக்கியது. அமணர்கள் இவ்வாதத்தில் தோற்றதுடன் அனல்வாதம், புனல்வாதம் என்பவற்றிலும் தோற்றுக் கழுவேறினர். பாண்டிய மன்னனுக்குப் பரமசமய கோளரியார் திருநீறு அளித்தார். அதுகண்டு மதுரை மாநகரத்துள்ளோரெல்லாம் மங்கள நீறணிந்து சைவராயினர். தம்மனக்கருத்து முற்றிய மங்கையற்கரசியார், சம்பந்தப் பெருமான், பாண்டியமன்னன் ஆதியாரோடு அங்கயற்கண்ணி தன்னோடுமமர்ந்த ஆலவாயண்ணலை வழிபட்டு மகிழ்ந்தனர்.
சம்பந்தப்பிள்ளையார் ஆலவாய்ப் பெருமானை வழிபட்டிருந்த நாளெலாம் மங்கையற்கரசியாரும் சென்று அவர்தம் திருவடிகளை வழிபடும் பாக்கியம் பெற்றார். சம்பந்தப் பிள்ளையார் தென்தமிழ் நாட்டுத் திருத்தலங்கள் பலவற்றையும் வழிபடும் ஆராக்காதலால் புறப்பட்ட பொழுது பாண்டிமாதேவியாரும், மன்னன், மந்திரியார் ஆகியோரும் அவருடன் சேர்ந்து சென்றனர். திருப்பரங்குன்றம் ஆகிய தலங்களை வழிபட்டுக் குலச்சிறையார் அவதரித்த தலமாகிய திருமணமேற்குடியைச் சென்றடைந்தனர். அத்தலத்தை வழிபட்ட பின் சம்பந்தப்பெருமான் சோழநாட்டுத்தலங்களை வழிபடப் புறப்பட்டார். மங்கையற்கரசியாரும் அவருடன் சேர்ந்தோரும் பிள்ளையாருடன் செல்ல ஒருப்பட்டனர். பிள்ளையார் அவர் தம் பேரன்பிற்கு உவப்புற்றனரெனினும் அவர்களது கடமையினை வற்புறுத்தும் முறையில் “நீங்கள் பாண்டிநாட்டிலிருந்து சிவநெறியைப் போற்றுவீராக” எனப் பணித்தருளினார். அவர்களும் ஆளுடையபிள்ளையின் ஆணையை மறுத்தற்கஞ்சி தொழுது நின்றனர். பிள்ளையார் விடையீந்து சோழநாடு சென்றதும் மதுரை வந்து சிவநெறியைப் போற்றி இருந்தனர்.
திருநாவுக்கரசு சுவாமிகள் திருவாலவாயிறைவரைத் தரிசித்திருந்த காலத்தில் தாமும் தம் பதியாரோடு சென்று அவர் திருப்பாதத்தைப் பணியும் பாக்கியம் பெற்றார். மன்னனுக்கு நெடுங்காலம் சைவவழித்துணையாயிருந்த மங்கையற்கரசியார் மன்னவனோடு ஈசன் இணையடி அடைந்தார்.
இலக்கியத்தில்
“வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்” – திருத்தொண்டத் திருத்தொகை.
நுண்பொருள்
- எந்நிலையிலும் சைவ ஒழுக்கத்தைப் பேணுதல் மங்கையர் மரபு.
- திருநீற்று நெறிவளர்க்கும் மங்கையர் மனக்கருத்து, திருவருளால் நிறைவுறும்.
- மங்கையார் சைவ வாய்மைபிழைக்கும் கணவர் பழிதீர்ப்பார்.
- நாயன்மாரை வழிபடுவது நாட்டுக்கு நலன் தருவதாகும்.
- அரச திருவுடைய மங்கையரால் நாட்டில் சைவம் ஓங்கும்.
- தொண்டுறுதி கொண்ட மங்கையர் போற்றப்படுவர்.
மங்கையற்கரசியார் குருபூசைநாள்: சித்திரை உரோகிணி.
காண்க
மேற்கோள்கள்
- ↑ நாயன்மார் பெருமக்கள் அவதாரத் தலங்கள் மற்றும் முக்தித் தலங்கள்
- ↑ 63 நாயன்மார்கள், ed. (01 மார்ச் 2011). மங்கையர்க்கரசியார். தினமலர் நாளிதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help)CS1 maint: numeric names: editors list (link) - ↑ மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ்.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ பெரிய புராணம்- கிருபானந்தவாரியர் பக் 669
உசாத்துணைகள்
- பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்