திருக்குறிப்புத் தொண்ட நாயனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
திருக்குறிப்புத் தொண்டர்
பெயர்:திருக்குறிப்புத் தொண்ட நாயனார்
குலம்:சூரியகுலம்(வண்ணார்)[1]
பூசை நாள்:சித்திரை சுவாதி
அவதாரத் தலம்:திருக்கச்சி
முக்தித் தலம்:திருக்கச்சி

“திருக்குறிப்புத் தொண்டர் தம் அடியார்க்கும் மடியேன்” – திருத்தொண்டத் தொகை

திருக்குறிப்புத் தொண்ட நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார். இவர் தொண்டை நன்னாட்டில் காஞ்சி மாநகரத்தில் வண்ணார் மரபில் தோன்றியவர்[2][3]. இவரைப்பற்றிய தகவல் சேக்கிழார் இயற்றிய பெரிய புராணத்தில் 25-வது புராணமாக 'மும்மையால் உலகாண்ட சருக்கம்' என்ற பகுதியில் உள்ளது.

பெயர்க்காரணம்

சிவனடியார்களின் உள்ளத்தின் திருக்குறிப்பை யுணர்ந்து அவர்களுக்குப் பணிவிடை செய்யும் தன்மையில் நிலைத்த மேன்மையால் இவருக்கு 'திருக்குறிப்புத் தொண்டர்' என்று வழங்கப்படும் சிறப்புப் பெயரை உடையவரானார்.

அடியார்க்கு சேவை செய்தல்

இவர் செவ்விய அன்புடையவர்; நல் ஒழுக்க நெறி நிற்பவர்; சிவனடித்தொண்டு புரிபவர்; மன, மொழி, மெய்யடியாகிய முக்கரணங்களும் அண்ணலார் சேவடியின் சார்பாக அணைவிப்பவர்; இத்திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்களது ஆடையினைத் சலவை செய்து கொடுத்தலை தமது முதற் பணியாகக் கொண்டிருந்தார். இப்பணியால் துணி அழுக்குப் போவது போல் மும்மலப் பிறப்பழுக்கும் போக்குவார் ஆயினர்.

ஆண்டவன் திருவுளம்

இவ்வடியவரது அன்பின் பெருமையை உலகத்தார்க்கு அறிவிக்கத் திருவுளங்கொண்டார் திருவேகம்பப் பெருமான். குளிர் மிகுந்த ஒருநாள் திருமாலும் காணமுடியாத திருவடிகளை மண்மீது பதித்து ஓர் ஏழை போன்று மெலிந்த மேனியும், வெண்ணீற்று மேனியில் அழுக்கடைந்த கரிய கந்தைத் துணியுமாய்க் குறுகிய நடையுடன் வந்தார். தளர்ந்த திருமேனியுடைய சிவனடியாராகிய அவரைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர், அன்பினால் எதிர்கொண்டு உரோமம் சிலிர்ப்ப நிலமுற விழுந்து வணங்கினார். எழுந்து நின்று இன்மொழிகள் பல கூறினார். “திருமேனி இழைத்திருக்கின்றதே, ஏன்?” என இரக்கத்துடன் கேட்டார். பின்னர் கூப்பிய கைகளுடன், ‘தாங்கள் உடுத்துள்ள இக்கந்தையைத் துவைத்தற்குத் தாருங்கள்’ என்று கேட்டார். வந்த சிவனடியார், ‘நான் உடுத்துள்ள இக்கந்தை அழுக்கேறி எடுப்பதற்குத் தகுதியில்லாத நிலையிலிருப்பினும் உடம்பினை வருத்தும் குளிருக்குப் பயந்து கைவிடாது உடுத்துள்ளேன். மாலைப் பொழுதாவதற்குள் தருவீராயின், விரைந்து கொண்டுபோய், துவைத்துத் தருவீராக’ என்று கூறினார். அதுகேட்ட திருக்குறிப்புத் தொண்டர், 'அடியேன் காலந்தாழ்த்தாமல் மாலைப்பொழுதிற்குள் விரைவில் வெளுத்துத் தருகின்றேன், தந்தருள்வீராக’ என்று வேண்டினார். வந்த அடியவர், “கந்தையாகிய இதனை விரைவிற் துவைத்து உலர்த்தித் தாராதொழிவீராயின், இந்த உடம்பிற்கு இடர் செய்தீராவீர்” என்று சொல்லித் தாம் உடுத்திருந்த கந்தையை அவர் கையிற் கொடுத்தார்.

சோதனை

அதனைப் பெற்றுக்கொண்ட திருக்குறிப்புத் தொண்டர், குளத்திற் சென்று, முன் சிறிது அழுக்கைப் போக்கி, வெள்ளாவியில் வைத்து புளுக்கி துவைக்கத் தொடங்கினார். அப்பொழுது பெருமழை விடாது பெய்வதாயிற்று. அதுகண்ட திருக்குறிப்புத் தொண்டர் சிவனடியார்க்குத் தாம் சொன்ன உறுதிமொழியை எண்ணி, ‘இனி நான் யாது செய்வேன்’ என்று கவலையுற்று, மழைவிடுவதை எதிர்பார்த்து அங்கேயே நின்றார். மழையோ நிற்கவில்லை. இரவுப் பொழுதும் நெருங்குவதாயிற்று. திருக்குறிப்புத் தொண்டர் “ஐயோ குளிரால் திருமேனி நடுங்குகின்ற சிவனடியார்க்கு நான் செய்ய விரும்பிய அடிமைப்பணி தவறிப்போயிற்றே" என்று சோர்ந்து வீழ்ந்தார்; மழையோ விடவில்லை; அடியார் சொல்லிய கால எல்லையும் முடிந்து விட்டது. முன்னமே அவரது உடையினை வீட்டிலேயே துவைத்துக் காற்றில் உலர்த்திக் கொடுப்பதற்கு அறியாது போயினேனே; அடியார் திருமேனி குளிரால் வருந்தத் தீங்கு புரிந்த கொடியேனுக்கு இனி 'இதுவே செயல்’ என்று எழுந்து, ‘துணி துவைக்கும் கற்பாறையிலே எனது தலை சிந்தும்படி மோதுவேன்’ என்று தமது தலையை மோதினார்.

திருவருள் சுரந்தது

அப்போது அப்பாறையின் அருகே திரு ஏகம்பரது திருக்கை தோன்றி அவரைப் பிடித்துக் கொண்டது. வானத்தில் விடாது பெய்த நீர்மழை நீங்க மலர்மழை பொழிந்தது. உமையொருபாகராய் இறைவன் விடைமேல் எழுந்தருளி, காட்சி கொடுத்தருளினார். அத்தெய்வக் காட்சியினைக் கண்ட திருக்குறிப்புத் தொண்டர், அன்புருகக் கைதொழுது தனிநின்றார். சிவபெருமான் அவரை நோக்கி, "உனது அன்பின் திறத்தை 'மூவுலகத்தாருக்கும் அறியச் செய்தோம்', இனி நீ நம்முடைய உலகத்தை அடைந்து நம்மைப் பிரியாது உறைவாயாக" என்று திருவருள் புரிந்து மறைந்தருளினார்.

இதையும் காண்க

மேற்கோள்கள்

  1. ஆறுமுக நாவலர், ed. (1990). திருத்தொண்டர் வரலாறு அல்லது பெரிய புராண வசன காவியம். சரசுவதி மஹால் நூலகம் , தஞ்சாவூர். p. 23. திருக்குறிப்புத் தொண்ட நாயனார் இவர் காஞ்சிபுரத்து வண்ணார் {{cite book}}: no-break space character in |publisher= at position 21 (help); no-break space character in |quote= at position 31 (help)
  2. 63 நாயன்மார்கள், ed. (28 பிப்ரவரி 2011). திருக்குறிப்புத் தொண்ட நாயனார். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
  3. மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்