சிவதொண்டன் நிலையம், இலங்கை

தமிழர்விக்கி இல் இருந்து
(சிவதொண்டன் சபை இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search

சிவதொண்டன் நிலையம் யாழ்ப்பாணம் யோகசுவாமிகளின் அறிவுறுத்தலின் படி உருவாக்கப்பட்ட ஆச்சிரமம் ஆகும். சிவதொண்டன் நிலையம் யாழ்ப்பாணத்திலும் செங்கலடியிலும் இயங்கி வருகின்றன. இவற்றின் நிருவாகம் சிவதொண்டன் சபையின் கீழ் உள்ளது. சிவதொண்டன் சபை வெளியிடுகின்ற ஆன்மீக சஞ்சிகையான சிவதொண்டன் திங்களுக்கு ஒரு முறை வெளியாகின்றது.

நோக்கம்

இச் சிவதொண்டன் நிலையங்கள் துறவியரும், தன்னையறியச் சாதனை புரிவோரும் தங்கும் ஆச்சிரமங்கள் ஆகும். ஆன்மீகச் சாதனையும் அதற்கு உகந்த செயற்பாடுகளுமே இந்நிலையங்களின் தனி நோக்கமாகும்.

அமைப்பு

சிவதொண்டன் நிலையம் இரு பிரதான அங்கங்களைக் கொண்டுள்ளன. மேல் மாடியில் தியான மண்டபமும் கீழே உள்ள மண்டபம் புராண மண்டபமும் காணப்படுகின்றன. தியான மண்டபத்தில் திருவடி பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. புராண மண்டபத்தில் சுவாமிகளின் திருவுருவச் சிலை பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. புராண மண்டபத்தில் புராண படனம், திருமுறைப் பாரயணம், நற்சிந்தனைப் பாரயணம் என்பன நிகழும்.

பூசைகள்

நித்திய பூசை காலை ஆறு மணிக்கும் மாலையில் நான்கு மணிக்கும் நடைபெறுகின்றன. இவற்றைவிட யோக சுவாமிகள் திருவடி அடைந்த நட்சத்திரமான ஆயிலிய நட்சத்திரப் பூசை நண்பகற்போதில் மேற்கொள்ளப்படுகின்றது. மாதத்தின் முதல் ஞாயிறு யாக நாளக அனுட்டிக்கப்படும். ஒரு யாக நாளில் விரதியராய் சிவதொண்டன் நிலையத்தில் ஒன்று கூடி நற்சிந்தனை உரைநடைப் பகுதியை வாசித்து, அதிற் குறிப்பிட்டுள்ள ஆன்மீக விடயங்கள் பற்றி சிந்தித்து, பின் தியானத்திருப்பர். இதுவே யாக நாளாகும். இது பொதுவாக யாழ் சிவதொண்டன் நிலையத்தில் அனுட்டிக்கப்படும்.

அத்துடன் சிவராத்திரி, திருவடி பூசைத்தினம், குருபூசை, ஆண்டு விழா, திருவெம்பாவை என்பவற்றின் போது சிறப்புப் பூசைகள் நிகழ்கின்றன.

யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையம்

இது யோகசுவாமிகளது திருவுளப்படி 1953 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் காங்கேசன்துறை வீதியில் அமைந்துள்ளது. இது தனது ஆண்டு விழாவினை ஆண்டுதோறும் நவம்பர் 4 ஆம் நாளில் கொண்டாடுகின்றது.

செங்கலடி சிவதொண்டன் நிலையம்

இச் சிவதொண்டன் நிலையம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் செங்கலடி கிராமத்தில் மட்டக்களப்பு-செங்கலடி பிரதான வீதியில் அமைந்துள்ளது. இச்சிவதொண்டன் நிலையம் யோகசுவாமிகளது திருவுளப்படி சுவாமிகள் சமாதியடைந்த ஆண்டு (1964) பங்குனி மாதத்தில் நிறுவப்பட்டது.

ஆச்சிரம வாழ்வு நாள்

பொதுவாக யோகசுவாமிகளின் பங்குனிமாதக் குருபூசைக்கு முந்திய மூன்று நாட்களும் ஆச்சிரம வாழ்வு நாட்களாக அனுட்டிக்கப்படுகின்றது. மேலும் செங்கலடி சிவதொண்டன் நிலையத்தில் மாதந்தோறும் இரு ஞாயிற்றுக் கிழமைகளில் இது நடைபெறும். ஆச்சிரம வாழ்வு நாளன்று குறிப்பிட்டளவான ஆன்மீக நாட்டங்கொண்ட பக்தர்கள் கூடி ஞான நூல் ஒன்றையோ அல்லது பலதையோ வாசித்து அதன் உண்மைகளை விளங்குவர். இது ஒரு சத்சங்கம் போன்று நடைபெறும். பக்தர்கள் ஆச்சிரம வளவில் இயன்ற தொண்டினையும் மேற்கொள்வர். ஒரு ஆச்சிரமச் சூழலுக்கு ஒப்பான நடைமுறைகள் அன்று நடைபெறும். நண்பகற்போதில் மாகேசுரபூசையும் நிகழும்.

வெளி இணைப்புகள்