சிறுத்தொண்ட நாயனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சிறுத்தொண்ட நாயனார்
பெயர்:சிறுத்தொண்ட நாயனார்
குலம்:மாமாத்திரர்
பூசை நாள்:சித்திரை பரணி
அவதாரத் தலம்:திருச்செங்காட்டங்குடி
முக்தித் தலம்:திருச்செங்காட்டங்குடி
சிறப்பு:பல்லவ படைத்தளபதி - வீராதி மாவீரர்களின் வழித்தோன்றல் பரஞ்சோதியார் (சிறுத்தொண்டர் நாயனார்)


சிறுத்தொண்ட நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் ஆவார்[1][2]. இவர் இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்ட சேனாதிபதியாக நரசிம்ம பல்லவரிடம் பணியாற்றினார்[3] என்பதையும் குறிப்பிட வேண்டும். காவிரி வளநாட்டில் திருச்செங்கோட்டங்குடியில் மாமாத்திரர் [4] குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். இவர் ஆயுள் வேதக்கலையிலும் (மருத்துவம்), வடநூற்கலையிலும், படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர்; யானையேற்றம், குதிரையேற்றம், ஆகியவற்றிலும் வல்லவர். உள்ளம் நிறைந்த கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றதனால், சிவன்கழலைச் சிந்தித்துப் போற்றுதலே மெய்ந்நெறியாவதெனத் தெளிந்தவர். ஈசனடியார்க்குப் பணிசெய்தலை இயல்பாகக் கொண்டவர்.

சேனாதிபதியாக

நரசிம்ம பல்லவரிடம் பரஞ்சோதி சேனாதிபதியாய்ப் போர்முனையிற் பகையரசர்களை வென்று அரசனால் நன்கு மதிக்கப்பட்டவர். இவர் மன்னர் பொருட்டு வட திசையில் படையெடுத்துச் சென்று, வாதாபி நகரத்தை அழித்து அங்கிருந்து பலவகை நன்மணிகளையும், செல்வங்களையும், யானை, குதிரை, முதலியவற்றையும் கைப்பற்றித் தம்வேந்தனிடம் கொணர்ந்தார். அரசன் இவரது வீரத்தையும், ஆண்மையினையும் அதிசயித்து புகழ்ந்து பாராட்டினார். அந்நிலையில் பரஞ்சோதியாரை நன்குணர்ந்த அமைச்சர்கள், ‘அரசே! இவரிடம் சிவபெருமானுக்குத் திருத்தொண்டு செய்யும் இயல்பு நிரம்பியிருப்பதால் போரில் இவரை எதிர்க்கவல்லார் எவருமில்லை என்றனர். இச்செய்தியைக் கேள்வியுற்ற வேந்தன், “உம்பர் பிரான் அடியாரை உணராதே கெட்டொழிந்தேன், வெம்பு கொடும் போர்முனையில் விட்டிருந்தேன், என அஞ்சிப் பரஞ்சோதியாரை நோக்கி, எம்பெருமான்; எனது பிழையைப் பொறுத்தருள வேண்டும்” என இறைஞ்சினார்.

மன்னன் இறைஞ்சியதும் பரஞ்சோதியாரும் முன் வணங்கி ‘அரசே! எனது தொழிலுக்கேற்ற பணியினைச் செய்வேன். அதற்கு என்ன தீங்கு’ என்றார். அறம்புரி செங்கோலனாகிய வேந்தன், அவருக்கு நிறைந்த நிதிக்குவையும், நீடு விருத்திக்கான நல்நிலம், ஆனிரை ஆகியவற்றை அளித்து வணங்கி, 'நீர் உம்முடைய திருத்தொண்டின் நிலைமையினை நானறியாதபடி கொண்டு நடத்தினீர். இனி உம்முடைய மனக்கருத்துக்கு இசையத் திருத்தொண்டு செய்வீராக’ என விடைகொடுத்தனுப்பினார்.

சிவத் தொண்டராக

மன்னவனிடம் விடைபெற்ற பரஞ்சோதியார், தமது பதியாகிய திருச்செங்காட்டங்குடியினை அடைந்தார். அங்கு கணபதீச்சரத்து இறைவரை இறைஞ்சிச் சிவத்தொண்டுகளை வழுவாது செய்திருந்தார். இவர் திருவெண்காடு நங்கையை மணம் முடித்தார். நங்கையாருடன் மனையறத்தினை இனிதே நிகழ்த்தி நாள்தோறும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்துப் பின் தாம் உண்ணலை வழக்கமாகக் கொண்டிருந்தார். பரஞ்சோதியார் சிவனடியார்களை விரும்பித் தொழுது, அவர் மிகச் சிறியராகப் பணிந்து ஒழுகியமையால் 'சிறுத்தொண்டர்' என அழைக்கப்பட்டார். இவருக்கு சீராளத்தேவர் என்னும் திருமைந்தர் அவதரித்தார். அப்பிள்ளைக்கு ஐந்து வயது வந்தபொழுது பள்ளியிற் கல்வி பயிலவைத்தார். அந்நாளில் திருஞானசம்பந்தப் பிள்ளையார் இறைவனை வழிபடத் திருச்செங்காட்டங்குடிக்கு எழுந்தருளினார். ஆளுடைய பிள்ளாயாரும் பேரன்பினாற் சிறந்த சிறுத்தொணடருடன் நண்பினால் அளவளாவி மகிழ்ந்தனர். கணபதீச்சரப் பெருமானைத் தாம் பாடிய ‘பைங்கோட்டு மலர்புன்னை’ என்னும் முதற்குறிப்புடைய திருப்பதிகத்தில் சிறுத்தொண்டரைச் சிறப்பித்துப் பாடினார்.

பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச் சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய் தந்தானே செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன் பணிசெய்ய வெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே.

இறைவனின் திருவிளையாடல்

சிறுத்தொண்டரது உண்மை அன்பை நுகர்ந்தருள விரும்பிய சிவபெருமான், பைரவ அடியாராக வேடந்தாங்கி, திருச்செங்காட்டங் குடியை அடைந்தார். பைரவசுவாமியார் செஞ்சடையினைக் காளமேகம் போன்று கருமயிர்த்திரளாக முடித்திருந்தார். அக்கருங்குஞ்சியிலே தும்பைப் பூக்கள் சூடியிருந்தார். திருச்சடையிலுள்ள இளம்பிறையைத் திருநீற்றுப் பொட்டாக நெற்றியிலிட்டார். செக்கர் வானத்தை அந்தி இருள் மறைப்பது போல, செம்மேனியை மூடிக் கருஞ்சட்டை அணிந்தார். இடக்கையிற் சூலம் ஏந்தினார். இத்தகைய கோலத்துடன் சிறுத்தொண்டரது வீட்டு வாயிலை அடைந்து ‘தொண்டர்க்குச் சோறளிக்கும் சிறுத்தொண்டர் இவ்வீட்டில் உள்ளாரோ? என வினவி நின்றார். அம்மொழியினைக் கேட்ட சந்தனத்தாதியார் முன்வந்து வணங்கி, ‘அவர் அடியாரைத் தேடி வெளியே சென்றுள்ளார். எம்மை ஆளான உடையவரே! வீட்டினுள் எழுந்தருள்வீராக’ என வேண்டினார். வந்த பைரவ சுவாமியார் அவரை நோக்கி, ‘மாதர்கள் இருக்கும் இடத்தில் நாம் தனியே புகமாட்டோம்’ என்றார். அது கேட்ட திருவெண்காட்டு நங்கையார். ‘இவ்வடியவர் போய்விடுவாரோ’ என்று அஞ்சி விரைந்து உள்ளிருந்து வீட்டு வாயிலிற்கு வந்து ‘எம்பெருமானே! அம்பலவர் அடியாரை அமுது செய்விப்பதற்கு அடியார் எவரையும் காணாமல் வெளியே சென்றுள்ளார்; தேவரீர் இங்கு எழுந்தருளியதனைக் கண்டால் தாம் பெற்ற பெரும்பேறெனக் கொள்வார். இனிச் சிறிதும் தாமதிக்கமாட்டார்; இப்பொழுதுதே வந்துவிடுவார். தேவரீர் வீட்டினுள் எழுந்தருளி இருப்பீராக’ என இறைஞ்சினார். அதுகேட்ட பைரவர் ‘மாதரசியே நம் உத்தரபதியாயுள்ளோம், சிறுத்தொண்டரைக் காணவந்தோம். அவரின்றி இங்கு தங்க மாட்டோம். கணபதீச்சரத்து ஆத்தி மரத்தின் கீழ் இருக்கின்றோம். அவர் வந்தால் நாம் வந்த செய்தியைச் சொல்வீராக’ எனக் கூறிச் சென்று திருவாத்தி மரநிழலின் கீழ் அமர்ந்தருளினார்.

அடியார்களைத் தேடி வெளியே சென்று திரும்பிய சிறுத்தொண்டர், அடியார் ஒருவரையும் காணாமையை மனைவியாருக்குச் சொல்லி வருந்தினார். அப்பொழுது மனைவியார், ‘உத்தராபதியாகிய பைரவ அடியார் ஒருவர் வந்த செய்தியைக் கூறினார். சிறுத்தொண்டர் விருப்புடன் விரைவாகச் சென்று, ஆத்தியின் கீழமர்ந்த அடியார் திருவடிகளைப் பணிந்து நின்றார். பணிந்து நின்ற சிறுத்தொண்டரை நோக்கிய பைரவ சுவாமியார் “நீரோ பெரிய சிறுத்தொண்டர்?” என வினவினார். சிறுத்தொண்டர் அவரை நோக்கி வணங்கி, திருநீறு, உருத்திராக்கமுடைய அடியார்களைப் பணிந்து போற்றுவதற்குரிய தகுதி இல்லாதவனாயினும், சிவனடியார்கள், கருணையினால் என்னை அவ்வாறு அழைப்பர்” என்று கூறிப் பின் “இன்று சிவனடியார்களை அமுது செய்விக்க விரும்பி எங்கு தேடியும் காணப்பெற்றிலேன்’ தவத்தால் உம்மைக் கண்டேன். அடியேன் வீட்டில் எழுந்தருளி அமுது செய்தருளல் வேண்டும்’ என வேண்டிக் கொண்டார். அதுகேட்ட பைரவர், சிறுத்தொண்டரை நோக்கி, ‘தவச்செல்வரே! உம்மைக் காணும் விருப்புடன் இங்கு வந்தோம். நாம் உத்தராபதியோம். எம்மைப் பரிவுடன் உண்பிக்க உம்மால் முடியாது; செய்கை அரியது;’ என்று கூறினார். ‘தேவரீர் அமுது செய்யும் இயல்பினை அருளிச் செய்யும். விரைந்து உணவு அமைக்கச் செய்வேன். சிவனடியார் கிடைக்கப் பெற்றால் தேட ஒண்ணாதனவும் எளிதில் உளவாகும்; அருமையில்லை’ என்று சிறுத்தொண்டர் உரைத்தார். அதனைக் கேட்ட பைரவப் கோலப் பெருமான், ‘எம் அன்புக்குரிய தொண்டரே! நாம் ஆறுமாதத்திற்கு ஒருதடவை பசுவைக் கொன்று உண்ணுவது. அதற்குரிய நாளும் இன்றேயாகும். உம்மால் எம்மை உண்பிக்க முடியாது’ என்றார். அதுகேட்ட சிறுத்தொண்டர், ‘மிகவும் நன்று, மூவகைப் பசு நிரையும் என்னிடமுள்ளன. பெரியீர், உமக்கு அமுதாகும் பசு இதுவெனத் தெரிவித்தால் நான் போய் விரைந்து போய் சமைத்துக் காலம் தப்பாமல் வருவேன் என்று கைதொழுதார். பைரவர் அவரை நோக்கி, ‘நாம் உண்ணக் கொல்லும் பசு நரபசு; உண்பது அஞ்சு பிராயத்துள்; அது உறுப்பில் மறு இல்லாதிருத்தல் வேண்டும்;’ எனக் கூறினார். பின்னர். கேட்ட சிறுத்தொண்டரும் ‘யாதும் அரியதில்லை அருளிச்செய்யும்’ என்றார். ஒரு குடிக்கு ஒருமகனாக சிறுவனை மனமுவந்து தாய்பிடிக்க தந்தை அரிந்து குற்றமின்றி அமைத்த கறியினை நாம் உண்பது’ எனக் கூறினார். அதைக் கேட்ட சிறுத்தொண்டர் எம்பெருமான் அமுது செய்யப்பெறில் அதுவும் அரிதன்று’ என்றார். அடியவர் இசையப்பெற்ற களிப்பால் அவர் திருவடிகளை வணங்கி வீட்டை அடைந்தார்.

வீட்டு வாயிலில் கணவர் வருகையை எதிர்பார்த்து நின்ற மனைவியார், அவரது மலர்ந்த முகங்கண்டு, வந்த அடியாரைப் பற்றி வினவினார். சிறுத்தொண்டர், ‘ஒரு குடிக்கு ஒரு மகனாயும் ஐந்து வயதுடையவனாயும் உறுப்பில் ஊனமற்றனாயுமுள்ள பிள்ளையைத் தாய்பிடிக்க தந்தை மகிழ்ச்சியுடன் அரிந்து கறிசமைத்தால் தாம் திருவமுது செய்வதாகக் கூறினார்’ என்றார். அதுகேட்ட கற்பிற் சிறந்த மனைவியார், பெரிய பைரவத் தொண்டர் அமுது செய்யப் பெறுவதற்கு இங்கு உரிய வகையால் அமுதளிப்போம்.’ எனத் தமது சம்மதத்தை முன்னர் புலப்படுத்தி, பின்னர் ஒருவனாகி ஒருகுடிக்கு வரும் அச்சிறுவனைப் பெறுவது எவ்வாறு? என வினவினார். சிறுத்தொண்டர் மனைவியாரின் முகத்தை நோக்கி, ‘இத்தகமையுடைய பிள்ளையை, நினைவு நிரம்பிய நிதி கொடுத்தாலும் தருவார் இல்லை? நேர் நின்று தம்பிள்ளையைத் தாமே அரியும் தாய் தந்தையார் இருக்கமாட்டார்கள். ஆகவே நான் உய்ய நீ பெற்ற மைந்தனை இங்கு அழைப்போம்’ என்றார். சிறுத்தொண்டர் மனமகிழ்ந்து தம் மைந்தர் வேதம் ஓதச் சென்ற பள்ளிக்குச் சென்றார். பாதச் சலங்கை ஒலியெழுப்பச் சீராளதேவர் ஓடிவந்து தந்தையைத் தழுவிய நிலையில், சிறுத்தொண்டர் மைந்தனை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்தார். மைந்தனை எதிர் சென்று வாங்கிய வெண்காட்டு நங்கையார் பிள்ளையைத் தலைசீவி, முகம்துடைத்துத் திருமஞ்சனமாட்டிக் கோலஞ் செய்து கணவர் கையிற் கொடுத்தார்.

பிள்ளையைக் கையிற்கொண்ட சிறுத்தொண்டர், அடியார்க்குக் கறியமுதாம் என்று மைந்தனை உச்சிமோவாது, மார்பிலணைத்து முத்தம் கொள்ளாது, அடியார்க்கு அமுதமளிக்க அடுக்களையிற் செல்லாது, வேறிடத்திற் செல்வாராயினார்; ஒன்றிய உள்ளத்தாராகிய சிறுத்தொண்டரும் அவருடைய மனைவியாரும் தாம் செய்யப்போகும் செயலின் உண்மையினை உலகத்தார் உள்ளவாறு அறியும் உணர்வுடையாரல்லர் என்று கருதி, மறைவிடத்திற் சென்று புகுந்தனர். பிள்ளையைப் பெற்ற தாயார் பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்தார். உலகை வென்ற தந்தையார் பிள்ளையின் தலையைப் பிடித்தார். மெய்த்தாயார் பிள்ளையின் கிண்கிணிக்கால் இரண்டினையும் மடியின் புடையில் இடுக்கிக் கொண்டார். அதனைக் கண்ட மைந்தன் பெற்றோர் முகம்நோக்கி மகிழ்ந்து நகைத்தனன். தனிமா மகனைத் தந்தையார், கருவிகொண்டு தலையரிவாராய் இருவர் மனமும் பேருவகை எய்தி அரிய செயல் செய்தனர். வெண்காட்டு நங்கையார், அறுத்த தலையின் இறைச்சி அமுதிற்கு ஆகாதென்று கழித்து அதனை மறைத்து நீக்குமாறு சந்தனத் தாதியார் கையில் கொடுத்துவிட்டு மற்றைய உறுப்புக்களின் இறைச்சிகளையெல்லாம் அறுத்துப் பாகம்பண்ணி வேறு கறிகளும் சமைத்துச் சோறும் சமைத்துக் கணவருக்குத் தெரிவித்தார்.

சிறுத்தொண்டர், ஆர்வத்துடன் விரைந்து சென்று திருவாத்தியின் கீழிருந்த பைரவ சுவாமிகளை வணங்கி, ‘தேவரீர் அடியேன் இல்லத்திற்கு எழுந்தருளி அமுது செய்தருள வேண்டும்’ என்று ஆர்வத்தோடு அழைத்தார். ‘தேவரீர் பசித்தருளக் காலந்தாழ்த்தினேன் ஆயினும் தேவரீர் சொல்லியவண்ணம் திருவமுது சமைத்தேன். எண்ணம் வாய்ப்ப எழுந்தருள வேண்டும்’ என வேண்டினார். வறியோன் இருநிதியும் பெற்று உவந்தாற்போல அடியவரைத் தம் வீட்டிற்கு அழைத்து வந்தார். வெண்காட்டு நங்கையார் கொணர்ந்த தூய நீரினால் அடியார் பாதங்களை விளக்கிய சிறுத்தொண்டர், அந்நீரை உள்ளும் பருகி புறம்பும் தெளித்தார். தூப தீபங் காட்டி வணங்கினார். மனைவியாருடன் அடியாரை வணங்கி நின்று, ‘திருவமுது படைக்கும் வகை எவ்வாறு’ என வினவினார். ‘இனிய அன்னமுடன் கறிகள் எல்லாம் ஒப்படைக்க’ என்றார் பைரவர். அவர் கூறிய வண்ணம் திருவெண்காட்டு நங்கையார் பரிகலந்திருத்தி, வெண்துகில் விரிப்பில் செந்நெற்சோறும் கறியமுதும் படைத்தார். அதனைக் கண்ட பைரவர் அவரை நோக்கி, 'சொன்ன முறையிற் கொன்ற பசுவினது உறுப்பு எல்லாவற்றையும் கொண்டு சுவை நிரம்பக் கறியாக்கி வைத்தீரோ?' என்றார். தலை இறைச்சி திருவமுதுக்கு ஆகாதென்று கழித்துவிட்டோம்' என்றார் வெண்காட்டு நங்கையார். 'அதுவும் கூட நாம் உண்பது' என்றார் பைரவர். அதுகேட்டுச் சிறுத்தொண்டரும் மனைவியாரும் திகைத்து நின்றனர். அப்பொழுது சந்தனத்தாதியார், 'அந்தத் தலையிறைச்சி, வந்த தொண்டர் அமுது செய்யும் பொழுது நினைக்கவரும் என்று முன்னரே கறியாக்கி வைத்துள்ளேன்' என்று சொல்லி எடுத்துக் கொடுத்தார். திருவெண்காட்டு நங்கையார் முகமலர்ந்து அதனை வாங்கிப் பரிகலத்திற் படைத்தார். அதன்பின் பைரவர், சிறுத்தொண்டரைப் பார்த்து 'இங்கு நமக்கு தனியே உண்ண ஒண்ணாது, இறைவனடியார் இப்பக்கத்தே உள்ளாரை அழைத்துவாரும்' என்றார். அதுகேட்ட சிறுத்தொண்டர் 'அடியார் அமுது செய்ய இடையூறு இதுவோ' என்று வருந்தினார். வீட்டின் புறத்தே சென்று பார்த்தார். அடியார் ஒருவரையும் காணாது முகத்தில் வாட்டம் பெருக முதல்வரை வணங்கி 'இகத்தும் பரத்தும் இனியாரைக் காணேன். நானும் திருநீறு இடுவாரைக் கண்டு இடுவேன்' என்றார். அதுகேட்ட பைரவர் 'உம்மைப்போல் நீறிட்டார் உளரோ? நீர் உடன் உண்பீர்', என்று கூறித் திருவெண்காட்டு நங்கையாரை நோக்கி, வேறொரு பரிகலம் இடச் செய்து 'வெம்மை இறைச்சிச்சோறு இதனில் மீட்டுப்படையும்' என்றார். அவரும் அவ்வாறே படைத்தார். உடனமைந்த சிறுத்தொண்டர், அடியாரை உண்பிக்கவேண்டி தாம் உண்ணப்புகுந்தார். அதுகண்ட பைரவர் அவரைத் தடுத்தருளி, 'நாம் ஆறுமாதம் கழித்து உண்போம். நாம் உண்ணுமளவும் பொறுத்திராது நாளும் சோறு உண்ணும் நீர் முன்பு உண்பது ஏன்? நம்முடன் இருந்துண்ண மகவினைப் பெற்றீராயின் அம்மைந்தனை அழையும்' என்றார். அதனைக் கேட்ட சிறுத்தொண்டர் 'இப்போது அவன் உதவான்' என்றார். 'நாம் உண்பது அவன் வந்தாலேதான் அவனை நாடி அழையும்' பைரவர். அச்சொற்கேட்டுத் தரியாது சிறுத்தொண்டர் மனைவியாரோடும் புறத்தே போய் அழைத்தனர். அவர் மனைவியாரும் தலைவர் பணியில் தலைநிற்பவராய் 'செய்மணியே! சீராளா! வாராய். சிவனடியார் நாம் உய்யும் வகையால் உடனுண்ண அழைக்கின்றார்' என்று ஓலமிட்டழைத்தனர். அப்பொழுது பரமன் அருளால் பள்ளிக்கூடத்தினின்று ஓடிவருபவனைப் போன்று சீராளதேவர் வந்தார். வந்த புதல்வரைத் தாயார் தழுவியெடுத்தார். 'சிவனடியார் அமுது செய்யப் பெற்றோம்' என்னும் மகிழ்ச்சியால் கணவர் கையில் கொடுத்தார்.

வந்த மைந்தரை அழைத்துக் கொண்டு அடியாரை அமுது செய்விப்பதற்கு உள்ளே புகுந்த சிறுத்தொண்டர் பைரவக் கோலத்தொண்டரைக் காணாதவராய்ச் சிந்தை கலங்கித் திகைத்து வீழ்ந்தார்; மனஞ்சுழன்றார். வெந்த இறைச்சிக் கறியமுதினைக் காணாது வெருவுற்றார். 'செய்ய மேனிக் கருங்குஞ்சுகத்துப் பைரவர் நாம் உய்ய அமுது செய்யாது ஒளித்தது எங்கே?" எனத்தேடி மயக்கங் கொண்டு வெளியே சென்று பார்த்தார். அப்பொழுது மறைந்த அம்முதல்வர் உமையம்மையாரோடும், முருகனாகிய குழந்தையுடனும் விடை மீது அமர்ந்து இனிய கறியும், திருவமுதும் அமைத்தார் காண எழுந்தருளித் திருவருள் புரிந்தார். அன்பின் வென்ற தொண்டராகிய சிறுத்தொண்டரும், அவர் மனைவியாரும், சீராளதேவரும் தம் முன்னே தோன்றிய பெருமானை என்பும், மனமும் கரைந்துருக நிலமிசை வீழ்ந்து துதித்துப் போற்றினார்கள்.

சிவபெருமான், உமாதேவியாரும், முருகவேளும், அங்கு தம்மை வழிபட்டு நின்ற சிறுத்தொண்டர், மனைவியார், மகனார், தாதியார் நால்வரையும் தம்மை என்றும் பிரியாது இறைஞ்சியிருக்கும் வண்ணம் உடன் கொண்டு திருக்கயிலையை அடைந்தருளினார்.

நுண்பொருள்

  1. குடிக்கொரு புதல்வனை மகிழ்ச்சியான மனத்துடன் குரூரமாகக் கொன்று உறுப்பரிந்து கறியமுது செய்யும் வல்வினை செயற்கரியதும் காரணம் காண்டற்கரியதுமான சிவத்தொண்டேயாகும். அது ஈசனடியார்க்காயின் எச்செயலும் அரியதில்லை எனக் காணும் உறைத்த மெய்த் தொண்டர்க்கு மிக இயல்பாக கைவரும் கருமமுமாகும்.
  2. கல்வி, வீரம், செல்வம், அரச அதிகாரம், சிவபக்தி என்பவற்றில் சிறந்திருக்கும் பெரியோர் சிவனடியாரிடத்தில் சிறிய தொண்டராய் பணிந்து நடப்பார்கள்.
  3. சிவதொண்டியற்றுவார்க்கு நேரும் சோதனைகள் அவர்தம் இயல்புக்கு ஏற்ற வண்ணமே அமையும், போர்க்களத்தில் கொலைத்தொழில் செய்யவல்ல தொண்டர்க்கு அவ்வண்ணமே ஒரு சோதனை நேர்ந்தது. சோதனை அளிக்க வரும் பெருமானும் அதற்கேற்ற கோலம் பசு இறைச்சி வேண்டுதல் ஏற்ற ஒரு கோலமே.
  4. அரசரானவர் தொண்டுறுதிபடைத்தோரை அத்தொண்டுறுதி துலங்கும் வண்ணம், இயன்ற வசதிகள் அளித்து அரச கருமத்தின்றும் ஓய்ந்திருக்கச் செய்தல் சிறந்தது.
  5. அருள் தருதற்குப் பெருமாள் கொள்ளும் கோலம் அன்பர் நிலைக்குப் பொருந்தியதாக அமையும். சிறுத்தொண்டர், வெண்காட்டு நங்கை, சீராளர் என்போர்க்கு அருள்புரிய கொண்டகோலம் சோமாஸ்கந்த மூர்த்தமாயிருந்தல் காண்க. சந்தனத்தாதியாருக்கும் திருவடிப்பேறு அருளியமையும் சிறப்பே.
  6. சோதனைகள் எல்லாம் வரப்பிரசாதமாக நிறைவுறும்.

சிறுத்தொண்ட நாயனார் குருபூசை : சித்திரைப் பரணி

“செங்காட்டங்குடிமேய சிறுத்தொண்டர்க் கடியேன்” – திருத்தொண்டத் தொகை.

மேற்கோள்கள்

  1. 63 நாயன்மார்கள், ed. (01 மார்ச் 2011). சிறுத்தொண்ட நாயனார். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)CS1 maint: numeric names: editors list (link)
  2. மகான்கள், ed. (30 ஜூலை 2010). நாயன்மார்கள். தினமலர் நாளிதழ். {{cite book}}: Check date values in: |year= (help)
  3. B. Kolappan (2023-11-23). "A warrior from a remote village who conquered a great city of Chalukyas". The Hindu (in English). பார்க்கப்பட்ட நாள் 2023-11-26.
  4. "மஹாமாத்திரர்".
  1. பெரிய புராணம் வசனம் - சிவதொண்டன் சபை, யாழ்ப்பாணம்


"https://tamilar.wiki/index.php?title=சிறுத்தொண்ட_நாயனார்&oldid=142684" இருந்து மீள்விக்கப்பட்டது