போண்டா மணி

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
போண்டா மணி
பிறப்புகேதீஸ்வரன்
(1963-09-19)19 செப்டம்பர் 1963 [1]
மன்னார், வட மாகாணம், இலங்கை மேலாட்சி
(தற்போது இலங்கை)
இறப்புDecember 24, 2023(2023-12-24) (aged 60)
தேசியம்இலங்கையர்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1991– 2023

போண்டா மணி (Bonda Mani, 19 செப்டம்பர் 1963 – 24 திசம்பர் 2023) என அழைக்கபடும் கேதீஸ்வரன்[2] தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகராவார். இவர் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த ஒரு ஏதிலி ஆவார்.[3][4]

மூன்று தசாப்தங்களாக நீடித்த இவரது திரை வாழ்க்கையில் 270 க்கும் மேற்பட்ட படங்களில் இவர் முதன்மையாக நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார்.[5] பொங்கலோ பொங்கல் (1997), சுந்தரா டிராவல்ஸ் (2002), வின்னர் (2003), இங்கிலீஷ்காரன் (2005), ஆறு (2005), மருதமலை (2007), கண்ணும் கண்ணும் (2008) ஆகிய படங்களில் நடித்ததற்காக இவர் நன்கு அறியப்பட்டார். [5] இவர் நடித்த படங்களில் ஒற்றை வரி வசனங்களுக்காக அறியப்பட்டார்.

ஆரம்பகால வாழ்க்கையும் தொழில் வாழ்க்கையும்

எம். மாரிமுத்து செட்டியார் - மகேசுவரி இணையரின் மகனாக போண்டாமணி 1963 செப்டம்பர் 15 இல் இலங்கையில் மன்னார் மாவட்டத்தில் பிறந்து, வளர்ந்தார்[6][7] இவருடன் உடன் பிறந்த 16 பேரில் இவர் 15 வது பிள்ளையாவர். 1983 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து படகு மூலம் தப்பிச் செல்ல இவரது தாயாரும் இவரது எட்டு சகோதரர்களும் முயன்றனர். ஆனால் இலங்கை உள்நாட்டுப் போரின் உச்சக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தால் வீசப்பட்ட குண்டுவெடிப்பில் இவர்களின் படகு கவிழ்ந்ததில் அவர்கள் இறந்தனர்.[8]

தன் இளம் வயதிலேயே தன் பெற்றோரை இழந்து[4] இலங்கையில் தனது துவக்ககால குழந்தைப் பருவத்தைக் கழித்தார். தன் பள்ளிப் பருவத்தில் மன்னாரில் மறுமலர்ச்சி விநாயகர் கலா மன்றம் என்ற பெயரில் மன்றமொன்றை தொடங்கி நண்பர்களோடு கலைநிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். பிறகு இவர் இந்தியாவுக்குச் சென்றார்.[8] இவர் எம். ஜி. ராமச்சந்திரனின் தீவிர ரசிகராக வளர்ந்தார்.

குமுதத்துக்கு அளித்த ஒரு பிரத்யேக நேர்காணலில், தான் முகவரால் ஏமாற்றப்பட்டதாகவும், அவர் தமிழ்நாட்டில் வேலை வாங்கித் தருவதாக உறுதியளித்ததாகவும், ஆனால் ஐந்து ஆண்டுகள் சிங்கப்பூரில் தங்க வேண்டிய ஒப்பந்தத்தில் போண்டா மணியை கையெழுத்திடச் செய்ததாகவும் கூறப்படுகிறது.[8] சிங்கப்பூருக்கு ஒரு கலை நிகழ்சிக்கு வந்திருந்த, கே. பாக்யராஜை சந்திக்க இவருக்கு ஒரு நேரத்தில் வாய்ப்பு கிடைத்தது, அவரிடம் திரைப்படத்தில் நடிக்கக் கேட்டார், அதை பாக்யராஜ் மறுத்துவிட்டார். மணி பாக்யராஜின் முகவரியையும் கேட்டார், அதை பாக்யராஜ் முதலில் கொடுக்க மறுத்துவிட்டார். சென்னையில் தன்னைச் சந்தித்து நிலைமையை தெளிவுபடுத்துமாறு மணியிடம் பாக்யராஜ் கேட்டுக் கொண்டார்.

பின்னர் இவர் மற்ற தமிழர்களுடன் சேர்ந்து தமிழ்நாட்டிற்கு ஏதிலியாக வந்து, திரைப்பட வேடங்களில் நடிக்கவும் 1983 இல் முடிவு செய்தார்.[8][9] பின்னர் இவர் சிதம்பரம் சோழகன்பேட்டை அகதி முகாமில் வசித்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டடவேலையில் சித்தாளாக வேலை பார்த்தார். சென்னையில் ராமச்சந்திரா மருத்துவமனை கட்டடவேலைக்கு ஆட்கள் தேவைப்பட்டதை அறிந்து அங்கு சென்றால் பட வாய்ப்புத் தேடலாம் என்ற எண்ணத்தில் வேலைக்குச் சென்றார்.

மணி ஏழு ஆண்டுகள் தமிழ் திரைப்படத் துறையில் நுழைய முயன்றதாகத் தெரிகிறது, ஆனால் அவரது முயற்சிகள் பலனளிக்கவில்லை.[8] 1987 இல் இலங்கையில் போர் நிறுத்தம் தொடங்கியதை அடுத்து இலங்கை திரும்பினார். 1990 இல் இலங்கை வவுனியா தொடருந்து நிலையத்துக்கு அருகில் "லதா ஸ்டோர்ஸ்" என்று பெயரில் கடை நடத்தினார். மீண்டும் உள்நாட்டுப் போர் துவங்கியதார் தமிழர்கள் தாக்கபட்டனர். இதனால் இவரது தொடையில் குண்டு காயங்கள் ஏற்பட்டன. இவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். விடிந்தால் தான் கொல்லப்படுவதா கேள்விபட்டார். இதனால் அங்கிருந்து தப்பி தலைமன்னார் வழியாக தமிழ்நாட்டுக்குத் தப்பி வந்து சேலத்தின் எடப்பாடியில் உள்ள ஒரு அகதி முகாமில் சேர்ந்தார்.[8][3]

திரைத்துறையில்

1980களில் சிங்கப்பூரில் பணிபுரிந்தபோது, ​​இயக்குனர் கே. பாக்யராஜிடம் வாய்ப்பு கேட்ட நிலையில், அவர் படப்பிடிப்புகாக எடப்பாடிக்கு வந்தபோது பாக்யராஜை மீண்டும் சந்தித்தார். அதன் விளைவாக பவுனு பவுனுதான் (1991) படத்தில் துணை வேடத்தில் நடித்தார்.[10] சென்னைவந்து மு. மேத்தா தயாரித்த தென்றல் வரும் தெரு (1994) படத்தில் மணி நடித்தார். தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாததால் பாண்டிபசார் சாலையோர வணிகர்கள் சங்கத்தில் இரவுக் காவலராக இருந்தார்.

வி. சேகரின் ஒண்ணா இருக்க கத்துக்கணும் படத்தில் கவுண்டமணி செந்தில் ஆகியோருடன் நடித்தார் அது இவருக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. மேலும் அந்தத் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. ஒண்ணா இருக்க கத்துக்கணும் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் அதை இயக்குநர் ஜெய்சுந்தரிடம் இவர் தெரிவித்து, நாளை கவுண்டமணியுடன் நடிக்கபோகிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அப்போது ஜெய்சுந்தர் சரி சாப்பிட்டாயா என்று கேட்க அதற்கு கேதீஸ்வரன் இப்போதுதான் போண்டா சாப்பிட்டேன் என்றார். அபோது ஜெய்சுந்தர் பசிக்கு போண்டா சாப்பிட்டார் நாளை கவுண்டமணியுடன் நடிக்கிறார். எனவே இரண்டையும் சேர்த்து போண்டா மணி என்று திரைப்பெயரை வைத்துக் கொள்ளும்படி பரிந்துரைத்தார். அதே பெயரை தன் திரைப்பெயராக மாற்றிக் கொண்டார். பின்னர் இவர் ராஜ் டிவி தொலைக்காட்சித் தொடரான ​​கங்கா யமுனா சரஸ்வதி (1998) இல் தொலைக்காட்சியில் அறிமுகமானார், அங்கு அவர் எம். எஸ். விஸ்வநாதன் உள்ளிட்ட மூத்த நடிகர்களுடன் நடித்தார்.[8]

நடிகர் வடிவேலுவுடன் இவரது மறக்கமுடியாத பல நகைச்சுவைக் காட்சிகளில் தோன்றினார். இயக்குனர் சுராஜ் மற்றும் நடிகர் அர்ஜுன் ஆகியோர் மருதமலையில் பிச்சைக்காரன் வேடத்தில் நடிக்க இவரை வற்புறுத்தினர், ஆனால் இவரது வழிகாட்டியான வடிவேலு அத்தகைய வேடங்களில் இனி நடிக்க வேண்டாம் என்று கூறினார், இதுபோன்ற வேடங்களில் நடிப்பதனால் ஏற்படும் மோசமான விளைவுகளை விளக்கினார்.[8] இவர் வடிவேலு, விவேக் ஆகிய இருவருடனும் நல்ல தோழமையைப் பேணி வந்தார், மேலும் தனது வாழ்க்கையில் வளர உதவியதற்காக வடிவேலு, விவேக் ஆகிய இருவருக்கும் பாராட்டு தெரிவித்தார்.[11]

திரைப்படங்களில் குறிப்பாக வடிவேலுவுடன் இணைந்து நடித்தபோது பேசிய வசனங்கள் புகழ்பெற்றன, அதில் "அண்ணே எதுவும் சொல்லிடாதீங்க அடிச்சுக் கூடா கேப்பாங்க சொல்லிடாதீங்க",[12] மேலும் இங்கிலீஷ்காரன், ஆறு, மருதமலை போன்ற படங்களில் இவரது வசனங்கள் புகழ்பெற்றன. அவ்வப்போது திருமலை (2003) படிக்காதவன் (2009) உள்ளிட்ட படங்களில் விவேக்குடன் இணைந்து பணியாற்றினார். மேலும், வடிவேலுவுடன் இணைந்து பணியாற்றினால்தான் போண்டா மணி அதிக அங்கீகாரத்தையும் புகழையும் பெறுவார் என்று விவேக் அறிவுறுத்தினார்.[8]

போண்டா மணி "சாய் கலைக் கூடம்" என்ற நாடகக் குழுவை நடத்தி நாடக நிகழ்ச்சிகளை நடத்திவந்தார்.[13] எங்க வீட்டு மீனாட்சி (2021) தொடரின் வழியாக மீண்டும் தொலைக்காட்சிக்கு திரும்பினார், அதில் இவர் ஒரு பாம்பாட்டி வேடத்தில் நடித்தார்.[14]

தனிப்பட்ட வாழ்கை

2016 சூனில், போண்டா மணி சில தி.மு.க தொண்டர்களுடன் அ.இ.அ.தி.மு.க கட்சியில் இணைந்தார். போண்டா மணி முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து அதிகாரப்பூர்வமாக கட்சியில் இணைந்தார்.[15] 2020 ஆம் ஆண்டில், இவருக்கு இலங்கை கடவுச் சீட்டுக் கிடைத்தது, ஆனால் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வெளிநாடு செல்ல விரும்புவதாக இலங்கை அதிகாரிகளிடம் கூறினார்.[12] இவர் இந்திய குடியுரிமை பெறவில்லை, இறக்கும் வரை இந்தியாவில் அகதியாகவே இருந்தார், மேலும் இந்திய குடியுரிமை பெறாததால் வெளிநாடு செல்ல முடியவில்லை.[4]

இறப்பு

மணிக்கு 2022 ஆம் ஆண்டு வாக்கில் உடல்நிலை மோசமடைந்தது கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன. மேலும் இவருக்கு நீரிழிவு நோய் ஏற்பட்டது. 2022 ஆம் ஆண்டு ஒரு பேருந்து பயணத்தின் போது மயங்கி விழுந்தார். இவருக்கு இருந்த கட்டுப்பாடற்ற நீரிழிவு நோயால் இவரது சிறுநீரகங்கள் செயலிழக்க தொடங்கின. வறுமையில் இருந்த போண்டா மணியால் மருத்துவ செலவுகளை ஈடுகட்ட முடியவில்லை, பலரிடம் உதவி கேட்டு காணொளி பதிவு செய்து வெளியிட்டு வந்தார். நடிகர்கள் தனுஷ், விஜய் சேதுபதி் , ரஜினிகாந்த் ஆகியோர் உதவி செய்தனர், ஆனாலும் மாற்று சிறுநீரகங்கள் கிடைக்காமல், டயாலிசிஸ் செய்து வந்தார். அதுவும் பணப் பற்றாக்குறையால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. இதனால் வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார் போண்டா மணி‌. ஆனால் 2023 திசம்பர் 23 அன்று தனது வீட்டில் மயங்கி சுயநினைவை இழந்து விழுந்துள்ளார்‌. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு வயது 60 .[16]

நடித்த திரைப்படங்களில் சில

தொலைக்காட்சித் தொடர்

மேற்கோள்கள்

  1. "Bondamani (a.ka) Kedhesvaran - Official Site of South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam". www.nadigarsangam.org.
  2. "போண்டா மணி பெயர் வந்தது எப்படி? உண்மையான பெயர் என்ன தெரியுமா?" [How did he get the name Bonda Mani? Do you know what his real name is?]. News18. 24 December 2023. Archived from the original on 24 December 2023. Retrieved 4 April 2024.
  3. 3.0 3.1 "Tragedy continues in film industry... Actor Bonda Mani passes away..." indiaherald.com (in ஆங்கிலம்). Retrieved 24 December 2023.
  4. 4.0 4.1 4.2 Bonda Mani and Pudhupettai Suresh's Emotional Moment Stole the Show at the Golden Carpet Awards (in ஆங்கிலம்), retrieved 24 December 2023
  5. Dinamalar (16 January 2017). "என் மீது அதிக பாசம் கொண்டவர் வடிவேலு! -நடிகர் போண்டாமணி – vadivelu has more affection on me says actor bonda mani".
  6. http://geniusreporter.com/?p=2732 வாழ வைத்த தமிழகம் – நடிகர் போண்டா மணி வாழ்க்கை வரலாறு
  7. "Bondamani (a.ka) Kedhesvaran – Official Site of South Indian Artists Association, Nadigar Sangam, Tamil Nadigar Sangam". www.nadigarsangam.org.
  8. 8.0 8.1 8.2 8.3 8.4 8.5 8.6 8.7 8.8 Bonda Mani Emotional Untold Story | Sri Lanka to Tamil Cinema | Kumudam | Naan Yaar (in ஆங்கிலம்), retrieved 24 December 2023
  9. Bureau, The Hindu (24 December 2023). "Tamil actor-comedian Bonda Mani passes away" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/tamil-actor-comedian-bonda-mani-passes-away/article67671341.ece. 
  10. Thandora (3 April 2015). "Exclusive interview with Bonda Mani Movie Comedian" – via YouTube.
  11. Desk, HT Tamil. "Bonda Mani: 'என் வீட்ல தங்கி சாப்பிட்ட நன்றி இருக்கா சூரிக்கு?' -போண்டா மணி!". Tamil Hindustan Times. Retrieved 24 December 2023. {{cite web}}: |last= has generic name (help)
  12. 12.0 12.1 "Actor Bonda Mani passes away". The Times of India. 25 December 2023. https://timesofindia.indiatimes.com/city/chennai/actor-bonda-mani-passes-away/articleshow/106258125.cms. 
  13. "Tamil Comedian Bonda Mani – Nettv4u".
  14. "Actors Vijayakumar and Bonda Mani to make television comeback after a break". The Times of India. 4 February 2022. https://timesofindia.indiatimes.com/tv/news/tamil/actors-vijayakumar-and-bonda-mani-to-make-television-comeback-after-a-break/articleshow/89344775.cms. 
  15. "தி.மு.க. நிர்வாகிகள் – நடிகர் போண்டா மணி ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் சேர்ந்தனர் – DMK administrators actor bonda mani Jayalalithaa before join AIADMK". www.maalaimalar.com.
  16. நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார், தினத்தந்தி, 24 திசம்பர் 2023

வெளி இணைப்புகள்

[1]

"https://tamilar.wiki/w/index.php?title=போண்டா_மணி&oldid=455326" இலிருந்து மீள்விக்கப்பட்டது