பண்டைத் தமிழகத்தின் பொருளியல் நிலை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
புதுக்கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய ரோம நாணயங்கள்

பண்டைத் தமிழகத்தின் பொருளியல் நிலை என்பது கி.மு. 200 முதல் கி.பி. 200 வரையிலான காலத்தில் தமிழக நிலப்பகுதியில் அமைந்திருந்த பொருளியல் நிலையையும் கூறிகளையும் குறிக்கும். வேளாண்மை, நெசவு, முத்துக் குளித்தல், இடுபொருட்களைக் கொண்டு பயன்படு பொருட்களைச் செய்யுதல், கட்டுமானம் ஆகியன முதன்மையான தொழில்களாக இருந்தன. பல பகுதிகளில் நெற்பயிர் வேளாண்மை ஓங்கியிருந்தது. அதுவே மிகுதியாக உட்கொள்ளப்பட்ட உணவுப் பொருளாகவும் உள்நாட்டு வணிகத்தில் பண்டமாற்றுப் பொருளாகவும் இருந்தது. மிளகு, கம்பு, சோளம், பருப்பு வகைகள், கரும்பு ஆகியனவும் அதிக அளவில் பயிரிடப்பட்டன. மதுரையும் உறையூரும் ஆடைத் தொழில் மையங்களாகவும், கொற்கை நகர் முத்து வணிக மையமாகவும் விளங்கின.

உள்நாட்டு வணிகம் பெரும்பாலும் பண்டமாற்று முறையிலேயே நடைபெற்று வந்தது. வணிகர்கள் குழுக்களாக இயங்கி ஆட்சியாளர்களின் தலையீடின்றி பணியாற்றி வந்தனர். பண்டைத் தமிழக மக்கள் உரோமர்களுடனும் கடல்கடந்த வணிகத்தில் ஈடுபட்டிருந்தனர். தமிழகத்திலிருந்து எகிப்திற்கு பருவக்காற்றின் துணையோடு செல்வதற்கான நேரடி கடல்வழி கண்டுபிடித்தபின் இவ் வணிகம் மேலும் சிறப்பாக நடக்கத் துவங்கியது. மிளகு, முத்து, யானைக் கோடு, ஆடைகள், தங்க அணிகள் ஆகியவை தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. கண்ணாடி, பவளம், வைன் மது, மஞ்சற்குருந்தம் (புட்பராகம்) முதலியன இறக்குமதி செய்யப்பட்டன. வெளிநாட்டு வணிகத்தின் பயனாக பெருமளவு உரோம்ப் பணம் கிடைத்தது. அது பன்னாட்டு வணிகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாணயமாக இருந்தது.

ஆட்சியாளர்கள் குடிமக்களிடம் வரி பெற்று சாலைகள், துறைமுகங்கள் முதலியவற்றைக் கட்டினர். செல்வம் பலதரப்பட்ட மக்களிடம் வெவ்வேறு அளவுகளில் இருந்தது. இதனால் மக்களிடையே பல பொருளியல் தட்டுகள் உருவாயின.

வேளாண்மை

வேளாண்மை தமிழரின் முதன்மையான தொழிலாகவும் மிகுந்த மதிப்பிற்குறிய தொழிலாகவும் இருந்தது.[1][2] வேளாளர்கள் மண் வகைகளைப் பற்றியும், வெவ்வேறு நிலப்பகுதியில் விளையத்தகுந்த பயிர்களைப் பற்றியும், நீர் பாய்ச்சும் முறைகளைப் பற்றியும் நன்கு அறிந்திருந்தனர். சங்க இலக்கியங்களில் வகுத்துச் சொல்லிய ஐவகை நிலங்களில் மருத நிலமே வேளாண்மை செழிக்கும் நிலமாக இருந்தது. நிலங்களை மென்புலம், பின்புலம், வன்புலம், உவர்நிலம் என்று வகுத்து வைத்திருந்தனர். வண்டல் மண், செம்மண், கரிசல் மண், மணல் போன்ற மண் வகைகளை அறிந்திருந்தனர்.[3]

கம்பங்காடு

தமிழர் நெல், கரும்பு, தினைகள், மிளகு, பருப்பு வகைகள், தேங்காய், அவரை, சோளம், பருத்தி, வாழை, புளி, சந்தனம் ஆகியவற்றை விளைவித்தனர். வெந்நெல், செந்நெல், புதுநெல், ஐவனநெல், தொரை போன்ற நெல் வகைகள் இருந்தன. வேளாண் தொழிலாளர்கள் வயற்காடுகளின் அருகிலேயே குடியிருந்தனர். வீடுகளைச் சுற்றி பலா, தென்னை, பனை, பாக்கு, வாழை, மஞ்சள் முதலியவற்றை வளர்த்தனர். நல்ல விளைச்சலைப் பெறுவதற்கு உழவு, உரமிடுதல், களையெடுத்தல், நீர்பாய்ச்சுதல் ஆகியவை முறையாகச் செய்யப்பட வேண்டும் என்று நம்பினர்.[4] வேளாண்மைக்குத் தேவையான கருவிகள் செய்யப்பட்டன. மெலி, நாஞ்சில் என்ற பெயர்களில் அழைக்கப்பட்ட கலப்பை முதன்மையான கருவியாக இருந்தது. மாடுகளை ஏரில் பூட்டி களையெடுக்கம் முறையைப் பள்ளியாடுதல் என்றழைத்தனர். கவட்டை முதலியவற்றைக் கொண்டு பயிர்களை மேய வரும் பறவைகளை விரட்டினர்.[5] விளைந்த பயிர்களை அறுக்க கதிர் அரிவாள்கள் பயன்படுத்தப்பட்டன. இப்பகுதியில் இருந்த ஆறுகள் பருவ ஆறுகளாக இருந்தபடியால் நீர்பாய்ச்சுதலுக்கு பல முறைகள் வகுக்கப்பட்டன. கபிலை என்ற அமைப்பில் மாடுபூட்டியும், ஏற்றங்களை மனிதர்கள் இயக்கியும் கிணறுகளில் இருந்து நீரை இறைத்தனர். கண்மாய்கள், குளங்கள், அணைகள் ஆகியவற்றில் நீரைத் தேக்கி, வாய்க்கால்கள் வழியாக வயல்களுக்குப் பாய்ச்சியும் வந்தனர்.[6] காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட கல்லணை உலகிலேயே மிகப்பழைய அணைகளில் ஒன்றாகும்.[7][8][9] பாத்தி கட்டி நீர் நிரப்புதல் வழியாகவும் சொட்டுநீர்ப்பாசனம் மூலமாகவும் நீரை மிச்சப்படுத்தினர்.[10]

பெரும்பாலான வேளாளர்கள் தம்முடைய சொந்த நிலங்களில் பயிர் செய்தனர். இவர்களை உழுதுண்பர், ஏரின்வளனர், வெள்ளாளர், கரலர், கலமர் என்ற பெயர்களில் அழைத்தனர்.[11] இவர்களைத் தவிர பலர், குறிப்பாக பிராமணரும் கவிஞர்களும், மன்னர்களிடமிருந்து வெகுமதியாகப் பெற்ற நிலங்களை மற்றவர்களுக்குக் குத்தகையின் பேரில் தந்து வைத்தனர். அடியார் என்றழைக்கப்பட்ட தொழிலாளர்கள் மற்றவர் நிலங்களில் சம்பளத்திற்காக வேலைக்கமர்த்தப்பட்டனர். நிலத்தின் பேரில் கரையும் விளைச்சலின்மீது வரியும் செலுத்தினர். விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு வரி விதிக்கப்பட்டது.[12] வரியா அல்லது காவிடி எனப்பட்டோர் வரிகளை மக்களிடமிருந்து தண்டல் செய்தனர். ஆயக்கணக்கர்கள் இவர்களுக்குத் துணையாகக் கணக்கில் ஈடுபட்டனர்.

தொழில்

சங்ககாலத்தில் கைத்தொழிலும் பிற தொழில்களும் வேளாண்மைக்கு அடுத்தபடியாக இரண்டாம் தரமாகவே கருதப்பட்டன. தச்சர்கள் மரத்தினாலான பொருட்களையும், இரும்புக் கொல்லர்கள் பட்டறைகளில் இரும்பினாலான பொருட்களையும் செய்தனர். நெசவு, முத்துக் குளித்தல், பட்டறைப்பணிகள், கப்பல் கட்டுதல் ஆகியன அதிக அளவில் நடைபெற்று வந்தன. நூல் நூற்றலும் நெசவும் துணை வருமானம் தந்தன. வேளாளர்களும் தம் பணிநேரம் போக மீதி நேரத்தில் இந்தத் தொழில்களில் ஈடுபட்டனர். மதுரையும் உறையூரும் பருத்தி ஆடைகளுக்குப் பகழ்பெற்ற தொழில் நகர்களாக விளங்கின. மென்றுணி அல்லது சல்லாத் துணி எனப்படும் மசிலினை அழகான பல வண்ண பூ வேலைப்பாடுகளுடன் நெய்து வைத்தனர். பட்டினாலான ஆடைகளும் செய்யப்பட்டன. செல்வந்தர்களுக்கென தையல் வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடைகள் செய்யப்பட்டன. துணிகள் சாயத்தில் நனைக்கப்பட்டு வண்ணம் ஏற்றப்பட்டன. இவை தவிர சிராய் மரவுரி என்ற மரநாரினாலான ஆடைகள் செய்யப்பட்டு அர்ச்சகர்களால் அணியப்பட்டன.[13] நெடிய அளவில் துணிகளை நெய்து மொத்த வணிகர்களிடம் சேர்த்தனர். அவ்வணிகர்கள் விற்பனையின்போது அவற்றைத் தேவையான நீளத்திற்கு வெட்டி விற்றனர். இவை அறுவை அல்லது துணி எனப்பட்டன. இதனால், இவ்வணிகரை அறுவை வணிகர் என்றும், இவர்கள் வசித்த தெருக்களை அறுவை வீதிகள் என்றும் அழைத்து வந்தனர். துன்னக்காரர் என்றழைக்கப்பட்ட தையல் கலைஞர்கள் மதுரை போன்ற பெரு நகரங்களில் ஆடைகளைத் தைத்து வந்தனர்.[14]

பண்டைத் தமிழகத்தில் முத்துக்குளித்தல் ஒரு முக்கிய தொழிலாக இருந்தது.

முத்துக்குளித்தல் சங்ககாலத்தில் ஓங்கியிருந்தது. பாண்டிநாட்டின் துறைமுக நகரான கொற்கை முத்து வணிகத்தின் ஒரு முக்கிய மையமாக இருந்தது. இது தொடர்பான தகவல்களை கிரேக்க எகிப்து கடல் பயணிகளின் எழுத்துக்களில் இருந்த அறியலாம். சுறா மீன்களிடம் இருந்து தப்புவதற்கு மீனவர்கள் வலம்புரிச் சங்குகளைக் கொண்டு ஒலி எழுப்பியதாக ஒரு குறிப்பு தெரிவிக்கிறது.[15] குற்றவாளிகளை தண்டிக்கும் விதமாக முத்துக் குளிப்பவர்களாகப் பணியமர்த்தினர். முத்துக்களை சல்லாத் துணியில் சுற்றி உரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்தனர். உரோமர்கள் இறக்குமதி செய்ததிலேயே விலை மிகுதியானது இம்முத்துக்களே.[16] வட இந்தியாவிலும் பாண்டி நாட்டு முத்துக்களுக்கு பெரிய வரவேற்பு இருந்தது. மறைகளிலும் பல இடங்களில் முத்துக்களாலான அணிகளைப் பற்றிய பாக்கள் உள்ளன. வட இந்தியாவின் நுகர்தேவை மிகுதியாக இருந்ததால் கங்கையாற்று முத்துக்கள் போதவில்லை.[17]

இரும்புக் கொல்லர்கள் தம் பணிக்களரிகளில் போர்க்கருவிகள், கலப்பை, வீட்டுப் பயன்பாட்டு ஏனங்கள், இரும்பு ஆழிகள் போன்றவற்றைச் செய்தனர். ஊதுகுழல் அல்லது துருட்டி கொண்டு நெருப்பேற்றி மாழைகளை உருக்கினர். இவர்கள் பல சிற்றூர்களின் தேவைக்கும் பொருட்களை ஆக்க வேண்டியிருந்ததால் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது.[18] கப்பல் கட்டுவதும் பண்டைத் தமிழகத்தில் ஒரு முக்கிய தொழிலாக இருந்தது. கட்டுமரங்களில் இருந்து பெரும் கப்பல்கள் வரை செய்தனர். அம்பி, படகு, திமில் ஆகியன ஆற்றைக் கடத்தலுக்கும் மீன்பிடித்தலுக்கும் பயன்பட்டன. பகரி, ஓடம், தோணி, தெப்பா, நவை ஆகியன சிறியவை. பெரிய கப்பல்களில் பாய்மரங்கள் இருந்தன.[19][20]

மீன்பிடித்தல், உப்பளங்கள், மரம் வளர்ப்பு, மண்பானைகள் செய்தல், கயிறு திரித்தல், சங்கு பண்படுத்துதல், அணிகலன்களுக்கான கற்களை வெட்டுதல், போர்க்கருவிகளுக்கான தோல் உறைகள் செய்தல், நகை செய்தல், கருப்பட்டி ஆலைகள், கோயில் கட்டுதல், தேர் கட்டுதல், சிற்பம் வடித்தல், கூடை பிண்ணுதல் ஆகியன பிற தொழில்கள்.[21] [22]

உள்நாட்டு வணிகம்

=வெளிநாட்டு வணிகம்

=

ஆட்சியாளர்களின் பங்கு

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள் - திருக்குறள் 751

பொருளில்லாமல் தனிமனித வாழ்க்கை சிறப்பாக அமையாது என்பதுபோல அரசாங்கத்திற்கும் பொருள் இல்லாவிட்டால் சிறப்பாக இயங்க முடியாது என்கிறார் வள்ளுவர்.ஆக நாகரிகம் தொடங்கிய நாள் முதல் அரசர்கள் தங்களுக்குரிய பொருளை பலவாறு ஈட்டியுள்ளனர்.மக்களிடமிருந்து வரி என்ற பெயரில் அரசு பொருள் ஈட்டியுள்ளது என்பதற்கான சான்று சொற்கள் தமிழ்நூல்களில் காணக்கிடைக்கின்றன. இறை , திறை, ஆயம், கொண்டி, தெறுபொருள் போன்றவை அவற்றில் சில சொற்களாகும்.

தனிநபர் செல்வம்

குறிப்புகள்

  1. வெங்கட சுப்பிரமணியன். pp. p. 26. {{cite book}}: |pages= has extra text (help); Missing or empty |title= (help)
  2. "திருக்குறள்". திருக்குறள். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.
  3. பாலாம்பாள். pp. p. 60. {{cite book}}: |pages= has extra text (help); Missing or empty |title= (help)
  4. பிள்ளை, J.K. pp. pp. 50-51. {{cite book}}: |pages= has extra text (help); Missing or empty |title= (help)
  5. பிள்ளை, J.K. pp. p. 51. {{cite book}}: |pages= has extra text (help); Missing or empty |title= (help)
  6. பிள்ளை, J.K. pp. p. 51. {{cite book}}: |pages= has extra text (help); Missing or empty |title= (help)
  7. பாலாம்பாள். pp. p. 64. {{cite book}}: |pages= has extra text (help); Missing or empty |title= (help)
  8. சிங்கு, விசய் பி. (2003). Water Resources System Operation: Proceedings of the International Conference on Water and Environment. Allied Publishers. pp. p. 508. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 817764548X. {{cite book}}: |pages= has extra text (help); Unknown parameter |coauthors= ignored (help)
  9. ""This is the oldest stone water-diversion or water-regulator structure in the world"" (PDF). Archived from the original (PDF) on 2007-02-06. பார்க்கப்பட்ட நாள் 2007-05-27.
  10. பாலாம்பாள், p. 65
  11. பாலாம்பாள், p. 61
  12. பாலாம்பாள். pp. p. 67. {{cite book}}: |pages= has extra text (help); Missing or empty |title= (help)
  13. வெங்கட சுப்பிரமணியம். pp. p. 86. {{cite book}}: |pages= has extra text (help); Missing or empty |title= (help)
  14. சுப்பிரமணியன். Sangam Polity. pp. pp. 240-241. {{cite book}}: |pages= has extra text (help)
  15. Caldwell, Robert (1881). "A Political and General History of the District of Tinnevelly". pp. p. 20. பார்க்கப்பட்ட நாள் 2005-07-15. {{cite web}}: |pages= has extra text (help)
  16. வெங்கட சுப்பிரமணியம். pp. p. 55. {{cite book}}: |pages= has extra text (help); Missing or empty |title= (help)
  17. ஐயங்கார், P.T. சீனீவாச (2001). "History Of The Tamils: From the Earliest Times to 600 AD". Asian Educational Services. pp. p. 22. பார்க்கப்பட்ட நாள் 2007-07-15. {{cite web}}: |pages= has extra text (help)
  18. சுப்பிரமணியன். Sangam Polity. pp. p. 241. {{cite book}}: |pages= has extra text (help)
  19. சுந்தரராசன். pp. p. 85. {{cite book}}: |pages= has extra text (help); Missing or empty |title= (help)
  20. சுப்பிரமணியன். Sangam Polity. pp. p. 253. {{cite book}}: |pages= has extra text (help)
  21. சுப்பிரமணியன். pp. p. 356. {{cite book}}: |pages= has extra text (help); Missing or empty |title= (help)
  22. சிவத்தம்பி. pp. pp. 173-174. {{cite book}}: |pages= has extra text (help); Missing or empty |title= (help)

மேற்கோள்கள்

வார்ப்புரு:Col-1-of-2வார்ப்புரு:Col-2-of-2