கொற்கை
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. தமிழர்விக்கி நடையிலும் இல்லை. இதை மீள் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
கொற்கை வாழவல்லான் | |
---|---|
கிராமம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
மொழிகள் | |
• ஆட்சி | தமிழ் |
நேர வலயம் | இசீநே (ஒசநே+5:30) |
அருகாமை நகரம் | வாழவல்லான் |
கொற்கை என்பது பாண்டிய முடிக்குரிய இளவரசனின் இருப்பிடமாகும். பாண்டியர்களின் முதல்தலைநகரம் கொற்கை ஆகும். கொற்கை பாண்டியர்களின் முத்து நகரம்,பாண்டிய நாட்டு வணிகத் துறைமுகமாகவும்,பாண்டியர்களின் கப்பற்படைத் தளமாகவும் இருந்தது.
- சங்க இலக்கியங்களில் வங்கக் கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும்.
- கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம்.
- புகார் என்னும் காவிரிப்பூம் பட்டினம் – சோழநாட்டுத் துறைமுகம் பட்டினப்பாலை
- எயிற்பட்டினம் – ஓய்மானாட்டுத் துறைமுகம் சிறுபாணாற்றுப்படை [1]
- நீர்ப்பெயற்று – தொண்டைநாட்டுத் துறைமுகம் பெரும்பாணாற்றுப்படை [2]
கொற்கை முத்து சிறந்த முத்தாக அக்காலத்தில் மதிக்கப்பட்டது.[3][4]
கொற்கை விறற்போர்ப் பாண்டியன், மறப்போர்ப் பாண்டியர், வெற்றிவேல் செழியன் [5] முதலான பாண்டிய மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையில் இருந்து கொண்டு ஆண்டாலும் கொற்கை மக்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றி வைத்தான்.[6]
கடலலை குவிக்கும் முத்துக்கள் செல்வர் ஏறிவரும் குதிரைக் குளம்புக்குள் மாட்டி அவற்றிற்கு இடையூறாக அமையும் அளவுக்குக் கொட்டிக்கிடக்கும்.[7]
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வோர் தாம் உண்ணும் கள்ளுக்கு விலையாக முத்துக்களைத் தருவர்.[8]
முத்துக்குளிப்பது மட்டுமின்றி வலம்புரிச் சங்கு எடுக்கவும் அங்குள்ள ஆடவர் கடலில் மூழ்குவர்.[9]
அங்கு உப்பு விளைவிக்கும் குடும்பத்தைச் சேர்ந்த உமட்டியர் கிலுகிலுப்பையில் முத்துக்களைப் போட்டு ஆட்டித் தங்கள் குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவர்.[10]
இந்தக் கொற்கைத் துறையில் காலையில் மலரும் நெய்தல் பூப் போலத் தன் காதலியின் கண் இருந்தது எனக் காதலன் ஒருவன் பாராட்டுகிறான்.[11]
மறப்போர்ப் பாண்டியர் கொற்கையில் முத்துக்களைப் பாதுகாக்க வேங்கடமலைப் பகுதியிலிருந்து கொண்டுவந்த யானைகளைப் பயன்படுத்தினர்.[12]
கொற்கைப் பகுதியில் பரதவர் எனப்படும் குடிமக்கள் வாழ்ந்துவந்தனர். அந்தக் குடியைச் சேர்ந்த மகளிர் முத்துக்குளிக்கும் துறையை வழிபட்டு விழாக் கொண்டாடும்போது தழையாடை உடுத்திக்கொண்டு முத்துக்களையும், கிளிஞ்சல்களையும் கொட்டிப் படையல் செய்து மகிழ்ந்தனர்.[13]
கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியா வந்த கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் கொற்கையைக் கொல்கி என்று குறிப்பிட்டு அது பாண்டியர் ஆட்சிக்கு உட்பட்டிருந்ததாகவும் எழுதியுள்ளார்.[14]
இவற்றையும் பார்க்க
அடிக்குறிப்பு
- ↑ அடி 146-163
- ↑ அடி 311-345
- ↑ ஈண்டுநீர் முத்துப்படு பரப்பின் கொற்கை முன்றுறை - நற்றிணை 23
- ↑ கொற்கை முன்றுறை இலங்கு முத்து உறைக்கும் - ஐங்குறுநூறு 185
- ↑ பாண்டியன் நெடுஞ்செழியன் கோவலனைக் கொன்ற தன் குற்றத்தை உணர்ந்து உயிர் துறந்த பின்னர் கொற்கையில் இருந்த வெற்றிவேற் செழியன் என்பவன் மதுரை வந்து அரியணை ஏறினான். சிலப்பதிகாரம் காதை 27 உரைபெறு கட்டுரை.
- ↑ நற்கொற்கையோர் நசைபொருந - மதுரைக்காஞ்சி 138
- ↑ இவர்திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம் கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும் நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை - அகம் 130-11
- ↑ பரப்பில் பல்மீன் கொள்பவர் முகந்த இப்பி நார் அரி நறவின் மகிழ்நனைக் கூட்டும் - அகம் 296-10
- ↑ வலம்புரி மூழ்கிய வான்திமில் பரதவர் ஒலிதலைப் பணிலம் ஆர்ப்பக் கல்லெனக் கலிகெழு கொற்கை எதிர்கொள - அகம் 350-13
- ↑ நளிநீர் முத்தம் வாள் வாய் எருத்தின் வயிற்று அகத்து அடக்கி – உமட்டியர் – புதல்வரொடு கிலிகிலி ஆடும் - சிறுபாணாற்றுப்படை 62
- ↑ கொற்கைக் கோமான் கொற்கையம் பெருந்துறை வைகறை மலரும் நெய்தல் போல – கண் - ஐங்குறுநூறு 188
- ↑ வடவயின் வேங்கடம் பயந்த வெண்கோட்டு யானை மறப்போர்ப் பாண்டியர் அறத்தின் காக்கும் கொற்கை அம் பெருந்துறை முத்தின் அன்ன நகை - அகம் 27-9
- ↑ வினைநவில் யானை விறற்போர்ப் பாண்டியன் புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்துறை அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து தழையணி பொலிந்த – பழையர் மகளிர் பனித்துறை பரவ - அகம் 201-4
- ↑ 59. From Comari toward the south this region extends to Colchi, where the pearl-fisheries are; (they are worked by condemned criminals); and it belongs to the Pandian Kingdom. Beyond Colchi there follows another district called the Coast Country, which lies on a bay, and has a region inland called Argaru. At this place, and nowhere else, are bought the pearls gathered on the coast thereabouts; and from there are exported muslins, those called Argaritic. - The Periplus Maris Erythraei (or ‘Voyage around the Erythraean Sea’) is an anonymous work from around the middle of the first century CE written by a Greek speaking Egyptian merchant.