முற்காலப் பாண்டியர் அரசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

முற்காலப் பாண்டியர் அரசு (Early Pandyan Government) என்னும் கட்டுரை சங்ககாலப் பாண்டியர்களின் கீழும் முதலாம் பாண்டியப் பேரரசின் கீழிருந்த பாண்டிய நாட்டரசின் நிலம், ஊர்கள், நிர்வாகம், பொருளாதாரம், அதிகாரம், வணிகம் போன்றவைகளைப் பற்றிய தொகுப்பாகும்.

வேந்தனும் அமைச்சும்

பாண்டியர் நாட்டின் தலைவன் பாண்டிய வேந்தன் ஆவான்.[1] பாண்டியநாட்டின் ஆட்சிமுறை மரபுவழிப்பட்ட முடியாட்சி முறையாகும். பாண்டியர்கள் பலர் இளவயதிலேயே முடியாட்சி ஏற்றுள்ளனர். இதற்கு எடுத்துக்காட்டாக தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் இளவயதில் ஆட்சி ஏற்றதையும், "இளையராயினும் பகையரசு கடியும் செருமான் தென்னர் குலம்" என்பது போன்ற புறநானூற்றின் வரிகளையும் (புறம் 58) கொள்ளலாம். பாண்டியர்கள் வயது முதிர்ந்து இறக்கும் தருவாய் வரை ஆட்சி செய்துள்ளனர். பாண்டியநாட்டின் வேந்தன் கடவுளுக்கு இணையாக வைக்கப்பட்டான். பாண்டியரசின் சின்னம் கயல் மீன்கள் பொறித்த கொடியாகும். பாண்டியர் காசுகளிலும் இது அரசாங்க சின்னமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. பாண்டி நாட்டின் காசுகளிலும் அரசாங்க ஆணைகளிலும் அலுவல் காரியங்களிலும் ஏற்றுமதி இறக்குமதி பொருட்களிலும் கயற்சின்னம் பயன்படுத்தப்பட்டு வந்தது.[2]

பாண்டியர் அரண்மனையில் அமைச்சர்களும், மந்திரிகளும், தளபதிகளும், கணக்கர்களும் இருந்தனர். பாண்டிய வேந்தனின் அதிகாரம் ஐம்பெருங்குழுவால் வழிநடத்தப்பட்டது.[3][4][5] அதில் மக்கள் பிரதிதிகளும் பார்ப்பனர்களும், மருத்துவர்களும், கணியர்களும், அமைச்சர்களும் இருந்தனர். மக்கள் பிரதிகள் மாசனம் எனப்பட்டனர். மக்களின் உரிமைகளையும் சலுகைகளையும், வசதிகளையும் நிர்வகிப்போர் அவர்கள். பார்ப்பனர் சமய சடங்குகளை நடத்துபவர்களாகவும், மருத்துவர்கள் பாண்டிநாட்டு மக்களின் உடல்நலம் பேணுவோராகவும், கணியர்கள் பொதுநிகழ்ச்சி நிரல்களுக்கு நேரம் பார்ப்போராகவும் அரண்மனை கணியராகவும், அமைச்சர்கள் வரியையும் நிர்வாகத்தையும் கவனிப்போராகவும் இருந்தனர். எண்பேராயம் என்பது பாண்டிய நாட்டின் மக்கள் தொகுப்பாகும். எண்பேராயம் என்பதனைத் தொல்காப்பியம் எட்டுவகை நுதலிய அவையம் எனக் குறிப்பிடுகிறது. அதில் கரணத்தை நிர்வகிப்போரும், வாய்க்கடை காப்போரும், நகர மக்களும், படைத்தலைவர்களும், கிளைச்சுற்றத்தாரும், யானை வீரர்களும், குதிரை வீரர்களும், காவிதியரும் இருந்தனர்.[6][7]

நாட்டு நிர்வாகம்

பாண்டியநாட்டு தலைநகரான மதுரை மாநகரை பாண்டிய வேதனும் துணைத்தலைநகரான கொற்கை நகரை பாண்டிய இளவேந்தனும் ஆண்டனர். வேந்தன் பாண்டிய நாட்டை கூற்றங்களாகவும், நாடுகளாவும் பிரித்திருந்தான். கூற்றம் பெரும்பாலும் பாண்டிநாட்டு வேளிர்கள் கீழும் நாடு குறுநில மன்னர்கள் கீழும் சீறூர் மன்னர்கள் கீழும் இருந்தன. நாட்டு உட்பிரிவுகள் அனைத்திலும் தலைநகர் போல் ஊரும், ஊருக்கு வெளியே சேரியும் இருந்தன. ஒவ்வொரு சேரியிலும் தொழில் சார்ந்த மக்களே வாழ்ந்தனர்.[8]

பாண்டிய நாட்டு சிறுகுடி கிராமங்களை, ஊர் பெரியவர்களும் சிறுகுடித்தலைவர்களும் ஆண்டனர். சிற்றூர்கள் மன்றங்களாலும் அம்பலங்களாகவும் வழிநடத்தப்பட்டன. மன்றம் மரத்தடிகளிலும், அம்பலம் மேடைகளிலும் அறைகளிலும் நடந்தன. இவை நீதி, நிலக்கண்காணிப்பு, நிதி, வரி, சாலை பராமரிப்பு, நீர்பாசன வசதி என சிற்றூர்களுக்கு தேவையான அனைத்தையும் கவனித்துக்கொண்டன.[9]

நீதி

பாண்டிய நாட்டில் நிர்வாகம் தொடர்பாக தனி நீதிபதிகளும் வழக்குரைஞர்களும் இருந்தாலும் வேந்தனே குடிமைக்கும் குற்றத்துக்கும் உரிய உச்சநீதி மன்றத்தலைவன் போல் செயல்பட்டான். சிலப்பதிகாரத்தில் தவறான நீதி தந்ததற்காக உயிர் துறந்த பாண்டிய வேந்தனும்[10] குடும்ப விசயத்தில் தெரியாமல் தலையிட்டதற்காக கையை அரிந்துகொண்ட பொற்கைப்பாண்டியன் கதையும் பாண்டிய நாட்டு நீதிக்கு சிறந்த எடுத்துக்காட்டுகள். நிர்வாக நீதிபதிகள் படித்தவர்களாகவும் ஒளிவு மறைவற்று வாதம் புரிபவர்களாகவும் முதியவராகவும் அனுபவம் வாய்ந்தர்களாவும் தெரிந்தெடுக்கப்பட்டனர். அடமானம், வாடகை, குத்தகை, அறக்கட்டளை சொத்து நிர்வாகம், கடன், ஒப்பந்த மீறல் வழக்குகள் குடிமை சட்டத்துக்கு கீழும் திருட்டுல், கூடா ஒழுக்கம், தேசத்துரோகம் குற்றவியல் சட்டத்தின் கீழும் வந்தன.[11][12]

குற்றத்துக்கானத் தண்டனைகள் கடுமையானதாக இருந்தன. திருட்டு, கூடாவொழுக்கம், எதிரி நாட்டுக்கு ஒற்றறிதல் போன்றவை கண்டறியப்பட்டால் மரண தண்டனையும், பொய் சாட்சி சொன்னோருக்கு நாக்கை துண்டித்தலும் தண்டனையாக இருந்தன. தண்டனைகள் கடுமையானதாக இருந்ததால் குற்றங்களும் குறைவானதாகவே இருந்தன.[13][14] குற்றம் செய்தோரும், போர்க்கைதிகளும் சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டனர். கைதிகள் விலங்குகளால் பிணைக்கப்பட்டு சிறைக்காவலர்களால் கண்காணிக்கப்பட்டனர்.[15][16] சிறைவாசிகளை பண்டிகைகளின் போது விடுதலை செய்வதையும், சிலரை முத்துக்குளித்தலுக்கு அனுப்புதலும் பாண்டியநாட்டு வழக்கமாய் இருந்தன.[17]

மேற்கோள்கள்

  1. Subrahmanian. pp. 302, 305
  2. Subrahmanian. p. 307
  3. Husaini. p. 30
  4. Sastri. p. 28
  5. Kanakasabhai, V. p. 109
  6. Kanakasabhai, V. p. 110
  7. Sastri. p. 29
  8. Subrahmanian. p. 332
  9. Subrahmanian. p. 328.
  10. Subrahmanian. p. 312
  11. Balambal. pp. 52–54
  12. Subrahmanian. p. 314
  13. Kanakasabhai, V. pp. 111–112
  14. Balambal. pp. 52–53
  15. Subrahmanian. pp. 314–315
  16. Balambal. p. 51
  17. Balambal. pp. 52, 55

சான்றாதார நூல்கள்

  • Kanakasabhai, V (1904). The Tamils Eighteen Hundred Years Ago. Asian Educational Services, New Delhi.
  • Subrahmanian, N (1972). History of Tamilnad. Koodal Publishers, Madurai.
  • Balambal, V (1998). Studies in the History of the Sangam Age. Kalinga Publications, Delhi.
  • Husaini, Dr. S.A.Q. (1962). The History of the Pandya Country. Selvi Pathippakam, Karaikudi.
  • Sastri, K.A. Nilakanta (1972). The Pandyan Kingdom: From the Earliest Times to the Sixteenth Century. Swathi Publications, Madras.