தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்
தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ்ப் பண்பாட்டு மேன்மைக்கும் தொண்டாற்றிடும் தமிழறிஞர்கள், கவிஞர்கள், சமூக நீதிக்கு உழைத்திடும் பெரியோர்கள் போன்றவர்களில் சிலரைத் தேர்வு செய்து சான்றோர்கள் பெயரில் ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் தமிழ் வளர்ச்சி இயக்ககம் மூலமாக சில விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விருதுகளில் தமிழ்ச்செம்மல் விருது தவிர்த்த அனைத்து விருதுகளுக்கும் தமிழக அரசின் சார்பில் இந்திய ரூபாய் ஒரு இலட்சம் பரிசுத் தொகையாகவும், பொற்கிழி வழங்கி, தங்கப்பதக்கம் அணிவிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒருவர் வீதம் 32 தமிழறிஞர்கள் தேர்வு செய்யப்பட்டுத் தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்படுகிறது. இந்த விருதுக்குத் தமிழக அரசின் சார்பில் இந்திய ரூபாய் 25 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது.
வழங்கப்படும் விருதுகள்
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை திருவள்ளுவர் நாள் விருதுகள் மற்றும் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நாள் விருதுகள் என்று இரு பிரிவுகளில் விருதுகளை வழங்கி வருகிறது.
திருவள்ளுவர் நாள் விருதுகள்
திருவள்ளுவர் நாள் விருதுகளாகக் கீழ்க்காணும் 7 விருதுகள் வழங்கப்படுகின்றன. [1]
- திருவள்ளுவர் விருது
- மகாகவி பாரதியார் விருது
- பாவேந்தர் பாரதிதாசன் விருது
- தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது
- கி. ஆ. பெ. விசுவநாதம் விருது
- பெருந்தலைவர் காமராசர் விருது
- பேரறிஞர் அண்ணா விருது
சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நாள் விருதுகள்
சித்திரத் தமிழ்ப் புத்தாண்டு விருதுகளாகக் கீழ்க்காணும் 18 விருதுகள் வழங்கப்படுகின்றன.[2]
- தமிழ்த்தாய் விருது
- கபிலர் விருது
- உ. வே. சா விருது
- கம்பர் விருது
- சொல்லின் செல்வர் விருது
- உமறுப் புலவர் விருது
- ஜி. யு. போப் விருது
- இளங்கோவடிகள் விருது
- முதலமைச்சர் கணினித் தமிழ் விருது
- அம்மா இலக்கிய விருது
- மொழிபெயர்ப்பாளர் விருது
- சிங்காரவேலர் விருது
- அயோத்திதாசப் பண்டிதர் விருது
- மறைமலையடிகளார் விருது
- சி.பா. ஆதித்தனார் விருது
- அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் விருது
- காரைக்கால் அம்மையார் விருது
- தமிழ்ச்செம்மல் விருது
- தமிழறிஞர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளுடன் கபிலர் விருது, உ. வே. சா விருது எனும் இரண்டு புதிய விருதுகள் வழங்கப்படும் என்றும், தமிழ் வளர்ச்சிக்காக நமது நாட்டில் தொண்டாற்றும் தமிழ் அமைப்புக்கு ஆண்டுதோறும் தமிழ்த்தாய் விருது வழங்கப்படும் என்றும் தமிழ்நாடு சட்டப் பேரவையில் 2012 - 2013 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார்.[3] அதன்படி 2012 ஆம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று நடைபெற்ற தமிழ்ப் புத்தாண்டு விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா இந்த விருதுகளை வழங்கினார்.
மேற்கோள்கள்
- ↑ தமிழ் வளர்ச்சித் துறையின் திருவள்ளுவர் நாள் விருதுகள்
- ↑ தமிழ் வளர்ச்சித் துறையின் சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நாள் விருதுகள்
- ↑ "தமிழ் அறிஞர்களுக்கு 2 புதிய விருதுகள்" இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304133925/http://tamil.chennaionline.com/news/newsitem.aspx?NEWSID=b6e63c3e-3a20-45f2-8676-0bbb0ac88ad1&CATEGORYNAME=TCHN.