சு. முத்துலட்சுமி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சு. முத்துலட்சுமி
Muthulakshmi Reddy (ca 1912).jpg
பிறப்பு30 சூலை 1886
திருக்கோகர்ணம், புதுக்கோட்டை அரசாட்சி, பிரித்தானிய இந்தியா (தற்போது
புதுக்கோட்டை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)
இறப்பு22 சூலை 1968(1968-07-22) (அகவை 81)
மதராசு
(தற்போது சென்னை), தமிழ்நாடு, இந்தியா
அறியப்படுவதுசமூகப் போராளி, பெண் உரிமை தன்னார்வலர்,மருத்துவர், எழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
டி. சுந்தரரெட்டி
பிள்ளைகள்இராம்மோகன் கிருஷ்ணமூர்த்தி

சு. முத்துலட்சுமி (Muthulakshmi)(சூலை 30, 1886 - சூலை 22, 1968) ஆகிய இவர் முத்துலட்சுமி ரெட்டி என்று பரவலாக அறியப்படுகிறார். மருத்துவர், சமூகப் போராளி, தமிழார்வலர் என பன்முகங்களை கொண்டவர் முத்துலட்சுமி ஆவார். 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். இந்திய அரசாங்கத்தின் பத்மபூசண் விருதைப் பெற்றுள்ளார்.[1][2]

பிறப்பு

இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் திருக்கோகர்ணம் என்ற இடத்தில் 1886-ஆம் ஆண்டு நாராயண சாமி, சந்திரம்மாள் தம்பதியருக்கு மூத்த மகளாக பிறந்தார். இவரது தந்தையார் நாராயணசாமி பிரபல வழக்கறிஞர். பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர். தாயார் சந்திரம்மாள் பிரபல பாடகர். இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரின் தங்கைகள் சுந்தரம்மாள், நல்லமுத்து மற்றும் இவரின் தம்பி இராமையா ஆவர்.

சொந்த வாழ்க்கை

பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற நிலவிய காலக் கட்டத்தில், அதை உடைத்து 4 வயதில் திண்ணைப் பள்ளியில் தொடங்கி, தனது பள்ளிப்படிப்பை முடித்து, கல்லூரியில் பயில விரும்பிய முத்துலட்சுமிக்கு அவரது தந்தை பக்க பலமாக இருந்தார். வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு விடுதி வசதி இல்லை என்பதுடன் உள்ளூர் கல்லூரிகளில் பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடும் இருந்தது.

இந்தச் சூழலில் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் சேர 4.2.1904 அன்று விண்ணப்பித்தார். அப்போது சமஸ்தான ஆட்சியில் இருந்த அதிகாரிகளில், சில பழைமைவாதிகள் இதைக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளைத் தூக்கி எறிந்துவிட்டு, முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.

கல்லூரியில் சேர்ந்த பின், சிறிது காலம் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கல்வி தடைபட்டது. மேலும், அவரது தாய் சந்திரம்மாள் நோயால் சிரமப்பட்டு இறந்துபோனார். நோயும், அதன் கொடுமைகளையையும் நேரில் அனுபவித்ததால், மருத்துவராக வேண்டும் என்ற வைராக்கியம் அவருக்கு எழுந்தது.

இதைத் தொடர்ந்து, 1907 -ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த நாட்டின் முதல் பெண்ணான முத்துலட்சுமி படிப்பில் சிறந்து விளங்கி, ஒவ்வொரு ஆண்டும் சிறப்புச் சான்றிதழ்களும், தங்கப் பதக்கங்களும் பெற்று, 1912-இல் தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமையைப் பெற்றார்.[சான்று தேவை]

திருமணத்தில் ஆர்வம் இல்லை.[சான்று தேவை]அவருடைய விருப்பம் படிப்பிலும், சமூகப் பணியிலும் இருந்தது. இருப்பினும் சகோதர, சகோதரிகளின் வாழ்க்கையை மனத்தில் கொண்டு திருமணத்திற்குச் சம்மதித்தார். அவருடைய கணவர் டி. சுந்தரரெட்டி அடையாற்றில் அன்னிபெசன்ட் (Annie Beasant) அம்மையாரால் நிறுவப்பட்ட பிரம்மஞான சபையில், மூட நம்பிக்கைகள், அர்த்தமற்ற சடங்குகள் ஆகியவற்றைத் தவிர்த்து திருமணங்களை நடத்தி வந்தார். அங்கேதான் முத்துலட்சுமி - சுந்தரரெட்டி திருமணம் 1914-ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதத்தில் நடந்தது. இவருக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் இராம்மோகன் திட்டக்குழுவின் இயக்குநராகப் பணியாற்றினார். இரண்டாவது மகன் கிருஷ்ணமூர்த்தி, தாய் - தந்தையைப் போல ஒரு மருத்துவர். புற்றுநோய் நிபுணராக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையை நிர்வகித்து வருகிறார்.[3]

தமிழ்ப் பணிகள்

இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார். தமிழிசை இயக்கம், தமிழ் வளர்ச்சி, தமிழாசிரியர்களின் ஊதிய உயர்வுப் போராட்டம் எனத் தமிழ்ப் பணிகள் செய்தார். மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தருமம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக விளங்கினார்.

சமூகப்பணி

  • 1926-ஆம் ஆண்டு 43 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட அகில உலகப் பெண்கள் மாநாடு, பிரான்சு நாட்டுத் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அதில் இந்தியாவின் சார்பில் முத்துலட்சுமி கலந்து கொண்டார். அப்போது அவர் நிகழ்த்திய சொற்பொழிவில், ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் முன்னேற வேண்டும். பெண்களை அடிமைகளாக நடத்தும் வழக்கம் ஒழிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
  • இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் என்னும் பெருமையைப் பெற்றவர்.
  • சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர் என்னும் பெருமையும் இவருக்கு உண்டு.
  • அன்றைய சென்னை மாகாண சட்டசபைக்கு முத்துலட்சுமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் மூலம் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றார்.
  • 1925-ஆம் ஆண்டு சட்டசபைத் துணைத்தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த ஐந்தாண்டுளில் சில புரட்சி சட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றினார். அவற்றில், தேவதாசி முறை ஒழிப்பு,[4] இருதார தடைச் சட்டம்,பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கும் சட்டம், பால்ய விவாகங்களை தடை செய்யும் சட்டம் போன்ற சில குறிப்பிடத்தக்கவை.
  • அனாதையாக்கப்பட்ட குழந்தைகளை வளர்த்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க உருவானதே அவ்வை இல்லம் அடையாறில் அமைந்துள்ள இதனை அமைத்தவர் முத்துலட்சுமி.
  • சென்னையில் புற்றுநோய் மருத்துவமனை உருவாக்கினார். [5] அதற்காகப் பலவிதங்களிலும் நிதி திரட்டினார். இன்று புற்று நோயாளிகளுக்குப் புகலிடமாக விளங்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்குப் பிரதமர் நேரு 1952-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் இரண்டாவது பெரிய புற்றுநோய் மருத்துவமனையான இது சுமார் 80000 நோயாளிகளைக் குணப்படுத்தியுள்ளது.[6][7]

விருதுகள்

முத்துலட்சுமியின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956 இல் பத்ம பூஷன் விருது கொடுத்து கௌரவித்தது.[8]

மறைவு

முத்துலட்சுமி 1968-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி மறைந்தார். [9]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. Kamatchi, M. (2016). "Muthulakshmi Reddy: The First Medical Woman Professional in South India". Proceedings of the Indian History Congress 77: 612–623. பன்னாட்டுத் தர தொடர் எண்:2249-1937. https://www.jstor.org/stable/26552689. 
  2. "List of recipients of Padma Bhushan awards (1954–59)" (PDF). Ministry of Home Affairs (India). 14 August 2013. pp. 1–9. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 23 August 2015.
  3. "பாரதி கண்ட புதுமைப் பெண்". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 1 ஆகத்து 2014. p. 8. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2014.
  4. "தேவதாசி முறையை ஒழிக்கப் போராடிய முத்துலட்சுமி ரெட்டி குறித்து தெரியுமா?". BBC News தமிழ். 2020-08-20. பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  5. தினமணி கொண்டாட்டம், 2023 02 19 பக்.2
  6. "Adyar Cancer institute". Archived from the original on 2017-01-01. பார்க்கப்பட்ட நாள் 2021-10-17.
  7. Viswanathan, S. "The Pioneers: Dr Muthulakshmi". Frontline. The Hindu. பார்க்கப்பட்ட நாள் 26 April 2013.
  8. https://www.dinamani.com/editorial-articles/special-stories/2020/mar/08/womens-day-muthulakshmi-reddy-3376050.html
  9. "திராவிடத்தூண் தர்மாம்பாள்". Archived from the original on 2008-12-01. பார்க்கப்பட்ட நாள் 2009-01-03.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=சு._முத்துலட்சுமி&oldid=28215" இருந்து மீள்விக்கப்பட்டது