குகை நமசிவாயர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
குகை நமசிவாயர் 16 ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவராவார்.

குகை நமசிவாயர் 16-ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவராவார். [1] இவர் ஆந்திரத்தின் பகுதியில் பிறந்தவர், அண்ணாமலையாரின் அழைப்பினை ஏற்று திருவண்ணாமலைக்கு வந்தார். அங்குப் பல்வேறு அற்புதங்களை நிகழ்த்தினார். இவருடைய சீடர்களில் குரு நமச்சிவாயர் மற்றும் விருபாட்சித் தேவர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இவர் அண்ணாமலையில் பல்வேறு இடங்களில் மாறி மாறி தங்கியதாகவும், இறுதியாக அண்ணாமலையாரே தன்னுடைய மலையில் ஒரு குகையில் தங்கிக் கொள்ளுமாறு கூறக் குகையில் தங்கியதால் குகை நமச்சிவாயர் என்று அழைக்கப்படுகிறார். இவருடைய ஜீவ சமாதி அண்ணாமலையில் உள்ளது.


இளமையும் வாழ்வும்

நமச்சிவாயர், ஆந்திர மாநிலம் ஸ்ரீசைலம் எனும் பகுதியில் பிறந்தவராவார். [2]இவர் லிங்காயதம் எனும் சைவ பரம்பரையில், கன்னடத்தினைத் தாய்மொழியாகக் கொண்டிருந்தார். நமச்சிவாயரின் கனவில் அண்ணாமலையார் வந்து தென்திசைக்கு வரும்படி கோரினார். இதனால் நமச்சிவாயர் தன் முந்நூறு சீடர்களுடன் தெற்கு நோக்கி வந்தார்.

அவ்வாறு வரும் வழியில் திருமண வீட்டில் எரிந்த பொருளை மீட்டுதருதல், சிவனுக்குச் சூட்டிய மலர் மாலையைத் தன் கழுத்தில் விழும்படி செய்தல் போன்ற பல்வேறு அற்புதங்களைச் செய்து வந்தார்.

திருவண்ணாமலைக்கு வருதல்

திருவண்ணாமலைக்குச் சீடர்களுடன் வந்த நமசிவாயர், அண்ணாமலையார் கோயிலிலுக்குள் சென்று அங்குள்ள அண்ணாமலையாரை வணங்காமல் இருந்தார். இதனைக் கண்டு சிவாக்கிர யோகி நமச்சிவாயரைப் பிரம்பால் அடித்தார். நமசிவாயர், சிவாக்கிர யோகியைத் தன் குருவாக ஏற்றுக் கொண்டு, அவரைக் காணும் பொழுதெல்லாம் அன்பை வெளிப்படுத்தினார்.

திருவண்ணாமலையில் ஒரு குகையில் நமச்சிவாயர் தங்கினார். இதனால் நமச்சிவாயரைக் குகை நமச்சிவாயர் என்று மக்கள் அழைக்கத் தொடங்கினார்கள். தானும் தன் சீடர்களும் குளிக்க நான்கு குளங்களை நமச்சிவாயர் வெட்டினார். இதனைத் திருமுலைப்பால் தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், சங்கு தீர்த்தம், பாதத்தீர்த்தம் என்று அழைக்கிறார்கள்.

திருவண்ணாமலையிலிருந்த ஓர் ஆல மரத்தில் ஊஞ்சல் கட்டி இவர் தவம் இருந்தார் எனச் சிலர் கூறுகின்றனர்.

ஜீவ சமாதி

குகை நமச்சிவாயரின் அண்ணாமலையார் ஆலயத்தின் பின்புற கோபுரமான பேய் கோபுத்திற்கு அருகே, ஐந்து நிமிடத் தூரத்தில் மலையேறினால் குகை நமச்சிவாயரின் ஜீவ சமாதி ஆலயத்தினை அடையலாம். [3]

சீடர்கள்

குகை நமச்சிவாயர் முந்நூறு சீடர்களைக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களில் விருபாட்சித் தேவர் மற்றும் குரு நமசிவாயர் ஆகியோர் மிக முக்கியமானவர்களாவார்கள். [4] இவர் தமது சீடரான குரு நமச்சிவாயருக்குப் பெயர் சூட்டித் தில்லையில் திருப்பணி செய்யுமாறு அனுப்பிவைத்தார்.

நூல்கள்

இவர் பல்வேறு நூல்களை எழுதியதாகவும், அவற்றில் பல சரிவரக் கிடைக்காமல் போனதாகவும் கூறப்படுகிறது. தற்போது குகை நமச்சிவாயர் எழுதியதாகக் கிடைத்திருக்கும் பட்டியல்கள் கீழே..

  • அருணகிரி அந்தாதி
  • சாரப் பிரபந்தம்
  • திருவருணை தனி வெண்பா
  • அண்ணாமலை வெண்பா

அருணகிரி அந்தாதி, தனிவெண்பாமாலை ஆகியவை திருவண்ணாமலைப் புராணமாகிய அருணாசல புராணம் நூலோடு சேர்த்து அச்சிடப்பட்டுப் பயிலப்படுகின்றன.

இவற்றையும் பார்க்க

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 163. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. குகை நமசிவாயர்-திருவண்ணாமலை! - தினமலர் கோவில்கள் தளம்
  3. திருவண்ணாமலை குகை நமசிவாயர்
  4. திருவண்ணாமலை குகை நமசிவாயர் ஜூன் 27,2011 தினமலர் கோயிகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=குகை_நமசிவாயர்&oldid=27925" இருந்து மீள்விக்கப்பட்டது