அன்பே வா (2005 திரைப்படம்)
அன்பே வா | |
---|---|
இயக்கம் | கே. செல்வபாரதி |
தயாரிப்பு | ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி |
திரைக்கதை | கே. செல்வபாரதி |
இசை | டி. இமான் |
நடிப்பு | தென்றல் சிறீதேவிகா விவேக் |
ஒளிப்பதிவு | இராஜாராமன் |
படத்தொகுப்பு | பி. எஸ். வாசு சலீம் |
கலையகம் | டிராகன் மூவிஸ் தயாரிப்பு |
வெளியீடு | நவம்பர் 18, 2005 |
ஓட்டம் | 140 நமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அன்பே வா (Anbe Vaa) என்பது 2005 ஆண்டில் வெளிவந்த இந்திய தமிழ் திரைப்படம் ஆகும். கே. செல்வ பாரதி இயக்கிய இப்படத்தில் புதுமுகம் தென்றல், ஸ்ரீதேவிகா, விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். எம். எஸ். விஸ்வநாதன், எம். என். ராஜம், ரேகா, கே. தீபா அருணாசலம். சி. துரைப்பண்டியன் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். ஜெயந்தி கிருஷ்ணமூர்த்தி தயாரித்த இப்படத்திற்கு டி. இமான் இசை அமைத்துள்ளார். இந்த படம் 2005 நவம்பர் 18 அன்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படம் விவேக்கின் 150 வது படம் ஆகும்.[1]
கதை
சென்னையில் உள்ள கார்த்திக் (தென்றல்) ஒரு கலைக் கல்லூரியில் பயின்றுவருகிறார். அவர் தனது நண்பர்களுடனும் அவரது மாமா நந்தா ( விவேக் ) உடனும் குடித்து மகிழ்கிறார். கார்த்திக் ஒரு பணக்கார வாரிசின் ( ரேகா ) மகன். படிப்பை முடித்ததும், அவனது தாயார் அவனை திருமணம் செய்து கொள்ளவோ அல்லது அவர்களது நிறுவனத்தில் வேலை செய்யவோ வலியுறுத்துகிறார். ஆனால் கார்த்திக் தனது வீட்டை விட்டு வெளியேறி மாமாவை உடன் அழைத்துச் செல்கிறான். தங்குவதற்கு இடம் இல்லாமல், அவர்கள் வீடு திரும்புகிறார்கள். வேலைக்குப் போகும் பொறுப்பைத் தவிர்க்க விரும்பும் கார்த்திக் பெற்றோர் பார்த்து முடிக்கும் திருமணத்தை செய்துகொள்ள முடிவு செய்கிறான். மதுரையில், பிரியா தனது படிப்பை முடித்துவிட்டு தனது சொந்த கிராமத்திற்கு திரும்புகிறாள். அந்த சிறிய கிராமத்து வாழ்க்கையிலிருந்து தப்பிக்க பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணத்தை செய்துகொள்ள முடிவு செய்கிறாள். கார்த்திக்கும், அவனது குடும்பத்தினரும் பிரியாவை பெண் பார்க்க கிராமத்திற்கு வருகிறார்கள். கார்த்திக்கும், பிரியாவும் முதல் பார்வையில் காதல் கொள்கிறார்கள், திருமணத்துக்கு ஒப்புக்கொள்கிறார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தினரின் ஆசீர்வாதத்துடன் திருமணம் செய்துகொள்கிறார்கள். கார்த்திக் தன்னை பெரிதும் சர்ந்து இருப்பதாகவும் திருமணத்திற்குப் பிறகு, அவனை கவனித்துக் கொள்ளும்படி அவளிடம் நந்தா கூறுகிறார். அதேசமயம் பிரியாவின் குடும்பத்தினர் நந்தாவிடம் தன் மகள் கண்கலங்காமல் வாழவேண்டும் என்று வாக்கு பெறுகின்றனர். இல்லையென்றால் அவர்கள் தகுந்த பாடம் கற்பிப்பதாக எச்சரிக்கின்றனர்.
கார்த்திக்கும் பிரியாவும் சென்னையில் உள்ள ஒரு அடுக்ககத்திற்கு குடி செல்கின்றனர். இளம் தம்பதியினர் தங்கள் உறவில் ஒரு இடைவெளியையும், தனியுரிமையையும் பேண முடிவு செய்கிறார்கள். ஆனால் கார்த்திக்குடன் அதிகமான நெருக்கமாக இருக்க வேண்டும் என்று கார்த்திக்கின் தாய் பிரியாவை வற்புறுத்துகிறார். ஆனால் ஒரு வாரத்தில், இருவருக்கும் இடையில் சண்டை உருவாகிறது. இருவரும் பிரிய பிரியா தனது கிராமத்திற்குத் திரும்புகிறாள்.
நந்தா பிரியாவை வீட்டிற்கு திரும்பி வருமாறு சமாதானப்படுத்தி அழைத்துவருகிறார். மேலும் இளம் ஜோடிகளை ஒன்று சேர்க்க நந்தா பெரும் முயற்சி எடுக்கிறார். பிரியா தனது கணவரை வெவ்வேறு வழிகளில் கவர்ந்திழுக்க முடிவு செய்கிறாள். அவள் தனது கவர்ச்சியையும், சமையல் திறன்களையும் பயன்படுத்த முயற்சிக்கிறாள், ஆனால் அவளுடைய இரண்டு முயற்சிகளும் மோசமாக தோல்வியடைகின்றன. பிரியாவும் கார்த்திக்கும் பின்னர் ஒருவருக்கொருவர் சீண்டிக்கொள்ள தொடங்குகிறார்கள். ஒரு நாள் கட்டுப்பாட்டை மீறி, ஆத்திரமடைந்த கார்த்திக் அவளை கத்தியைக் கொண்டு மிரட்டுகிறான். பிரியா காவல் துறையை அழைக்கிறாள். காவல்துறையினர் கார்த்திக்கை கைது செய்கிறார்கள். நந்தா பிரியாவின் மனதை மாற்ற முயற்சிக்கிறார். ஆனால் அவள் அவனை அறைகிறாள். இந்த சம்பவத்திற்குப் பிறகு, விவாகரத்துக்கு கார்த்திக் விண்ணப்பிக்கிறான். அவர்களின் திருமண உறவைக் காப்பாற்றும் முயற்சியில், நந்தா தம்பதியினரை திருமண ஆலோசனை அமர்வுகளுக்கு அழைத்துச் செல்கிறார். ஆனால் அவர்கள் விவாகரத்து பெறுவதில் உறுதியாக உள்ளனர். விவாகரத்து நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக பிரியாவின் குடும்பத்தினர் ரவுடி கஜாவை ( கராத்தே ராஜா ) நாடுகின்றனர். பிரியாவின் தாத்தா பாட்டி ( எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் எம். என். ராஜம் ) ஆகியோரின் மணி விழாவில், வயதான தம்பதிகளும், நந்தாவும் திருமணத்தைப் பற்றிய பிரியாவின் எதிர்மறை எண்ணங்களை மாற்றக்கூடிய உணர்ச்சிபூர்வமான பேச்சை பேசுகின்றனர். இதன்பிறகு அவர்கள் தாத்தா பாட்டியிடம் அவர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்கிறார்கள். பிரியாவை காதலிக்கும் கஜா அவளைக் கடத்துகிறான். அவளைக் காப்பாற்றும்படி நந்தா வற்புறுத்துகிறார். சண்டையின்போது, நந்தா ஒரு அடியாளாள் குத்தப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கபட்டு காப்பாற்றப்படுகிறார். கார்த்திக் தனது குடும்பத்தினரின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக மிகவும் வருந்துகிறான். இந்த ஜோடி தங்கள் தன்முணைப்பை ஒதுக்கி வைத்துவிட்டு, அனைவரின் நலனுக்காகவும் ஒன்றுபட முடிவு செய்கிறனர்.
நடிகர்கள்
- தென்றல் கார்த்திக்காக
- சிறீதேவிகா பிரியாவாக
- விவேக் மதனாக
- ம. சு. விசுவநாதன் பிரியாவின் தாத்தாவாக
- எம். என். ராஜம் பிரியாவின் பாட்டி ராஜமாக
- ரேகா கார்த்திக்கின் தாயாக
- கே. தீபா அருணாச்சலம் இராமசாமியாக
- சி. துரைப்பாண்டியன் பிரியாவின் தந்தையாக
- எல். ஐ. சி. நரசிம்மன் அடுக்ககத் தலைவராக
- கராத்தே ராஜா கஜாவாக
- மனோபாலா கவுனசிலராக
- அருளரசன்
- நாகேந்திரன்
- பெரிய கருப்பு தேவர் கிராமத்தானாக
- செல்லதுரை கிராமத்தானாக
- செல் முருகன் காதல் கடிதங்களுடன் அலைபவனாக
- ஜிந்தா கிராமத்தானாக
- ஜுலி பிரியாவின் உறவினராக
- கிரிஜா
- கே. தேவி
- சிவா
- கோவை செந்தில்
- சிவநாராயணமூர்த்தி வீட்டு உரிமையாளராக
- சத்தியந்திரன்
- சாம்ஸ் வீட்டு உரிமையாளராக
- செல்வகுமார் வீட்டு உரிமையாளராக
- அம்பானி சங்கர் இளம்வயது நந்தாவாக
- ரிஷா சிறப்புத் தோற்றத்தில்
இசை
இப்படத்திற்கு டி. இமான் இசையமைத்தார்.[2]
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
---|---|---|---|---|
1. | "அலேக், அலேக்" | சுசித்ரா, டி. இமான் | 04:28 | |
2. | "கால் கொலுசு" | ஹரிஷ் ராகவேந்திரா, பல்ராம் | 04:32 | |
3. | "லோயலா" | பல்ராம் | 04:46 | |
4. | "நான் உன்னை" | சோபா சந்திரசேகர் | 04:05 | |
5. | "ஒலிப் லைலா" | கல்பனா டிம்மி | 04:40 | |
6. | "பிடிகவில்லைடா" | சிறீலேகா பார்த்தசாரதி, கார்த்திக் | 04:13 | |
மொத்த நீளம்: |
26:44 |
வரவேற்பு
சிஃபி எழுதியது, "அன்பே வா பெரும்பாலும் விவேக்கின் அற்புதமான நகைச்சுவையை சார்ந்து உள்ளது. அவரது வினோதங்கள் நடவடிக்கைகள் சுவையூட்டுகின்றன, சிரிக்க வைக்கின்றன. ஸ்ரீதேவிகாவின் நடிப்பு பரவாயில்லை. டி. இம்மனின் இசை ஒரு ஏமாற்றம். மொத்தத்தில், இந்த செல்வபாரதி இயக்கிய இந்த படம் விவேக்கின் சிரிப்பு மழைக்கு நன்றி செலுத்த வேண்டும். " [3]
குறிப்புகள்
- ↑ Vivek back in his elements in Anbe Vaa. Behindwoods. 3 November 2005. Retrieved 27 November 2014.
- ↑ Anbe Vaa Tracklist பரணிடப்பட்டது 2015-09-24 at the வந்தவழி இயந்திரம். Saavn. Retrieved 27 November 2014.
- ↑ Movie review – Anbe Vaa. சிஃபி. Retrieved 27 November 2014.