பெரும்பெயர் வழுதி
பெரும்பெயர் வழுதி என்பவன் சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன். இரும்பிடர்த் தலையார் என்னும் புலவர் புறநானூற்றில் இவனைப் பாடியுள்ளார்.[1] ஈகைக்கடன் பூண்ட கவுரியர் வழிவந்தவன் என இவன் குறிப்பிடப்படுகிறான். புறநானூற்றுப் பாடலின் அடிக்குறிப்பு இந்தப் பாண்டியனைப் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி எனக் குறிப்பிடுகிறது.
மருந்தில் கூற்றம் என்னும் ஊரை இவன் கைப்பற்றினான். அப்போது அவன் யானையின் கழுத்தில் மணி கோத்துக் கட்டப்பட்டிருந்த கயிற்றின் மேல் இருந்துகொண்டு மருந்தில் கூற்றத்துக் கதவுகளை யானைக்கோட்டால் உடைத்து முன்னேறி வென்றானாம். [2]
இவனது மனைவியின் கற்பும், பதுக்கையுடன் கூடிய இவனது கோட்டை மதிலின் சிறப்பும் பாடலில் சிறப்பிக்கப்பட்டுள்ளன.
புலவர் இவனுக்கு இரண்டு அறிவுரைகள் கூறுகிறார்.
- ஆட்சியை இழக்க நேர்ந்தாலும் சொன்ன சொல் தவறாதே.
- நாடி வரும் புலவர்களின் குறிப்பறிந்து அவர்களின் வறுமையைப் போக்குவது உன் கடமை.
அடிக்குறிப்பு
- ↑ "கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியே!நிலம் பெயர்ந்தாலும்,நீ சொல் பெயராய்! விலங்கு அகன்ற வியல்மார்பனே!உன்னை விரும்பி இரவலர் வருவர்!உன்ன மரத்தின் சகுனம் பொய்க்கநீ ஈவாய்!தவிரா ஈகை,கவுரியர் மருமகனே! ஏமமுரசும் இழுமென முழங்க வெண்குடை மண்ணகம் நிழற்ற வாழ்பவனே!"-புறநானூறு: 3
- ↑
பொன் ஓடைப் புகர் அணி நுதல்
துன் அருந்திறல் கமழ் கடாஅத்து
எயிறு படையாக எயில் கதவு இடாஅக்
கயிறு பிணி கொண்ட கவிழ் மணி மருங்கின்
பெருங்கை யானை இரும்பிடர்த் தலை இருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி (புறநானூறு 3)