சார்லஸ் எட்வர்ட் கோவர்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சார்லஸ் எட்வர்ட் கோவர்
பிறப்பு1835 (1835)
பாப்லர், மிடில்செக்ஸ், இங்கிலாந்து
இறப்புசெப்டம்பர் 18, 1872
மதராஸ், இந்தியா
தேசியம்பிரித்தானிய
பணிநாட்டுப்புறவியலாளர்
அறியப்படுவதுதிருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடிகளில் ஒருவர்
வாழ்க்கைத்
துணை
கிளாரா கெர்ட்ரூட் டெய்லர்
பிள்ளைகள்5

சார்லஸ் எட்வர்ட் கோவர் (1835-1872) இந்தியாவின் மதராஸ் பட்டணத்தில் (இன்றைய சென்னை) இருந்த ஒரு ஆங்கிலேய நாட்டுப்புறவியலாளர் ஆவார்.[1] அவர் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடிகளில் ஒருவராவார்.

வாழ்க்கைக் குறிப்பு

கோவர் இங்கிலாந்தின் மிடில்செக்ஸ் மாகாணத்திலுள்ள பாப்லர் என்ற ஊரைச் சேர்ந்த தாமஸ் கோவர் என்பவரின் மகனாவார். 1864-ஆம் ஆண்டில் சென்னை எழும்பூரில் உள்ள மெட்ராஸ் இராணுவ ஆண்கள் அனாதை விடுதியின் முதல்வராகவும் செயலாளராகவும் நியமிக்கப்பட்டார். 1868-இல் "இராயல் ஆசியாடிக் சொசைட்டி" என்ற அமைப்பின் உறுப்பினராகச் சேர்ந்த கோவர், 1871–1872 காலகட்டத்தில் அதிலிருந்து விலகிக்கொண்டார். இவர் கலை சங்கத்தின் உறுப்பினராகவும், மானுடவியல் சங்கத்தின் உறுப்பினராகவும் இருந்தவர்.[2]

கோவர் 1863-இல் கிளாரா கெர்ட்ரூட் டெய்லர் என்ற பெண்மணியை மணந்தார். கோவர் தம்பதியர் ஐந்து குழந்தைகளைப் பெற்றனர். 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 18-ஆம் தேதியன்று ரத்தக்கசிவின் காரணமாக கோவர் சென்னையில் இறந்தார். சென்னையிலுள்ள புனித ஆண்ட்ரூ தேவாலயத்தில் இவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.[3]

படைப்புகள்

கோவர் சென்னையில் 1865-இல் "இந்திய எடைகள் மற்றும் அளவீடுகள், அவற்றின் நிலை மற்றும் தீர்வு" என்ற தலைப்பில் ஒரு துண்டுப்பிரசுரம் எழுதினார். 1866-ஆம் ஆண்டு அவர் ஆசியாடிக் சொசைட்டிக்கு "தென்னிந்தியாவில் பொங்கல் திருவிழா" (Journal, new ser. v. 91–118) என்ற ஒரு ஆய்வறிக்கையை எழுதிக் கொடுத்தார். அதில் பொங்கல் பண்டிகையானது பழைய ஆரிய வாழ்வியலின் எச்சம் என்று தனது முடிவினை அறிவித்தார். ஆயின் இதற்குத் தரவேதும் அவர் கொடுக்கவில்லை. தனது மற்றொரு பங்களிப்பாக தென்னிந்தியாவின் தார்மீக நிலை பற்றியும் மதக் கண்ணோட்டங்களின் அடிப்படையில் சாதி அமைப்பினைக் குறித்த பார்வை பற்றியுமான ஆராய்ச்சியினை வெளியிட்டார். இவ்வாய்வு பண்டைய கனரா பகுதிகளின் பிரபலமான பாடல்களின் தொகுப்பின் அடிப்படையில் அமைந்ததாகும். இவ்வாராய்ச்சி அறிக்கையை கோவர் ஆங்கிலக் கவிதை வடிவில் பதிப்பித்தார்.[2]

கார்ன்ஹில் இதழுக்காக (Cornhill Magazine) இந்திய நாட்டுப்புற மரபுகளைப் பற்றிய கட்டுரைகளையும் கோவர் எழுதினார். 1872-இல் "தென்னிந்தியாவின் நாட்டுப்புறப் பாடல்கள்" (The Folk-Songs of Southern India) என்ற தலைப்பில் கோவர் தனது கட்டுரைகளைத் தொகுத்தளித்தார்.[4] இந்த புத்தகத்தில் திருக்குறளின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில குறட்பாக்களை ஆங்கிலத்தில் செய்யுள் வடிவில் மொழிபெயர்த்து "ஓட்ஸ் ஃப்ரம் தி குரள்" (Odes from the Kural) என்ற தலைப்பில் வெளியிட்டார். நேதனியல் எட்வர்ட் கிண்டர்ஸ்லி, எல்லீசன் மற்றும் வில்லியம் ஹென்றி ட்ரூ ஆகியோருக்குப் பிறகு குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த நான்காவது நபர் கோவர் ஆவார்.[5]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=சார்லஸ்_எட்வர்ட்_கோவர்&oldid=15974" இருந்து மீள்விக்கப்பட்டது