வில்லியம் ஹென்றி ட்ரூ

வில்லியம் ஹென்றி ட்ரூ (ஆங்கிலம்: William Henry Drew) திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த 19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஆவார். இவர் திருக்குறளின் முதல் 630 பாக்களை மட்டுமே மொழிபெயர்த்தார்.

வாழ்க்கைக் குறிப்பு

வில்லியம் ஹென்றி ட்ரூ திருக்குறளை 1840-இல் ஆங்கிலத்தில் உரைநடை வடிவில் மொழிபெயர்த்து வெளியிட்டார். குறளின் 133 அத்தியாயங்களில் முதல் 63 அத்தியாயங்களை மட்டுமே ட்ரூ மொழிபெயர்த்தார். தனது மொழிபெயர்ப்பின் முதல் பதிப்பில் தனது ஆங்கில மொழிபெயர்ப்புடன் சேர்த்து குறளின் தமிழ் மூலம், பரிமேலழகரின் உரை, ராமானுஜக் கவிராயரின் விளக்கவுரை ஆகியவையும் பதிப்பித்தார்.[1] ட்ரூவின் மொழிபெயர்ப்பு பரிமேலழகரின் உரையை சார்ந்து இருந்த வகையில் குறளின் தமிழ் மூலத்தோடு பெரும்பாலும் ஒத்திருந்தது. 1852-ஆம் ஆண்டு ஜான் லாசரஸ் என்ற மற்றொரு மதபோதகர் ட்ரூவின் பணியைத் திருத்தம் செய்து (அத்தியாயங்கள் 1 முதல் 63 வரை) எஞ்சியிருந்த அதிகாரங்களையும் (அத்தியாயம் 64 முதல் அத்தியாயம் 133 வரை) தானே மொழிபெயர்த்து வெளியிட்டார். இவ்வாறே ட்ரூவும் லாசரஸும் சேர்ந்து திருக்குறளுக்கு முதன்முறையாக முழுமையான ஆங்கில மொழிபெயர்ப்பினை உருவாக்கினர்.

"ட்ரூ ஒரு பக்தியுள்ள மனிதராகவும் ஒரு வைராக்கியம் கொண்ட மதபோதகராகவும் பண்பார்ந்த நபராகவும் தமிழ் மீது பற்று கொண்ட மாணவராகவும் இருந்தார் . . . தொல் தமிழ் நூலான குறளுக்கான அவரது மொழிபெயர்ப்பானது, அவர் அப்பணியினை முழுமையாக முடிக்கும் முன்னரே மறைந்து விட்டபோதும், அவரை ஐரோப்பிய தமிழ் அறிஞர்களின் வரிசையில் முதன்மையானவராக வைத்தது . . . திரு. ட்ரூவுடனான எனது தினசரி சம்பாஷனையின் விளைவாக எனக்குக் கிடைத்தத் தமிழ் படிப்புக்கான தூண்டுதலில் நான் மிகவும் பயனடைந்தேன்," என்று ராபர்ட் கால்டுவெல் குறிப்பிடுகிறார்.[2]

மேற்கோள்கள்

  1. Ramasamy, V. (2001). On Translating Tirukkural (First ). Chennai: International Institute of Tamil Studies. 
  2. Bishop Caldwell's Reminiscences, 1894, p. 52

மேலும் பார்க்க

"https://tamilar.wiki/index.php?title=வில்லியம்_ஹென்றி_ட்ரூ&oldid=16018" இருந்து மீள்விக்கப்பட்டது