இலட்சுமி சாகல்
இலட்சுமி சாகல் | |
---|---|
கேப்டன் இலட்சுமி | |
பிறப்பு | மலபார், மதராஸ் மாகாணம், இந்தியா | 24 அக்டோபர் 1914
இறப்பு | 23 சூலை 2012 கான்பூர், உத்தரப் பிரதேசம், இந்தியா | (அகவை 97)
தேசியம் | இந்தியர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இராணி மேரிக் கல்லூரி, சென்னை, மதராசு மருத்துவக் கல்லூரி |
அறியப்படுவது | புரட்சியாளர், விடுதலைப் போராட்ட வீரர் |
வாழ்க்கைத் துணை | பி. கே. என். ராவ் ( - 1940) பிரேம் குமார் சாகல் (1947–1992) (அவரது இறப்பு வரை) |
பிள்ளைகள் | சுபாசினி அலி, அனிசா புரி |
கேப்டன் லட்சுமி எனப்படும் இலட்சுமி சாகல் அல்லது இலட்சுமி சேகல் (Lakshmi Sahgal, அக்டோபர் 24, 1914–23 சூலை, 2012[2]) என்பவர் 1943ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். 20 சிங்கப்பூர் பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இப்படையில் பிற்பாடு 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின் ஒரே பெண் அமைச்சர்;[3] இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றவர். இவர் அக்காலத்தின் சென்னை மாகாணம் பகுதியைச் சேர்ந்தவர். அடிப்படையில் ஒரு மருத்துவரான இவர் இரண்டாம் உலகப்போருக்குப் பின்பு இந்திய மேலவையில் உறுப்பினராகப் பணியாற்றினார். 2002 இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவர் சூலை 23, 2012 அன்று மாரடைப்பால் இறந்தார்.[2]
இளமையும் கல்வியும்
லட்சுமி 1914 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 24 ஆம் நாள் சுவாமிநாதன்-அம்மு இணையருக்கு மகளாகப் பிறந்தார். இவரின் தந்தை சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞராக இருந்தவர். மேலும் அமெரிக்காவில் வானியல்துறையில் முனைவர் பட்டமும், சிறந்த கணிதவியல் நிபுணர் என்ற தகுதியும் பெற்றவர். அத்துடன் குற்றவியல் வழக்கறிஞர் என்ற பெருமதிப்பும் பெற்றவர். இவரின் தாய் அம்மு சுவாமிநாதன் கேரளா மாநிலம், பாலக்காட்டில் சமூக சேவகராக இருந்தவர். குட்டி மாலு அம்மா என்ற இவரது மற்றொரு குடும்ப உறுப்பினரும் விடுதலைப் போராட்டத் தியாகியாக இருந்தவர். இளம் வயதிலேயே நாட்டு விடுதலை, சமுதாய சமத்துவம் ஆகிய இலட்சியங்கள் லட்சுமியின் மனதில் இடம்பெற்றன[4].
லட்சுமி ஒன்பதாம் வகுப்பில் பயிலும்போதே மருத்துவம் பயில வேண்டும் என்று தீர்மானித்தார். ஆங்கில அறிவின் மேன்மை காரணமாக ஆங்கில மிசினரி பள்ளியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு பெற்றும், அங்கு மருத்துவக் கல்விக்குத் தேவையான பாடங்கள் செம்மையாகப் போதிக்கப்படவில்லை என்று லேடி லிவிங்க்டன் ஆசிரியப் பயிற்சிக் கல்லுரியின் பள்ளியில் கல்வியைத் தொடர்ந்தார். 1930-ல் இடைநிலைக் கல்வியை இராணி மேரி கல்லூரியில் தொடர்ந்தார். 1938 -ல் சென்னை மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எசு. பட்டம் பெற்றார்[4].
1942ல் பிரித்தானிய-சப்பானியப் போரில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தார். 1943 -ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படையைத் தொடங்கினார். இப்படை ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் படையாகக் கருதப்படுகிறது[4].
விடுதலைப் போராட்ட ஈடுபாடு
இராணி மேரி கல்லூரியில் பயிலும் போது கதர் மட்டுமே அணியும் தீவிர காங்கிரசு இளைஞர் அணியில் உறுப்பினரானார். இவ்வணிக்கு பிற்காலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக விளங்கிய ப. ராமமூர்த்தி தலைவராக இருந்தார். ஒருமுறை லட்சுமி பகத்சிங் வழக்குக்குக் கல்லூரியில் நிதி திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டார். அதே 1930-ம் ஆண்டில் அறப்போராட்டத்தில் மறியலில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு ஒரு நாள் முழுவதும் சிறையில் இருந்தார்.
அக்காலத்தில் 'கவிக்குயில்' என்றழைக்கப்பட்ட சரோஜினி நாயுடுவின் உடன்பிறந்தவரான சுகாசினி நம்பியார், மீரட்டுச் சதிவழக்கில் தொடர்பு கொண்டவராகக் குற்றம் சாட்டப்பட்டு லட்சுமியின் வீட்டில் தலைமறைவாக இருந்தார். பொதுவுடைமைவாதியான அவரிடமிருந்து லட்சுமி மார்க்சிய தத்துவம் பற்றியும் உருசியப் புரட்சி பற்றியும் பல நூல்களை வாங்கிப் படித்தார். சமுதாய மாற்றம் புரட்சியினால் தான் சாத்தியமாகும் என்ற கருத்து ஆழமாக அவர் மனதில் இடம் பெற்றது. அத்தகைய ஓர் ஆயுதப் புரட்சியே அரசியல் விடுதலைக்கு உகந்ததாகும் என நம்பலானார். எனவே தனது தாயைப் பின்பற்றிக் காந்தியின் அகிம்சைக் கொள்கைகளில் ஈடுபட்டிருந்த லட்சுமி மேலும் அதில் ஈடுபடாமல் தனது மருத்துவக் கல்வியை முடித்தார்[4].
1939–40 -களில் இரண்டாம் உலகப் போர் மூண்டபோது தீவிரக் கதர் இயக்கங்களில் ஈடுபட்டோர்களும் அகிம்சை வழியில் ஈடுபட்டோர்களின் வாரிசுகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் பிரித்தானியாவின் போர் சேவைக்காக இராணுவத்தில் பணி செய்ய லட்சுமியின் மனது இசையவில்லை.
சிங்கப்பூர் வாழ்க்கை
லட்சுமியின் தாயாரும் தங்கையும் அமெரிக்காவில் இருந்தனர். தனது தந்தையையும் 1930-ல் இழக்க நேரிட்டது. சென்னையில் எந்தப் பிடிப்பும் இல்லாமல் வாழ்வைக் கழித்துவந்த லட்சுமி தனது உறவினர் ஒருவருக்கு மருத்துவர் என்ற நிலையில் உதவி செய்ய, 1940ல் சிங்கப்பூர் சென்றார். எளிய தென்னிந்திய தொழிலாளப் பெண்கள் நிறைந்த அந்தச் சூழலில் நல்ல இந்தியப் பெண் மருத்துவர் இல்லை என்று கண்டார். அங்கேயே தங்கி தன் மருத்துவ சேவையில் ஈடுபடலானார். சிங்கப்பூரில் ஏழைகளுக்காக மருத்துவமனை தொடங்கினார். வெகு விரைவிலேயே ஒரு நல்ல மருத்துவர் எனப் புகழ்பெற்றார்[4].
இந்திய சுதந்திர கழகம்
1941-ல் ஜப்பானியர் சிங்கப்பூரைத் தாக்கினர். பிரித்தானியப்படை பின்வாங்கியது. பிரித்தானிய இந்தியப்படையின் மிகப்பெரிய தளமான பஞ்சாப் தளம் ஜப்பான் படையிடம் சரணடைந்தது. சரணடைந்த இப்படையிலிருந்த படைவீரர்கள், தளபதிகள், கைப்பற்றிய போர்த்தளவாடங்கள் ஆகியவற்றைக் கொண்டு உருவானதே இந்திய தேசிய இராணுவம் ஆகும். இதில் பொதுமக்கள் யாரும் இல்லாததால் ராஷ் பிகாரி போஸ் பொதுமக்களுக்கென்று இந்திய சுதந்திர லீக் என்ற ஓர் அமைப்பைத் தோற்றுவித்து செயல்படுத்தி வந்தார். இதன் சிங்கப்பூர் கிளையில் அதிதீவிர உறுப்பினராக இருந்த, மாத்ருபூமி என்ற கேரள இதழைத் தோற்றுவித்த கே. பி. கே. மேனன் என்பவரின் நட்பு லட்சுமிக்குக் கிடைத்தது. இந்நட்பின் மூலம் இந்தியச் சுதந்திர லீக்கின் முக்கிய உறுப்பினராக இணைந்தார்.
1942ல் பிரித்தானிய-சப்பானியப் போரில் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ உதவிகள் செய்தார். தொலைவிலிருந்து சிங்கப்பூருக்கு வரும் அகதிகளையும் நோயாளிகளையும் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார். இந்திய சுதந்திர லீகின் பிரச்சாரப் பிரிவின் சார்பில் இதழ்களுக்குக் கட்டுரைகள் எழுதினார். இந்தியாவுக்கு வானொலி மூலம் செய்திகளை ஒலிபரப்பும் பணியிலும் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். அத்துடன் மகளிர் பிரிவையும் பராமரித்தார்.
நேதாஜியுடனான சந்திப்பு
இந்திய சுதந்திர லீகின் அழைப்பின் பேரில் 1943-ல் சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூர் வந்தார். அப்போது இந்திய சுதந்திர லீகின் சிங்கப்பூர் கிளைக்கு எல்லப்பா என்பவர் தலைவராக இருந்தார். அவரிடம் லட்சுமி இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தான் ஒரு முக்கிய பொறுப்பேற்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அதே நேரம் நேதாஜியும் ஜான்சிராணி படை என்ற பெயரில் பெண்களும் ஆயுதப் போராட்டத்தில் சமமாகப் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். மறுநாள் நேதாஜியுடன் இரவு உணவு உண்ண லட்சுமிக்கு அழைப்பு வந்தது. இப்படைக்குத் தலைமையேற்கும் தனது இசைவைத் தெரிவித்ததும் அடுத்துச் செய்ய வேண்டிய ஏற்பாடுகளையும் சுபாஷ் சந்திர போஸ் தெரிவித்தார். உங்கள் சேலை உடையும், நீண்ட கூந்தலையும் வைத்துக் கொள்ள முடியாது என்றும் நினைவுறுத்தினார். தனது நட்பு, பாசம் ஆகிய தொடர்புகளை விட்டு, நாட்டுக்காகத் தமக்குத் தாமே என்ற உறுதி கொண்டார்.
ஜான்சிராணி படை
1943ல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் பெண்கள் பிரிவான ஜான்சி ராணி படையைத் தொடங்கினார். இப்படை ஆசியாவில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் படையாகக் கருதப்படுகிறது. பெண்கள் படையை உருவாக்குவதை ஜப்பானியர் விரும்பவில்லை. விலையுயர்ந்த தளவாடங்கள், பெண்கள் இராணுவம் எனச் செலவழிப்பது வீண் எனக் கருதினர். ஆயினும் கிழக்காசியாவில் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளைத் தந்தனர். பெண்கள் ஜான்சிராணி படையில் சேர முன்வந்து பெயர் கொடுத்தனர். லட்சுமி படைத்தளபதியாக மட்டுமின்றி, பெண்கள் நலனுக்கான ஒர் அமைச்சராகவும் பொறுப்பேற்றார்.
சிங்கப்பூரிலேயே ஐந்நூறு பெண்களைத் தேர்ந்தெடுத்து முதலில் ஜான்சிராணி படை துவக்கப்பட்டது. ஆனால் மலேயா-கோலாலம்பூர் போன்ற இடங்களில் இருந்தும் மகளிர் இதில் பங்குகொள்ள வந்தனர். இவர்களுள் ஆர்.லட்சுமிதேவி, தேவயானி, ஜானகி, எம். எஸ். தேவர். பாப்பாத்தி போன்ற சிலரும் அடங்குவர். பயிற்சி முடைந்ததும் ஜான்சிராணி படை சிங்கப்பூரிலிருந்து பர்மாவை நோக்கிப் பயணமாயிற்று. அங்கிருந்து படை டெல்லியை நோக்கிய போர்முனைக்குச் செல்லும். லட்சுமி இந்தக் கடும்போரில் பங்கேற்றார். ஆனால் ஜான்சிராணி படை இந்திய பர்மிய எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கு கொரில்லாப் படையினரின் தாக்குதலைச் சமாளித்தனர். உணவு மற்றும் போர்ச்சாதனங்கள் வந்துசேரும் பாதை முடங்கிற்று. பசியின் கொடுமையால் காட்டில் கிடக்கும் பழங்களை உண்டதால், அதன் நச்சுத்தன்மை காரணமாக வயிற்றுப் போக்கு-வாந்தி முதலியன ஏற்பட்டது. இந்நிலையில் போரில் சமாளிக்க முடியாத நேதாஜி பெண்கள் படை எதிரிகள் வசம் அகப்படக்கூடாது என்பதற்காக படையினை மலேயாவுக்குத் திரும்ப ஆணை பிறப்பித்தார். ஆனால் லட்சுமி மறுத்துவிட்டார்.
எதிரிகளிடம் பிடிபடுதல்
1945 ஜூலை முதல் நாள் படையினருடைய வேதனைகளையும் நோவையும் ஆற்ற சிகிச்சை தேவை என உணர்ந்த லட்சுமி அங்கு ஷா எஸ்டேட் என்ற இடத்தில் இந்திய தேசிய இராணுவத்தினரும் சேர்ந்து உருவாக்கப்பட்டிருந்த ஒர் மருத்துவமனையில் அவர்களுக்கு சிகிச்சையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கு வந்த நேதாஜி லட்சுமியைத் தன்னுடன் திரும்ப வந்துவிடும்படி அழைத்தார். ஆனால் லட்சுமி பிடிவாதமாக மறுத்துவிட்டார்.
மருத்துவமனை என்பதைக் குறிக்க செஞ்சிலுவை அடையாளம் வைக்கப்பட்டிருந்தும் கூட அன்றிரவே மருத்துவமனை வான் குண்டு வீச்சுக்கு இலக்காயிற்று. மருத்துவமனை தரைமட்டமாயிற்று. விமானத்தைப் பார்த்ததும் பதுங்குகுழியில் மறைந்ததால் லட்சுமி உயிர்தப்பினார். தளபதி எல்லப்பா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். தப்பிக்கும் முயற்சியால் ஆங்கிலேய கொரில்லப்படையின் குண்டு வீச்சால் மேலும் சிலர் கொல்லப்பட்டனர். படைத் தளபதி லட்சுமி போர்க்கைதியாக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டார். பிரித்தானிய இராணுவத்தினரால் லட்சுமியை எந்தப் பிரிவில் குற்றம் சாட்டுவது என முடிவு செய்ய முடியவில்லை. ஏனெனில் இந்திய இராணுவத்தில் இருந்துவந்த அதிகாரியாகவோ, பர்மியராகவோ இல்லை, இந்திய சுதந்திர அரசின் ஓர் அங்கமாக அமைச்சராக இருந்தவர். எனவே சிறிது காலம் ரங்கூனில் ஆங்கிலோ-பர்மியர் வசிக்கும் பகுதியில் அவரை விட்டு வைத்தனர். அங்கு தனது நண்பரான கியான்புரி என்ற பெண் மருத்துவருடன் சிகிச்சையகம் சென்று காலம் கழித்தார். எனினும் இவரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன.
நாடுகடத்துதல்
1945-ல் இந்திய தேசிய ராணுவ வீரர்கள் ஓரிடத்தில் கூடினர். அதில் இந்தியாவில் இருந்து வந்த மூன்று இதழியலாளர்களும் இருந்தனர். இக்கூட்டத்தில் " இன்னும் போர் முடிவடையவில்லை நாம் இந்தியாவுக்குள் அடிவைத்து விடுதலை இலட்சியம் நிறைவேறும் வரை போராடுவோம்.." என்று இந்தியில் முழங்கினார். இச்செய்தி பிரித்தானிய இராணுவத் தலைமைக்கு எட்டியது. உடனே லட்சுமியைக் கைது செய்து "கலாப்" என்ற இடத்தில் வைத்தனர். விசாரணை எதுவும் நடத்தப்படாமல் இவரை இந்தியாவிற்கு அனுப்பி வைத்தனர். கல்கத்தா வந்து சேர்ந்த லட்சுமி அங்குள்ள காவல்நிலையத்தில் தனது வருகையைப் பதிவிடச் சென்றார். அங்கிருந்து அவர்கள் நேதாஜியின் சகோதரி மகள் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப வாழ்க்கை
1947-ஆம் ஆண்டில் இந்தியா விடுதலை பெற்ற பிறகு, ஆங்கிலேயப் படையில் இருந்து பின்னர், இந்திய தேசிய இராணுவத்தில் அருந்தொண்டாற்றிய தன்னுடைய சகபோராளி கலோனல் பிரேம் குமார் சாகல் என்பவரை லட்சுமி மணந்துகொண்டார். பிறகு கான்பூரில் குடியேறினார். இவருடைய மகள் சுபாஷினி அலி சி.பி.எம்.மின் மத்திய குழு உறுப்பினர்;
இந்திய அரசியலில் பங்கு
1971ல் இந்திய மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவைப் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தலைவர்களில் ஒருவராகவும் விளங்கினார். 1972-ல் பங்களாதேசப் போர் நடைபெற்ற போது வங்காள கவர்னராக இருந்த பத்மசா நாயுடு என்பவருடன் கடிதம் மூலம் அனுமதி பெற்று வலிய உதவி செய்யச் சென்றார். போரில் சேதமடைந்தவர்களின் நிவாரணப்பணிக்கு நிதிதிரட்டி அளித்தது மட்டுமைன்றி, தாமே சென்று போர்ச்சூழலில் மருத்துவப் பணியாற்றினார்
2002ல் இந்திய குடியரசுத் தலைவர் பதவிக்கு இந்திய பொதுவுடைமை மற்றும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் அப்துல் கலாமை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[5]
விருதுகள்/பதவிகள்
1998ல் இந்திய அரசின் பத்ம விபூசன் என்ற பட்டத்தைப் பெற்றார். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் துணைத்தலைவராக பதவி வகித்தவர்.
உசாத்துணை
- ராஜம் கிருஷ்ணன், "காப்டன் லட்சுமி" -விடுதலை வேள்வியில் தமிழகம், மனிதம் பதிப்பகம். பக்.155-175.
- Lakshmi Sahgal: A life in service by Subhashini Ali
- India's 50 Most Illustrious Women (ISBN 81-88086-19-3) by Indra Guptha
- The Forgotten Army: India's Armed Struggle for Independence, 1942–1945 by Peter Fay.
குறிப்புகள்
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2009-04-02 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090402151054/http://www.s1942.org.sg/s1942/indian_national_army/provi.htm.
- ↑ 2.0 2.1 "Netaji Subhash Chandra Bose's close associate Lakshmi Sehgal dies at 97". Jul 23, 2012. Jul 23, 2012 இம் மூலத்தில் இருந்து ஜூலை 25, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120725030946/http://ibnlive.in.com/news/netajis-close-aide-lakshmi-sehgal-dies-at-97/273472-3.html. பார்த்த நாள்: சூலை 23, 2012.
- ↑ "Biographies of INA Freedom Fighters". pp. 1 இம் மூலத்தில் இருந்து 2012-02-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120205012239/http://www.s1942.org.sg/s1942/indian_national_army/freedom.htm. பார்த்த நாள்: மே 11, 2012.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 "A captain's credentials". புரொண்ட் லைன். http://www.frontlineonnet.com/fl1913/19130060.htm. பார்த்த நாள்: மே 10, 2012.
- ↑ "'Missile man' claims Indian presidency". சூலை 18, 2002. pp. 1 இம் மூலத்தில் இருந்து 2013-03-07 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130307124650/http://articles.cnn.com/2002-07-18/world/india.president_1_lakshmi-sehgal-muslim-parents-nuclear-capable?_s=PM:asiapcf. பார்த்த நாள்: மே 11, 2012.
வெளி இணைப்புகள்
- உயிர்மை.காம்[தொடர்பிழந்த இணைப்பு]
- Lakshmi Sehgal: A life of struggle and sacrifice – by Sambhavika Sharma
- Rediff interview 2002
மேலும் பார்க்க
- ஜான்சி ராணி படை
- 1914 பிறப்புகள்
- தமிழ் அரசியல்வாதிகள்
- பத்ம விபூசண் விருது பெற்ற தமிழர்கள்
- 2012 இறப்புகள்
- தமிழ்நாட்டு இந்திய விடுதலைப் போராட்ட வீரர்கள்
- இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனைகள்
- இந்திய இறைமறுப்பாளர்கள்
- இந்தியப் பொதுவுடமைவாதிகள்
- இந்தியப் புரட்சியாளர்கள்
- இரண்டாம் உலகப் போரில் பெண்கள்
- தமிழ்நாட்டு மருத்துவர்கள்