ராஜா செல்லையா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

ராஜா செல்லையா எனப் பரவலாக அறியப்படும் ராஜா ஜேசுதாஸ் செல்லையா (Raja Jesudoss Chelliah) (12 டிசம்பர் 1922 - 7 ஏப்ரல் 2009) பொருளாதார நிபுணர்.[1] இந்திய பொருளாதாரத்தில் வரி சீர்திருத்தத் துறையில் முன்னோடியாக விளங்கியவர். இவரது தலைமையில் வரி சீர்திருத்த குழுவை இந்திய அரசு அமைத்தது. ஸ்பிக் ஆதரவுடன் சென்னையில் நிறுவப்பட்ட மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் முதல் தலைவராவார்.

வாழ்க்கையும் கல்வியும்

இவர் நெல்லை மாவட்டம் பாளையங் கோட்டையில் பிறந்தவர். தந்தை பெயர் சாமுவேல் தேவசிகாமணி செல்லையா. தாயார் பெயர் மாசிலாமணி. பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி, திருச்சி ஜோசப் கல்லூரியில் படிப்பு. அமெரிக்காவின் பிட்ஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டபடிப்பு முடித்தார்.இவரது மனைவியின் பெயர் திருமதி சீதா செல்லையா.இவருக்கு இரண்டு புதல்விகள்

பணிகள்

சென்னை கிருத்தவக் கல்லூரியில் 5 ஆண்டுகள் பொருளாதாரப் பேராசிரியர் பணி, பிறகு புதுதில்லியில் உள்ள நடைமுறைப் பொருளாதார ஆய்வுக்கான தேசிய கவுன்சிலில் மூத்த பொருளாதார நிபுணராகப் பணி, ராஜஸ்தான் பல்கலைக்கழகப் பொருளாதாரத் துறைத்தலைவர், உஸ்மானியா பல்கலைக்கழகப் பேராசிரியர் பணிகளுக்குப் பின் ஐ.எம்.எஃப் நிறுவனத்தில் உயர்பதவி. 1975இல் இந்தியா திரும்பினார். நிதித்துறையில் கௌரவ ஆலோசகரானார். பொதுநிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனத்தை நிறுவினார். பொருளாதாரம், வரி, வருமானவரி, ஆகியவை குறித்து 13 புத்தகங்கள் எழுதியுள்ளார். இதே துறையில் 36 ஆய்வுக் கட்டுரைகளையும், 12 அறிக்கைகளையும் தயாரித்துள்ளார்.

வகித்த பதவிகள்

  • சென்னையில் உள்ள மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் நிறுவனத்தின் முதல் தலைவர்.
  • 1985இல் திட்டக் குழு உறுப்பினர்
  • 9வது நிதிக்குழு உறுப்பினர்.
  • 1991இல் உலக வங்கிச் சார்பில் சீனாவுக்கு அனுப்பப்பட்ட நிதி உறவுக் குழு உறுப்பினர்.
  • 1991-95வரை வரித்துறை சீர்திருத்தக் குழுத் தலைவர்[2]

விருதுகள்

  • இவரது சேவையைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கியது

மேற்கோள்கள்

  1. "பொருளாதார மேதை ராஜா செல்லையா காலமானார்". bsubra.wordpress.com. https://bsubra.wordpress.com/. பார்த்த நாள்: 26 ஏப்ரல் 2016. 
  2. தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்41
"https://tamilar.wiki/index.php?title=ராஜா_செல்லையா&oldid=28247" இருந்து மீள்விக்கப்பட்டது