பி. எஸ். சரோஜா
இயற்பெயர்/ அறியும் பெயர் |
பி. எஸ். சரோஜா |
---|---|
பிறந்ததிகதி | 18 நவம்பர் 1929 |
பிறந்தஇடம் | திருவனந்தபுரம் |
அறியப்படுவது | நடிகை, நடனக் கலைஞர் |
பெற்றோர் | பாலசுப்ரமணியம், ராஜலட்சுமி |
துணைவர் | பண்டிட் போலாநாத் (இ. மே 12, 1949), டி. ஆர். ராமண்ணா |
பி. எஸ். சரோஜா (B. S. Saroja, பிறப்பு: நவம்பர் 18, 1929) தமிழ்த் திரைப்பட நடிகையாவார்.
ஆரம்ப வாழ்க்கை
சரோஜாவின் பூர்வீகம் சேலம் ஆகும். இவர் பாலசுப்ரமணியம், ராஜலட்சுமி ஆகியோருக்கு திருவனந்தபுரத்தில் பிறந்தார். சரோஜா சிறுமியாக இருந்தபோதே அவரது குடும்பம் சென்னை ராயபுரத்தில் குடியேறியது. சரோஜாவின் தாத்தா ஒரு வயலின் ஆசிரியர். அம்மா வாய்ப்பாட்டில் தேர்ந்தவர். பி. எஸ். சரோஜா தாயாரிடம் வாய்ப்பாட்டு கற்றுக்கொண்டார். சிறுவயதிலேயே தெலுங்குக் கீர்த்தனைகள் பாடும் அளவுக்கு இசையில் தேறினார். சரோஜா ராயபுரம் புனித அந்தோணியார் தொடக்கப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.[1]
வட்டரங்குப் பயிற்சி
சரோஜா ஒன்பது வயதுச் சிறுமியாக இருந்த போது அவரது பள்ளி மைதானத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ்’ என்னும் வட்டரங்குக் குழு முகாமிட்டிருந்தது. சரோஜாவும் ஆர்வத்தின் காரணமாக பள்ளிக்கூடத்துக்கு சரிவர போகாமல் அங்கேயே பல நாட்கள் ஒளிந்திருந்து சர்க்கஸ் பயிற்சிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார். சர்க்கசுப் பயிற்சியாளர் டி. எம். நாமசிறீ என்பவர் சரோஜாவின் ஆர்வத்தைக் கண்டு அவளுக்குப் பயிற்சியளித்தார். நாமசிறீயிடம் சரோஜா முழுக் கலையையும் கற்றுக்கொண்டார். ஆனாலும், தனது 12வது அகவையில் சர்க்கஸ் அரங்கேற்றத்துக்காகக் காத்திருந்த நேரத்தில் ‘தமிழ்நாடு சர்க்கஸ் கம்பெனி’ மூடப்பட்டது.[1]
திரைப்பட வாய்ப்பு
வட்டரங்கு நிறுவனம் மூடப்பட்டாலும் தனது மாணவர்களுக்குத் தொடர்ந்து பயிற்சியளித்துவந்தார் நாமசிறீ. இந்த நேரத்தில் ராயபுரத்தில் ராசாசி கலந்துகொண்ட காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் கூட்டம் தொடங்கும்முன் தனது மாணவர்களைச் சாகசங்கள் செய்துகாட்டச் செய்தார் ஆசிரியர். ராசாசி சாகச நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசினார். இந்தக் கூட்டத்துக்கு ராசாசியுடன் வந்திருந்த காங்கிரஸ் ஊழியரான தட்சிணாமூர்த்தி என்பவர் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிவந்தவர். இவர் சரோஜாவின் அழகையும் சாகசத் திறமையையும் கண்டு மாதம் 45 ரூபாய் சம்பளத்துக்கு சரோஜாவை ஜெமினி ஸ்டூடியோவில் சேர்த்துவிட்டார்.[1]
1941-ல் வெளியான ‘மதன காமராஜன்' திரைப்படக் குழுநடனம் மூலம் திரைப்படத்தில் அறிமுகமானார். பின் ஜெமினியிலிருந்து வெளியேறி, ஜுபிடர் நிறுவனத்தில் சேர்ந்தார். ஜுபிடர் தயாரிப்பில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்த ‘குபேர குசேலா’வில் (1943) டி.ஏ.ஜெயலட்சுமியுடன் இணைந்து ஆடி பிரபலமானார்.[1]
குடும்பம்
பி. எஸ். சரோஜாவின் கணவர் பண்டிட் போலாநாத் ஆக்ராவைச் சேர்ந்தவர். சரோஜா நடித்த பல படங்களுக்கு நடன இயக்குனராகப் பணியாற்றியவர். 1943 ஆம் ஆண்டில் சரோஜாவைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.[2] போலோநாத் பரதக் கலையுடன் மணிப்பூரி, கதக் போன்ற நடனங்களிலும் சரோஜாவுக்குப் பயிற்சி அளித்தார். போலோநாத் பர்மா ராணி, ராஜராஜேஸ்வரி ஆகிய படங்களில் தனி நடனம் ஆடும் வாய்ப்புகளை சரோஜாவுக்கு பெற்றுத்தந்தார்.[1] சரோஜா தனது கணவருடன் இணைந்து கீத காந்தி திரைப்படத்தில் நடித்துள்ளார்.[2] இவர்கள் இருவரும் நடன கலா மந்திர் என்ற பெயரில் நடனப் பயிற்சிப் பள்ளி ஒன்றை நிறுவியிருந்தனர்.[2] இவர்களுக்கு கலாராணி என்ற முதல் மகள் பிறந்தாள்.[1]
இன்பவல்லி திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடிப்பதற்காக 1949 மே 11 அன்று இரவு தமது வாகனத்தில் போலோநாத்தும், சரோஜாவும் பயணம் செய்தபோது சேலத்திற்கு அருகில் எட்டு மைல் தூரத்தில் வாகனம் விபத்துக்குள்ளாகியதில் போலோநாத் படுகாயம் அடைந்து மே 12 அன்று சேலம் மருத்துவமனையில் காலமானார்.[2] சரோஜா சிறுகாயங்களுடன் உயிர் தப்பினார்.[2] போலோநாத் மரணமடந்து சில காலத்திற்குப் பின்னர் பி. எஸ். சரோஜா டி. ஆர். ராமண்ணாவை திருமணம் செய்துகொண்டார்.[3]
கதாநாயகியாக
பி.யு.சின்னப்பாவும், டி.ஆர். ராஜகுமாரியும் இணைந்து நடித்த விகடயோகி திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு அமைந்தது. அதன் பிறகு பி.எஸ்.ராமையாவின் ‘தன அமராவதி' திரைப்படத்தில் கதாநாயகன் எஸ்.எம்.குமரேசனுக்கு இணையாக தனிக் கதாநாயகியாக நடித்தார். அன்றைய உச்ச நட்சத்திரமான டி.ஆர். மகாலிங்கத்துடன் 'பாரிஜாதம்' படத்தில் நடித்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், மலையாளத் திரைப்பட நடிகர் திக்குரிசி சுகுமாரன் நாயர் ஆகியோருடன் இணைந்து நடித்துப் புகழ்பெற்றார்.[1]
நடித்த படங்கள் சில
ஆண்டு | திரைப்படம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|
1941 | மதனகாமராஜன் | தமிழ் | நடனம் |
1942 | கண்ணகி | தமிழ் | நடனம் |
1943 | குபேர குசேலா | தமிழ் | நடனம் |
1943 | மங்கம்மா சபதம் | தமிழ் | நடனம் |
1944 | மகாமாயா | தமிழ் | நடனம் |
1944 | ராஜ ராஜேஸ்வரி | தமிழ் | நடனம் |
1945 | பர்மா ராணி | தமிழ் | நடனம் |
1946 | விகடயோகி | தமிழ் | |
1947 | விசித்ர வனிதா | தமிழ் | |
1947 | தன அமராவதி | தமிழ் | |
1949 | நாட்டிய ராணி | தமிழ் | |
1949 | தேவ மனோகரி | தமிழ் | |
1949 | கீதாஞ்சலி | தமிழ் | |
1949 | இன்பவல்லி | தமிழ் | |
1950 | பாரிஜாதம் | தமிழ் | |
1951 | ஜீவித நௌகா | மலையாளம் | |
1951 | பிச்சைக்காரி | தமிழ் | |
1951 | ஓர் இரவு | தமிழ் | |
1952 | அச்சான் | மலையாளம் | |
1952 | ஆத்மசகி | மலையாளம், தமிழ் | |
1952 | அம்மா | மலையாளம் | |
1952 | கல்யாணி | தமிழ் | |
1952 | கலியுகம் | தமிழ் | |
1952 | அத்தைந்தி காபுரம் | தெலுங்கு | |
1953 | ஆசை மகன் | தமிழ் | |
1953 | ஆசதீபம் | மலையாளம் | |
1953 | ஜெனோவா | தமிழ், மலையாளம் | |
1953 | வாழப்பிறந்தவள் | தமிழ் | |
1953 | லோகநீதி | மலையாளம் | |
1954 | அவன் வருன்னு | மலையாளம் | |
1954 | கூண்டுக்கிளி | தமிழ் | |
1954 | மாங்கல்யம் | தமிழ் | |
1956 | ஆத்மார்ப்பணம் | மலையாளம் | |
1957 | புதுமைப்பித்தன் | தமிழ் | |
1958 | லில்லி | மலையாளம் | |
1959 | பாண்டித் தேவன் | தமிழ் | |
1959 | வண்ணக்கிளி | தமிழ் | |
1960 | உம்மா | மலையாளம் | |
1961 | கிருஷ்ண குசேலா | மலையாளம் | |
1961 | குமுதம் | தமிழ் | |
1962 | புதிய ஆகாசம் புதிய பூமி | மலையாளம் | |
1963 | கடலம்மா | மலையாளம் | |
1964 | அருணகிரிநாதர் | தமிழ் | |
1966 | தரவத்தம்மா | மலையாளம் | |
1978 | அந்தோனீசு புண்ணியவாலன் | மலையாளம் |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
- "மறக்கப்பட்ட நடிகர்கள்: 5 - தமிழ்த் திரையின் வண்ணக்கிளி - பி.எஸ்.சரோஜா". தி இந்து. 20 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 21 மே 2016.