மங்கம்மா சபதம் (1943 திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மங்கம்மா சபதம்
இயக்கம்ஆசார்யா
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
ஜெமினி ஸ்டூடியோஸ்
கதைஆசார்யா
இசைஎம். டி. பார்த்தசாரதி
எஸ். ராஜேஷ்வரராவ்
நடிப்புரஞ்சன்
என். எஸ். கிருஷ்ணன்
பி. ஏ. சுப்பையா பிள்ளை
கொளத்து மணி
வசுந்தரா தேவி
டி. ஏ. மதுரம்
ஒளிப்பதிவுராம்நாத்
படத்தொகுப்புசந்துரு
வெளியீடு1943
நீளம்17924 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மங்கம்மா சபதம் 1943 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1][2] ஆசார்யாவின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரஞ்சன், வசுந்தரா தேவி, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்தனர்.[3] ரஞ்சன் தந்தை, மகன் என இரு வேடங்களில் இத்திரைப்படத்தில் நடித்துள்ளார்.[4] பாபநாசம் சிவன், கொத்தமங்கலம் சுப்பு ஆகியோரின் பாடல்களுக்கு எம். டி. பார்த்தசாரதி, எஸ். ராஜேஷ்வரராவ் ஆகியோர் இசையமைத்தனர்.[4]

மங்கம்மா சபதம் திரைப்படம் அக்காலத்தில் 4 மில்லியன் ரூபாய்களை நிகர லாபமாகப் பெற்று பெரும் வெற்றி பெற்றது.[5]

திரைக்கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

கலிங்க நாட்டில் வெங்கடாசலம் (பி. ஏ. சுப்பையா பிள்ளை) என்பவருக்கு பிறந்தவள் மங்கம்மா (வசுந்தரா தேவி). நல்ல அழகி. ஒரு நாள் மாடப்புறா ஒன்றைத் துரத்திக் கொண்டு அரண்மனைத் தோட்டத்திற்குள் நுழைகிறாள் மங்கம்மா. அங்கு இளவரசன் சுகுணன் (ரஞ்சன்) அவளை அணுகிப் பலாத்காரம் செய்ய முயலுகிறான். மங்கம்மா அவனிடம் இருந்து தப்பித்து வெளியேறுகிறாள். மங்கம்மாவின் மீது மோகம் கொண்ட சுகுணன் அடப்பங்காரனின் (பி. அப்பணய்யங்கார்) உதவியுடன், மங்கம்மாவின் இருப்பிடத்தை அறிந்து, அங்கு சென்று அவளிடம் ஒழுங்கற்ற முறையில் நடந்து கொள்கிறான். புத்திசாலியான மங்கம்மா அவனைக் கீழே தள்ளி விடுகிறாள். கடைசியில் அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சபதம் போட்டுக் கொள்கிறார்கள்.[4]

மங்கம்மா சபதம் திரைப்படத்தில் ஒரு காட்சி

மங்கம்மாவைக் கல்யாணம் செய்து, அவளைச் சிறையில் அடைத்து, அவளின் கருவத்தை ஒடுக்குவதாக சுகுணன் சபதம் செய்கிறான். அப்படியே அவனைக் கல்யாணம் செய்து கொண்டு, வாழாவெட்டியானால், அவனை அறியாமல், அவனுக்கே ஒரு பிள்ளையைப் பெற்று அப்பிள்ளையைக் கொண்டே இளவரசனுக்கு சவுக்கடி கொடுப்பதாகப் பதிலுக்கு மங்கம்மா சபதம் செய்கிறாள்.[4]

அரசன் (பி. என். சேசகிரி பாகவதர்) வெங்கடாசலம் வீட்டுக்கு மந்திரியை (பி. வி. ராவ்) அனுப்பி மங்கம்மாவை சுகுணனுக்குத் திருமணம் செய்து கொடுக்கும் படி கேட்கிறான். திருமணமும் நடக்கிறது. திருமணம் முடிந்தவுடன் மங்கம்மா சிறையில் அடைக்கப்படுகிறாள். சிறையில் தன்னைப் பார்க்க வந்த தந்தையிடம் சிறைக்கும், தந்தையின் வீட்டுக்கும் ஒரு சுரங்கம் அமைக்கும் படி கேட்கிறாள். அதன் படி, சுரங்கம் ஒன்று கட்டப்படுகிறது. தந்தையின் உதவியால், கழைக்கூத்தாடி ஒருவனிடம் (கொளத்து மணி) ஆடல், பாடல்களைக் கற்றுக் கொள்கிறாள். மங்கம்மா கழைக்கூத்தாடிச்சி வேடம் கொண்டு சுகுணன் முன் நடனமாடுகிறாள். சுகுணன், அவளிடம் மனதைப் பறி கொடுத்து, அன்றைய இரவை அவளுடன் கழிக்கிறாள்.[4]

மங்கம்மாவுக்கு ஒரு பிள்ளை பிறக்கிறான். அவனுக்கு வயது வரும் வரை அவள் காத்திருக்கிறாள். மகனும் (ரஞ்சன்) தந்தையைப் பழி வாங்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான். அவன் சுகுணனை வஞ்சித்து, அவனை ஒரு சாக்கில் போட்டுக் கட்டி, சபையறியத் தாயின் சபதத்தை நிறைவேற்றுகிறான்.[4]

நடிகர்கள்

நடிகர் பாத்திரம்
வசுந்தரா தேவி மங்கம்மா
ரஞ்சன் சுகுணன், ஜெயபாலன்
பி. ஏ. சுப்பையா பிள்ளை வெங்கடாசலம்
பி. என். சேசகிரி பாகவதர் அரசன்
பி. வி. ராவ் மந்திரி
பி. அப்பண்ணய்யங்கார் அடப்பக்காரன்
புலியூர் துரைசாமி தலையாரி
எம். ராமமூர்த்தி சுமதி
ஏ. எஸ். லீலாவதி ரதி
கொளத்து மணி கழைக்கூத்தாடி
ராமசாமி சாரங்கி
என். எஸ். கிருஷ்ணன் சாத்தான்
டி. ஏ. மதுரம் யமுனா

பாடல்கள்

மங்கம்மா சபதம் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள்:[4]

  • புத்தியுள்ள மனிதரென்றால் புகழுடன் வாழ்வார்.. (மங்கம்மா, மாண்டு, திச்ரம்)
  • அஞ்சாதே நீ வா.. (மங்கம்மா, அம்சத்வனி, ஆதி)
  • வண்ணப்புறாவே நீயார்.. (சுகுணன், சிந்துபைரவி, ஆதி)
  • ஆனந்தமீதே பரமானந்தமீதே.. (மங்கம்மா, இந்துத்தானி, திச்ரம்)
  • சிறிதும் கவலைப்படாதே (மங்கம்மா, கரகரப்பிரியா, ஆதி)
  • பெண்புத்தியாலே வீண் கனவு கண்டேனே (மங்கம்மா, காதநாமக்கிரியா, ஆதி)
  • உடல்நலமே பெறலாம் சதாஇதாலே (யமுனா, இந்துத்தானி, ஏகம்)
  • ஜெயமே ஜெயமே ஜெயமே தந்தையே (மங்கம்மா, பிலகரி, ரூபகம்)
  • ஐயய்யய்யே சொல்ல வெட்கம் ஆகுதே.. (மங்கம்மா)
  • பொண்ணிருக்கு பொண்ணிருக்கு பூலோக ரம்பை போலே (சாத்தான், துர்கா, ஏகம்)
  • உம்மேலேதான் ஆசை ஐயேவே ஆனேன் (யமுனா, பீலு, ஏகம்)
  • பாரில் நல்வழி காட்டி (மங்கம்மா, தோடி, ஆதி)
  • காவாலிப் பயலே சும்மா கிடடா (சாத்தான்-சாரங்கி, இந்துத்தானி, ஏகம்)
  • புன்னகைதவழ் வதன் பூர்ணிம சந்திரனே (மங்கம்மா, யதுகுலகாம்போதி, ஜம்பை)
  • ஆனந்தம் ஆனந்தம் ஆனந்தம் (மங்கம்மா-சுகுணன், நாகஸ்வராவளி, ஆதி)

மேற்கோள்கள்

  1. சு. தியடோர் பாஸ்கரன் (1996). The eye of the serpent: an introduction to Tamil cinema. East West Books (Madras). p. 197.
  2. Sruti. P.N. Sundaresan. 2006. p. 125.
  3. Guy, Randor (23 November 2007). "Blast from the past — Mangamma Sapatham". தி இந்து இம் மூலத்தில் இருந்து 1 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071201090231/http://www.hindu.com/cp/2007/11/23/stories/2007112350421600.htm. பார்த்த நாள்: 11 December 2012. 
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 மங்கம்மா சபதம் பாட்டு புத்தகம். தமிழ்நாடு: ஏ. வி. பிரசு, மதராசு. சூலை 1943.
  5. ராண்டார் கை (December 2008). "... And thus he made Chandralekha sixty years ago". Madras Musings XVIII இம் மூலத்தில் இருந்து 24 மே 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130524070957/http://madrasmusings.com/Vol%2018%20No%2017/and_thus_he_made_chandralekha_sixty_years_ago.html. பார்த்த நாள்: 2 July 2013.