திருவிருத்தம் (நம்மாழ்வார்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகிய நூல்களைப் பாடியுள்ளார்.

இவர் பொ.ஊ. 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.

நம்மாழ்வாரின் பாட்டுடைத் தலைவர் திருமால்.

இவர் திருமாலைத் தெய்வமாகக் கொண்டு பாடல்களைப் பாடினாலும் பிற சமயக் கோட்பாடுகளையும் மதித்துப் போற்றியவர்.

நம்மாழ்வாரின் திருவிருத்தம் கட்டளைக்கலித்துறைப் பாடல்களால் ஆனது. நூற்பயன் கூறும் இறுதிப்பாடலையும் சேர்த்து இதில் 100 பாடல்கள் உள்ளன. இவை அந்தாதி முறையில் கொடுக்கப்பட்டுள்ளன. அகத்திணையில் வரும் துறையைச் சேர்ந்த பாடல்களாகவே நூல் முழுவதும் அமைந்துள்ளது ஒரு குறிப்பிடத்தக்க செய்தி.

  • முதலாம் பாடல் ‘இமையோர் தலைவா! அடியேன் செய்யும் விண்ணப்பம் கேட்டருளாய்’ என்று தொடங்குகின்றது.
  • முகில்வண்ணன் கண்ணனுக்கே தன்னை ஆளாக்கிக்கொண்ட தலையின் நிலை கண்டு தோழி கவல்கின்றாள். (2)
  • கோவலன் பாவையும், மண்மகளும், திருவும் நிழல்போல் தொடரும் துழாய் அண்ணலைக் கண்ட நெஞ்சம் மீள மறுக்கின்றதே என்கிறாள் தலைவி. (3)
  • வாடையைப் ‘பனிநஞ்ச மாருதம்’ எனக் குறிப்பிட்டு அவன் பிரிவால் தலைவி வருந்துகிறாள். (4)
  • பனிப்புயல் வண்ணன் தலைவியைப் பனிப்புயலில் வாடவிட்டானே என்று தோழி கவல்கிறாள். (5)
  • தலைவன் தலைவியை ‘மதன செங்கோல் கடாவிய கூற்றம்’ எனச் சொல்லி வியக்கிறான். (6)
  • வானவில்லைத் திருமாலின் வில் எனத் தலைவி மயலகுகிறாள். (7)
  • தலைவன் பொருள் தேடச் செல்லவிருப்பதைத் தோழிக்குக் குறிப்பால் உணர்த்துகிறான். (8)
  • நேமியான் விண்ணாடு போன்ற இவளை யார் பிரிவார் எனத் தலைவன் ஏங்குகிறான். (9)
  • தலைவியை ‘மதியுடம்படும்படி’ச் செய்யுமாறு தோழியிடம் தலைவன் வேண்டுகிறான். (10)

இப்படி வளர்ந்துகொண்டே செல்லும் இந்த அக-இலக்கியம் வெறிவிலக்கு (20), தலைவி அன்னத்தை(சோற்றை) வெறுத்தல் (29), தலைவி மேகத்தைத் தூது விடுதல் (31), தலைவனுடன் தன் மகள் சென்ற சுரத்து அருமையை எண்ணி நற்றாய் கவலைப்படுதல் (37), கட்டுவிச்சி குறி சொல்லுதல் (53), தலைவி அன்றில் குரல் கேட்டுப் புலம்புதல் (87) போன்ற செய்திகளுடன் நூல் வளர்கிறது.

பாடல் 99

ஈனச்சொல் ஆயினும் ஆகுக எறிதிரை வையம்முற்றும்
ஏனத் துருவாய் இடந்த பிரான்இருங் கற்பகம்சேர்
வானத் தவர்க்கும் அல்லா தவர்க்கும் (மற்றெல்லாம்) ஆயவர்க்கும்
ஞானப் பிரானையல் லாலில்லை நான் கண்ட நல்லதுவே.

இப்படித் தலைவி சொல்லும் செய்தியோடு நூல் நிறைவு பெறுகின்றது.