அந்தாதி
அந்தாதி (கடைமுதலி / ஈற்றுமுதலி) என்பது யாப்பியலில் ஒரு தொடை வகையையும், ஒரு பிரபந்த வகையையும் குறிக்கும். அந்தாதி என்னும் சொல் முடிவு என்னும் பொருள்படும் அந்தம், தொடக்கம் என்னும் பொருள்படும் ஆதி ஆகிய இரு சொற்களின் சேர்க்கையால் உருவானது. இதற்கேற்ப, ஒரு பாடல் முடிவில் உள்ள எழுத்து, அசை, சீர், அல்லது அடி அடுத்து வரும் பாடலின் தொடக்கமாக அமையும் பாடல்களால் ஆனது, அந்தாதிச் செய்யுள் ஆகும். அடுத்தடுத்து வரும் அடிகள் அந்தாதியாக அமையும் போது, அது அந்தாதித் தொடை (கடைமுதலி/ஈற்றுமுதலித் தொடை) எனப்படும். அந்தாதி (கடைமுதலி / ஈற்றுமுதலி ) அமைப்பு பாடல்களை வரிசையாக மனப்பாடம் செய்வதற்கு வசதியாக உள்ளது.[1][2][3]
வரலாறு
சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தில் அந்தாதி அமைப்பு உண்டு. எனினும் அந்தாதி இலக்கியமாகத் தனியே அமைந்தவற்றில் இன்று கிடைக்கும் பழைய நூல் காரைக்கால் அம்மையாரின் அற்புதத் திருவந்தாதி ஆகும். தவிர பன்னிரு திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் உள்ள நூல்களில் எட்டு அந்தாதி வடிவில் அமைந்துள்ளன.
மாணிக்கவாசகரின் திருவாசகம், திருமூலரின் திருமந்திரம், நம்மாழ்வாரின் திருவாய்மொழி ஆகியவற்றிலும் அந்தாதி வடிவில் அமைந்த பாடல்களைக் காண முடியும். இவை தவிர பிரபந்த வகையைச் சேர்ந்த நான்மணிமாலை, இரட்டைமணிமாலை, அட்டமங்கலம், நவமணிமாலை, ஒருபா ஒருபது, இருபா இருபது, மும்மணிக்கோவை, மும்மணிமாலை, கலம்பகம் என்பவை அந்தாதியாக அமைகின்றன.
வகைகள்
அந்தாதிகள் பல வகைகளாக உள்ளன; இவற்றுள் பின்வருவன அடங்கும்:
- ஒலியந்தாதி (ஒலி ஈற்றுமுதலி )
- பதிற்றந்தாதி (பதிற்ற ஈற்றுமுதலி )
- நூற்றந்தாதி (பதிற்ற ஈற்றுமுதலி )
- கலியந்தாதி (கலி ஈற்றுமுதலி )
- கலித்துறை அந்தாதி (கலித்துறை ஈற்றுமுதலி )
- வெண்பா அந்தாதி (வெண்பா ஈற்றுமுதலி )
- யமக அந்தாதி (யமக ஈற்றுமுதலி )
- சிலேடை அந்தாதி
- திரிபு அந்தாதி
- நீரோட்ட யமக அந்தாதி
சில அந்தாதி நூல்கள்
- அற்புதத்திருவந்தாதி - காரைக்கால் அம்மையார்
- அபிராமி அந்தாதி-அபிராமி பட்டர்
- திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பி
- திருவேகம்பமுடையார் அந்தாதி - பட்டினத்தடிகள்
- கந்தர் அந்தாதி- அருணகிரிநாதர்
- அழகரந்தாதி-பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
- திருவேங்கடத்தந்தாதி -பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
- நூற்றெட்டு திருப்பதி அந்தாதி-பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
- பொன்வண்ணத்தந்தாதி- சேரமான் பெருமாள் நாயனார்
- திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி - அதிவீரராம பாண்டியர்
- திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி - சிவப்பிரகாச சுவாமிகள்
- சடகோபர் அந்தாதி - கம்பர்
- சரசுவதி அந்தாதி - கம்பர்
- திருவரங்கத்து அந்தாதி - பிள்ளைப் பெருமாள் அய்யங்கார்
- திருவிடைமருதூர் அந்தாதி
- கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி
- அம்மை பாதி அப்பன் பாதி அந்தாதி
- குருநாதன் அந்தாதி
- இராமானுச நூற்றந்தாதி-திருவரங்கத்தமுதனார்
- திருநூற்றந்தாதி - அவிரோதிநாதர் - ஜைன நூல் - 14ம் நூற்றாண்டு
மேற்கோள்கள்
- ↑ Carman, John; Carman, Research Fellow and Senior Lecturer John; Narayanan, Vasudha (1989-05-17) (in en). The Tamil Veda: Pillan's Interpretation of the Tiruvaymoli. University of Chicago Press. பக். 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-226-09305-5. https://books.google.com/books?id=FrATjqi_QIUC&dq=antati+verse&pg=PA60.
- ↑ "அற்புதத் திருவந்தாதி - விக்கிமூலம்". Wikisource. https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF.
- ↑ "Archived copy" இம் மூலத்தில் இருந்து 2008-11-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081121200054/http://www.acharya.org/divyapr/ayiram3/01-mtvant30/2082-mudhal-thiruvandhAdhi-eng.pdf. பார்த்த நாள்: 2012-08-31.