திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி
திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி அந்தாதி வகையைச் சேர்ந்த ஒரு நூலாகும்.[1]
அமைப்பு
இந்நூல் அதிவீரராம பாண்டியரால் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டம், சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் வைப்பாற்றின் தென்கரையில் கரிவலம்வந்தநல்லூர் என்றும் திருக்கருவை என்றும் அழைக்கப்படும் ஊரில் அமைந்துள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடப்பெற்றதாகும். இதனைக் குட்டித் திருவாசகம் என்பர். இவ்வந்தாதியையும் இதை ஒத்த இரண்டு அந்தாதிகளையும் இவருடைய தமையனார் வரதுங்கராம பாண்டியர் இயற்றியதாகக் கூறுவோரும் உளர். ஆனால் இவற்றை அதிவீரராம பாண்டியரே இயற்றினார் என்பது பெரும்பாலானோர் கருத்தாகும். [2]
பாடல் - எடுத்துக்காட்டு
பாடல் 62
- இருக்கினும் நிற்கும்போதும் கண் துயிலும்போதும்
- பொருக்கென நடக்கும்போதும் பொருந்தி ஊண் துய்க்கும்போதும்
- மருக்கிதழ்க் கனிவாயாரை முயங்கி நெஞ்சு அழியும் போதும்
- திருக்களா உடைய நண்பா சிந்தை உன் பாலது ஆமே
பாடல் 63
- சிந்தனை உனக்குத் தந்தேன் திருவருள் எனக்குத் தந்தாய்
- வந்தனை உனக்குத் தந்தேன் மலரடி எனக்குக் தந்தாய்
- பைந்துணர் உனக்கும் தந்தேன் பரகதி எனக்குத் தந்தாய்
- கந்தனைப் பயந்த நாதா கருவையில் இருக்கும் தேவே
பாடல் 69
- அதிசயம் உளத்தில் காட்டி அகம் புறம் தானாக் காட்டி
- துதி செயக் கவினாக் காட்டித் தெடக்கு அறா நேயம் காட்டி
- மதியினில் களிப்பும் காட்டி வந்து எனை ஆண்டுகொண்டான்
- கதி என உலகம் போற்றக் களா நிழல் அமர்ந்த நாதன்.
பிற இரு அந்தாதிகள்
இவரே கலித்துறை அந்தாதி, வெண்பா அந்தாதி என இரு வேறு அந்தாதிகள் பாடியுள்ளதால் வேறுபடுத்திக் காட்டுவதற்காகப் பதிற்றுப்பத்தந்தாதி என்று பெயரிட்டுள்ளார் என அறியலாம். [2] இவை மூன்றும் கருவை அந்தாதிகள் என அழைக்கப்படுகின்றன.
பிற நூல்கள்
இவர் மேற்கண்ட பதிற்றுப்பந்தாதியுடன், திருக்கருவை கலித்துறை அந்தாதி, திருக்கருவை வெண்பா அந்தாதி, நறுந்தொகை என்ற சிறுநூல்களையும் இயற்றியுள்ளார். இவர் இயற்றிய பிற நூல்கள் நைடதம், கூர்மபுராணம், இலிங்கபுராணம், காசிக்காண்டம் ஆகியவையாகும். வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துத் தமிழில் நூல்கள் எழுதியுள்ள நிலையில் இவருக்கு வடமொழிப்புலமையும் உள்ளது என்பதை நன்கறிய முடியும்.[2]
ஆசிரியர்கள்
இவருக்குக் கல்வி கற்பித்தவர் சுவாமிநாத தேவர், தீக்கை செய்தவர் அகோர சிவாச்சாரியார்.[2]
மேற்கோள்கள்
- ↑ அதிவீரராமபாண்டியர் இயற்றிய திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி, யாழ்ப்பாணத்து நல்லூர் சதாசிவம் பிள்ளை - நான்காம் பதிப்பு அச்சகம் : வித்தியாநுபாலன யந்திரசாலை, சென்னை, பதிப்பாண்டு : சுபகிருது ஆண்டு. ஆடி மாதம்
- ↑ 2.0 2.1 2.2 2.3 அதிவீரராம பாண்டியர் அருளிய திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, பதிப்பாசிரியர் மணி.மாறன், தஞ்சாவூர் சரபோஜியின் சரசுவதி மகால் நூலகம் மற்றும் ஆய்வு மையம், தஞ்சாவூர், 2016