கருவை அந்தாதிகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

கருவை அந்தாதி நூல்கள் மூன்று.[1]

இங்குக் கருவை என்பது கரிவலம்வந்த நல்லூரைக் குறிக்கும். [2] வரதுங்க ராமன் என்னும் பாண்டிய மன்னன் கொக்கோகம், பிரமோத்தர காண்டம் என்னும் நூல்களையும் கருவை என்னும் கரிவலம்வந்த நல்லூர் சிவபெருமான்மீது மூன்று நூல்களையும் பாடியுள்ளார். காலம் 16 ஆம் நூற்றாண்டு.

திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி

பத்துப் பாடல்களின் பத்து அடுக்குகளைக் கொண்ட நூல் பதிற்றுப்பத்து எனப்படும். சங்கநூல்களில் உள்ள பதிற்றுப்பத்து 10 புலவர்களால் பாடப்பட்ட பாடல்களைக் கொண்ட ஒரு தொகுப்பு நூல். இதில் நான்காம் பத்தில் உள்ள 10 பாடல்களும் அந்தாதியாக வருகின்றன. [3] திருவாசகத்தில் உள்ள திருச்சதகம் [4] பத்துப் பத்தாக அடுக்கப்படாமல் பத்துப்பத்து (நூறு) என்ற முறையில் அமைந்துள்ள முன்னோடி நூல். இதில் 100 பாடல்களும் அந்தாதித் தொடையில் அடுக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் அந்தாதியாகத் தொகுக்கப்பட்ட நூலே இந்தக் கருவை அந்தாதி நூல்.

இதனைக் 'குட்டித் திருவாசகம்' எனப் போற்றி வருகின்றனர். இதில் உள்ள சுவை மிக்க பாடல்கள் மூன்று எடுத்துக்காட்டாகத் தரப்படுகின்றன.

1

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்
(மா மா காய் அரையடிக்கு)
கண்ட கண்கள் புனல்பாயக் களிப்பாய் உள்ளம் கரைஅழிய
விண்ட மொழிநும் நாக்குழற விம்மி மேனி மயிர்பொடிப்ப,
பண்டை வசம்போய்ப் பரவசமாய்ப் பரமா னந்தத்(து) ஒளிநறவம்
உண்டு தெவிட்டா அருள்புரிந்தான் கருவை வாழும் உறவோனே.


2 கலி விருத்தம்

மா கூவிளம் கூவிளம் கூவிளம்

முதற்சீர் குறிலீற்று மாவாக இருக்கும்.

விருத்தம் நேரசையில் தொடங்கினால் அடிக்கு 11 எழுத்து;

நிரையில் தொடங்கினால் 12. எழுத்தெண்ணிக்கை தானே வரும்!

2, 3 சீர்களில் மாச்சீர் வரின் அடுத்த சீர் நிரையில் தொடங்கும்.

(முதலிரண்டு சீர்களுக்கிடையில் 'மாவைத் தொடர்ந்து நேர்' என்ற நேரொன்று ஆசிரியத்தளை அமையும்;

மற்ற இடங்களில் வெண்டளை அமையும்)


என்னை ஆள்பவன் என்னுள் இருப்பவன்

தன்னை யான்தொழத் தண்ணளி தந்தவன்
பொன்னை ஆளும் புயன்தொழ நிற்பவன்
கன்னி பாகன் கருவைக்(கு) இறைவனே.


3 கலித்துறை

(மா விளம் விளம் விளம் மா)

(விளத்தின் இடத்தில் மாங்காய்ச்சீர் வருவதும் உண்டு)


சிறக்கத் தக்கது கருவையான் திருவடி நேயம்
மறக்கத் தக்கது மற்றுள சமயத்தின் மார்க்கம்
துறக்கத் தக்கதிவ் வுடம்பையான் என்றுறு உடம்பு
பிறக்கத் தக்கது சிவானந்த வாரியின் பெருக்கே.

திருக்கருவைக் கலித்துறை அந்தாதி

விநாயகரைப் போற்றும் காப்புச் செய்யுள் ஒன்றும், கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் நூறும் கொண்ட நூல் இது. பத்திச் சுவை சொட்டும் பாடல்களைக் கொண்ட இந்த நூலிலிருந்து எடுத்துக் காட்டுக்கு ஒரு பாடல்;

கட்டளைக் கலித்துறை
வாழ்த்திட நாஉண்டு பாவிக்க நீஉண்டு மண்ணிலுறத்
தாழ்த்திடச் சென்னி யுமுண்டுகண் டாய்தண் களவி(ன்)மலர்
ஊழ்ந்திட நீழல் உறைவார் அடிஅண் டுனைநிரயம்
வீழ்த்திடு வாருமுண் டோநெஞ் சமேஎன் மெலிவதுவே.

திருக்கருவை வெண்பா அந்தாதி

காப்புச் செய்யுள் ஒன்று, மற்றும் அந்தாதியாய் அமைந்த 100 வெண்பாக்கள் என அமைந்துள்ள நூல் இது. எல்லாப் பாடல்களிலும் பத்திப் பெருக்கெடுத்த ஓட்டம். எடுத்துக்காட்டுப் பாடல் ஒன்று.

நேரிசை வெண்பா
தார(ம்)மனை மட்டும், தனைஅறிந்தோர் ஊர்மட்டும்
சேரும் உறவத் தெருமட்டும் - சார்வதன்றி
நம்கருவை யானென்ற நல்வினைபோல் செல்கதியின்
எங்குமுத வாரே இவர். [5]

அடிக்குறிப்பு

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1976, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, மூன்றாம் பாகம். சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. கொங்குநாட்டுக் கருவூரைக் கருவை எனக் குறிப்பிடும் வழக்கம் இல்லை
  3. எனினும் முதல் பாடலின் தொடக்கமும், இறுதிப் பாடலின் இறுதியும் மண்டலித்து அந்தாதியாக வரவில்லை.
  4. திருச்சதகம்
  5. எங்குமுத வாரே இவர் - வெண்பா முறையில் பிரிப்பு
"https://tamilar.wiki/index.php?title=கருவை_அந்தாதிகள்&oldid=16754" இருந்து மீள்விக்கப்பட்டது