மும்மணிக்கோவை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மும்மணிக்கோவை என்பது பிரபந்தம் எனப்படும் சிற்றிலக்கிய வகைகளுள் ஒரு வகையாகும். இதில், ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் பாவகைகளில் அமைந்த பாடல்கள் மாறி மாறி வரும். 30 பாடல்களைக் கொண்டு அமையும் இந்தச் சிற்றிலக்கியவகையில் பாடல்கள் அந்தாதி வடிவிலும் இருக்கும்.

எடுத்துக்காட்டு

பட்டினத்துப் பிள்ளையார் இயற்றிய திருவிடைமருதூர் மும்மணிக்கோவையில் இருந்து முதற் பாடலின் ஒரு பகுதியும், இரண்டாம் மூன்றாம் பாடல்களும் நான்காம் பாடலின் ஒரு பகுதியும் கீழே எடுத்துக்காட்டுக்காகத் தரப்பட்டுள்ளன. முதற்பாடல் 74 வரிகளைக் கொண்டது. இது ஆசிரியப்பா வகைகளில் ஒன்றான இணைக்குறள் ஆசிரியப்பாவில் அமைய, இரண்டாம் பாடல் நேரிசை வெண்பாவிலும், மூன்றாம் பாடல் கட்டளைக் கலித்துறையிலும் அமைந்திருப்பதைக் காணலாம். நான்காம் பாடல் மீண்டும் இன்னொரு ஆசிரியப்பா வகையான நேரிசை ஆசிரியப்பாவாக உள்ளது.

முதல் பாடல் "பொருட்டே" என்று முடிவதையும், இரண்டாம் பாடல் "பொருளும்" என்று தொடங்குவதையும் காண்க. இவ்வாறே இரண்டாம் பாடல் "வரும்" என்று முடிய மூன்றாம் பாடல் "வருந்தே" என்று தொடங்குகிறது. மூன்றாம்பாடலின் முடிவுச் சொல் "யாதொன்றுமே" என இருக்க நான்காம் பாடல் "ஒன்றினோ" என்று தொடங்குகிறது. இவ்வாறே இதன் முப்பது பாடல்களும் அந்தாதியாக அமைந்துள்ளன.


இணைக்குறளாசிரியப்பா

தெய்வத் தாமரைச் செவ்விதின் மலர்ந்து
வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
சிலம்புங் கழலு மலம்பப் புனைந்து
கூற்றி னாற்றன் மாற்றிப் போற்றாது
.................................................
..................................................
................................................
றிருவடி பரவுதும் யாமே நெடுநா
ளிறந்தும் பிறந்து மிளைத்தன மறந்துஞ்
சிறைக் கருப் பாசயஞ் சேரா
மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே.

நேரிசைவெண்பா

பொருளுங் குலனும் புகழுந் திறனு
மருளு மறிவு மனைத்து - மொருவர்
கருதாவென் பார்க்குங் கறைமிடற்றாய் தொல்லை
மருதாவென் பார்க்கு வரும்.

கட்டளைக்கலித்துறை

வருந்தே னிறந்தும் பிறந்து மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தே னாகிற் புகுகின்றிலேன் புகழ் மாமருதிற்
பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றி லாசையின்றி
யிருந்தே னினிச்சென் றிரவே னொருவரை யாதொன்றுமே.

நேரிசையாசிரியப்பா

ஒன்றினோ டொன்று சென்றுமுகி றடவி
யாடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகை
தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த
வோவநூற் செம்மைப் பூவியல் வீதி
.........................................................
............................................

மும்மணிக்கோவைகள் சில

"https://tamilar.wiki/index.php?title=மும்மணிக்கோவை&oldid=16875" இருந்து மீள்விக்கப்பட்டது