மோனை
யாப்பிலக்கணத்தில் செய்யுள்களின் சீர்களும், அடிகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபடும் முறையால் தொடைகள் அமைகின்றன. பல வகையாக அமையும் தொடைகளில் மோனை முக்கியமானவற்றுள் ஒன்று.
மோனையும் அதன் வகைகளும்
- எழுவாய் எழுத்தொன்றின் மோனை என யாப்பருங்கலக் காரிகையும்,
- அடிதொறும் தலையெழுத்து ஒப்பது மோனை எனத் தொல்காப்பியச் செய்யுளியலும் கூறுகின்றன.
இதிலிருந்து மோனை என்பது செய்யுள் அடிகளின் முதல் எழுத்துக்கள் ஒத்து அல்லது ஒன்றி வருதல் மோனை என்றாகிறது. அடிகளின் முதல் எழுத்துக்கள் மட்டுமன்றி சீர்களின் முதலெழுத்துக்கள் ஒன்றி வரினும் அது மோனையே. சீர்கள் தொடர்பில் வரும் மோனை சீர்மோனை எனவும், அடிகள் தொடர்பில் வருவது அடிமோனை எனவும் குறிப்பிடப்படுகின்றன. மோனைத் தொடை தொடர்பில் அடிமோனையை விடச் சீர்மோனையே சிறப்புப் பெறுகின்றது.
எழுத்துக்கள் ஒத்து வருதல் எனும்போது ஒரே எழுத்துக்கள் வருதல் என்பது பொருளாகாது. ஒத்த எழுத்துக்கள் பின்வருமாறு அமையலாம்.
- ஒரே எழுத்து ஒன்றுக்கு ஒன்று மோனையாதல்.
- ஒரே இன எழுத்துக்கள் ஒன்றுக்கொன்று மோனையாதல்
உயிரெழுத்துக்கள் மூன்று இனங்களும், மெய்யெழுத்துக்களில் மூன்று இனங்களும் உள்ளன.
உயிரெழுத்து இனங்கள்
- 1. அ, ஆ, ஐ, ஔ
- 2. இ, ஈ, எ, ஏ, யா
- 3. உ, ஊ, ஒ, ஓ
மெய்யெழுத்து இனங்கள்
- 1. ஞ், ந்
- 2. ம், வ்
- 3. த், ச்
மோனை எழுத்துக்கள்
சீர்மோனைகள்
- 1. பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
- மோனைஇந்த வெண்பா அடியிலே முதற் சீரின் முதல் எழுத்தாக வரும் பா மூன்றாம் சீரின் முதலெழுத்தாகவும் வருகிறது. நாலாஞ்சீரின் முதலெழுத்தாகவும் அதன் உயிரெழுத்து இனமான ப வருவதால், இவ்வடி 1, 3, 4 ஆம் சீர்களில் மோனை அமைந்த அடியாகும்.
- 2. கற்க கசடற கற்றவை கற்றபின்
- இத் திருக்குறள் அடியில் 1, 2, 3, 4 ஆகிய எல்லாச் சீர்களிலும் க என்னும் ஒரே எழுத்து மோனையாக வந்துள்ளது. இவ்வாறு அமைவது முற்று மோனை எனப்படும்.
அடிமோனைகள்
- தம்பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
- தந்தம் வினையான் வரும்
- மேலே காட்டிய திருக்குறளில் இரண்டு அடிகளினதும் முதற் சீர்கள் த எனும் எழுத்தில் தொடங்குவதால் இதிலே அடிமோனை அமைந்துள்ளது.
அடிமோனை சிறப்புக் குறைவானதால் அடிமோனைகள் அமைந்த பாடல்கள் மிகக் குறைவே. அடிகள் தொடர்பில் சிறப்புப் பெறுவது எதுகையாகும் இது அடி எதுகை எனப்படும்.
யாப்பருங்கல விருத்தி[1]
இந்த நூல் 7 வகையாக மோனைகளைப் பகுத்துக்கொண்டு எடுத்துக்காட்டு தருகிறது
- இணை மோனை
- அணிமலர் அசோகின் தளிர் நலம் கவற்றி
- பொழிப்பு மோனை
- அரிக்குரல் கிண்கிணி அரற்றும் சீரடி
- ஒரூஉ மோனை
- அம்பொற் கொடிஞ்சி நெடுந்தேர் அகற்றி
- கூழை மோனை
- அகன்ற அல்குல் அம்நுண் மருங்குல்
- மேற்கதுவாய் மோனை
- அரும்பிய கோங்கை அவ்வளை அமைத்தோன்
- கீழ்க்கதுவாய் மோனை
- அவிர்மதி அனைய திருநுதல் அணங்கு
- முற்று மோனை
- அயில்வேல் அணுக்கி அம்பலைத்து அமர்ந்த
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்
- ↑ அமிதசாகரனார் இயற்றிய யாப்பருங்கலம் - பழைய விருத்தி உரை - வித்துவான் மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை பதிப்பு - சென்னை அரசு அச்சகம் - 1960 - பக்கம் 111