தியாகராஜ பாகவதர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
எம்.கே.தியாகராஜ பாகவதர்

இயற் பெயர் மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜன்
பிறப்பு (1910-03-01)மார்ச்சு 1, 1910
மயிலாடுதுறை, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு November 1, 1959(1959-11-01) (aged 49)
வேறு பெயர் எம்.கே.டி, பாகவதர்
நடிப்புக் காலம் 1934–1959
துணைவர் கமலம்
ராஜம்
பிள்ளைகள் எம்.கே.டி.ரவிந்திரன்
பெற்றோர் கிருஷ்ணசாமி ஆசாாி விஸ்வகர்மா
மாணிக்கம்மாள்

எம். கே. தியாகராஜ பாகவதர் - மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம். கே. டி என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959) தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திரக் கதாநாயகனும் மிகச் சிறந்த கர்நாடகச் சங்கீத தமிழ்ப் பாடகரும் ஆவார். 1934 ஆம் ஆண்டில் பவளக்கொடி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடித்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படங்களாகும். 1944-இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ் 3 ஆண்டுகள் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றைய காலகட்டத்தில் பெற்றது.

சென்னையில் (அன்றைய மதராஸ்) மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட இலட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக உற்ற தோழரான என். எஸ். கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையைப் பெற்றார். தண்டனைக் காலத்திலேயே இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 1948-இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு ஆண்டு[1] சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதில் நொடிந்துபோன பாகவதர் அதன்பின் திரைப்படங்களில் நடிக்க மனமில்லாமல் இருந்துவந்தார். நவம்பர் 1, 1959-இல் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே மரணமடைந்தார்[1]. தமிழ்த் திரையிலகில் அவரைப்போல வாழ்ந்தவருமில்லை, அவரைப் போல வீழ்ந்தவருமில்லை [1] என்ற கருத்து அவருடைய ஆத்ம இரசிகர்களிடையேயும், திரையுலகிலும் நிலவுவது உண்டு.

வாழ்க்கைச் சுருக்கம்

தியாகராஜன் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் (தற்பொழுது மயிலாடுதுறை), விஸ்வகர்மா பொற்கொல்லர் அதாவது தங்க நகை செய்யும் ஆசாரி குடும்பத்தில் 1910 மார்ச் முதல் நாள் கிருஷ்ணசாமி விஸ்வகர்மா - மாணிக்கம்மாள் தம்பதியருக்கு முதல் மகனாகப் பிறந்தார்.[2] பல நாடகங்களில் பெண்வேடம் (அயன் ஸ்த்ரீ பார்ட்) புனைந்து பல வேடங்களில் நடித்தார். கிருஷ்ணசாமி தன் குடும்பத்துடன் திருச்சிக்குச் சென்று அங்கு உய்யக்கொண்டான்திருமலை என்னும் இடத்தில் நகைவேலை செய்துவந்தாா்.[3] தியாகராஜன் உடன் கோவிந்தராஜன், சண்முகராஜன் என்ற இரண்டு இளைய சகோதரர்களும் அமிர்தவள்ளி, புஷ்பவள்ளி, பங்கஜவள்ளி என்ற மூன்று சகோதரிகளும் உடன் பிறந்தவர்கள் ஆவர்.

சிறுவன் தியாகராஜனுக்குப் பள்ளிப்படிப்பில் நாட்டம் செல்லவில்லை. யார் பாடினாலும், இசைக் கச்சேரி எங்கு நடைபெற்றாலும் தியாகராஜன் அங்கே செல்வது மட்டுமல்ல, மறுபடியும் அந்தப் பாடல்களை ஒழுங்காகக் கேட்போர் வியக்கும் வகையில் பாடிக்காட்டுவாராம். எஃப். ஜி. நடேச ஐயர் அன்றைய ஆங்கிலேயர் ஆட்சியில் புதுக்கோட்டை, இரயில் நிலையத்தில் ஸ்டேசன் மாஸ்டர் ஆகப்பணியாற்றி வந்தார். அவர் அப்போது சொந்தமாகச் திருச்சியில் நடத்தி வந்த இரசிக இரஞ்சன சபாவில் நடந்து வந்த அரிச்சந்திரா நாடகத்தில் அரிசந்திரனின் மகனாக லோகிதாசன் பாத்திரத்தில் தியாகராஜன் நடித்தார். அரிச்சந்திரா நாடகத்தைப் பார்த்த பிரபல வயலின் வித்வான் மதுரை பொன்னு ஐயங்கார், தியாகராஜனின் குரல் வளத்தையும், இசை நயத்தையும் கண்டு பாராட்டியதுடன். அவருக்குக் கருநாடக இசையை முறையாகக் கற்றுத்தர முன்வந்தார். கருநாடக இசையில் பயிற்சி பெற்றார். அதேநேரத்தில் நாடகத் துறையில் ஆசானாக விளங்கிய நடராஜ வாத்தியார், நடிப்பில் அவருக்குப் பயிற்சியும் தந்தார்.

இவர் இசையிலும், நடிப்பிலும் சிறந்து விளங்குவார் என வாழ்த்தி நடேச அய்யர் அவர்கள் ""பாகவதா்"" என்ற பட்டத்தை வழங்கினார். அதனால் தியாகராஜன் என்ற பெயருடன் இணைந்து பாகவதர் என்ற பட்டத்துடன் சேர்த்துத் தியாகராஜ பாகவதா் என்று பெயர் ஏற்பட்டது. தியாகராஜ பாகவதருக்குக் கமலம், இராஜம் என்ற இரு மனைவிகள் இருந்தனர். இதில் முதல் மனைவி ஆன கமலத்தின் குடும்பம் மட்டுமே சென்னையில் வசித்துவருகின்றது. இரண்டாவது மனைவி இராஜத்தின் குடும்பம் பற்றி தகவல் தெரியவில்லை.

கர்நாடக இசையில் தேர்ச்சி

தியாகராஜர், பிடில் வித்வான் பொன்னு ஐயங்கார், திருவையாறு இராமசாமி பத்தர் ஆகியோரிடம் இசை பயின்றார்.[3] ஆறு ஆண்டுகள் பயிற்சி தரப்பட்டதும், தியாகராஜனுடைய பாட்டுக் கச்சேரியின் அரங்கேற்றத்தை நடத்த பொன்னு ஐயங்கார் திட்டமிட்டு, இசைக்கலையில் மிகப் பெரியவர்களாகத் திகழ்ந்தவர்களை அணுகி, தமது மாணவரின் இசைத் திறமையை விளக்கினார். கடைசியாக, தமிழ்நாட்டில் தலைசிறந்த சங்கீத மேதையான புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை, தியாகராஜன் கச்சேரியில் கஞ்சிரா வாசிக்க முன்வந்தார். அவரையொட்டி, மிருதங்கம், வயலின் ஆகியவற்றில் தலைசிறந்தவர்களும் தியாகராஜனின் அரங்கேற்றத்தில் உடன் வாசிக்க இசைந்தனர். இது அன்றைய இசை உலகில் மிகப்பெரிய நிகழ்ச்சியாகக் கருதப்பட்டது.

யாரும் எதிர்பார்க்காத வகையில் அன்றைய நாள் தியாகராஜனின் குரல் வளமும், கர்நாடக இசையின் இனிமையும் நுணுக்கமும், கேட்போர் வியப்படையும் வகையில் நான்கு மணி நேரக் கச்சேரியைச் சிறப்படையச் செய்தன. கச்சேரி முடிவில் புதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளை எழுந்து, தியாகராஜன் ஒரு "பாகவதர்" என்று பட்டம் வழங்கினார். அவ்வாறு தியாகராஜ பாகவதர் தமிழிசை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். நாளடைவில் பாகவதர் என்றால் அவரை மட்டுமே குறிப்பதாக அது மக்களிடம் அமைந்தது.

நாடக நடிகராக

1926-இல் திருச்சி பொன்மலையில் முதன்முதலாகப் பவளக்கொடி நாடகத்தில் அர்ஜுனனாக வேடமேற்று தியாகராஜ பாகவதர் நடித்தார். அதில் பவளக்கொடி வேடமேற்றுப் பெண் வேடத்தில் டி.பி.இராமகிருஷ்ணன் நடித்தார். பிறகு அவருடன் இணைந்து நாடகத்தில் பவளக்கொடி வேடத்தில் எஸ். டி. சுப்புலட்சுமி நடித்தார். பாகவதர், சுப்புலட்சுமி நாடகமேடை நட்சத்திரங்களாகப் பிரபலமடைந்தனர்.

திரைப்படத்தில் அறிமுகம்

1934-இல் அவர்கள் நடித்த பவளக்கொடி நாடகம் திரைப்படமாக லேனா (லெட்சுமணன் செட்டியார்) தயாரிப்பில், பாபநாசம் சிவன் பாடல்களுடன், கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்தது. அந்தப் படத்தில் இருந்த 55 பாடல்களில் 22 பாடல்களைப் பாகவதர் பாடியிருந்தார். தமிழ்நாடெங்கும் திரைப்படக் கொட்டகைகளில் மக்கள் வெள்ளம் வரலாறு காணாத அளவுக்கு நிரம்பி பவளக்கொடிக்குப் பெரிய வரவேற்பு இருந்தது. ஒன்பது மாதங்கள் தொடர்ந்து அப்படம் ஓடியது. அதன்பிறகு பாகவதர் நடிப்பில், நவீன சாரங்கதரா (1936), சத்யசீலன் (1936) (பாகவதர் இரட்டை வேடமேற்று நடித்த முதல் திரைப்படம்), சிந்தாமணி (1937), அம்பிகாபதி (1937), திருநீலகண்டர் (1939), அசோக் குமார் (1941), சிவகவி (1943), ஹரிதாஸ் (1944) ஆகிய திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக வெளிவந்தன. 1944 ஆம் ஆண்டு வெளியான ஹரிதாஸ், சென்னை பிராட்வே திரையரங்கில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து ஓடியது. 1944, 1945 மற்றும் 1946 ஆகிய மூன்று தீபாவளிப் பண்டிகைகளை இத்திரைப்படம் கண்டது.[4]

தியாகராஜனின் தியாகச் செயல்

ஒரு முறை அப்போதைய பிரித்தானிய ஆங்கிலேயர்களின் ஆட்சியில் அவர்கள் இயக்கிய ஒரு நாடகத்தை எம்.கே. தியாகராஜ பாகவதர் நடித்துக் கொடுத்தார். அந்த நாடகத்திற்கு மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது மட்டும் இல்லாமல் ஆங்கிலேயர்களின் எதிர்பார்த்த வெற்றியைவிட அதிகமான வசூலைக் கொடுத்ததால், அந்த நாடகத்தில் நடித்த தியாகராஜ பாகவதருக்குச் சம்பளமாக ஒரு இலட்சம் ரூபாயுடன் திருச்சிக்கு அருகே உள்ள திருவெறும்பூர் என்ற விவசாய வளமிக்க ஊரைப் பரிசாகத் தந்தனர். ஆனால் அதை வாங்க மறுத்து அந்த ஊரை மீண்டும் ஆங்கிலேயர்களிடமே தந்துவிட்டு ஒரு இலட்சம் ரூபாயை இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கு நிவாரண நிதியாக வழங்கிவிட்டார், அந்தத் தியாகச் செம்மல்.

இரசிகர் திலகம்

இவரது நாடகம் சேலத்தில் நடக்கும்போது திடீரென்று மழை பெய்தபோதிலும் இரசிகர்கள் மழையில் கலைந்து செல்லாமல் கொட்டும் மழையில் தியாகராஜ பாகவதரின் நடிப்பைக் கண்டு இரசித்தனர். அதே போல் ஈரோட்டில் இவரது நடித்த நாடகம் ஒன்று நடக்கும்போதே சிலர் அந்த நாடகத் திடலில் மின்சாரம் தாக்கிப் பலியான போதிலும் அதைச் சட்டை செய்யாமல் இவரது நடிப்புக்கு அடிமையாகி போனார்கள்.

இரசிகர்களிடையே பெரும் செல்வாக்கு பெற்றிருந்த தியாகராஜ பாகவதர் அன்றைய நாட்களிலே திருச்சி நகரமன்ற இரசிகர்கள் சார்பில் திருச்சியின் மத்தியப் பகுதியில் உள்ள கலையரங்கம் திரையரங்கில் இவருக்கு ஒரு இரசிகர்மன்றம் கட்டபட்டதைத் தொடர்ந்து திருச்சி மலைக்கோட்டை அருகே உள்ள திருச்சிசென்னை இரயில்வே வழித்தடத்தில் திருச்சிராப்பள்ளி டவுன் ஸ்டேசன் என்ற ஒரு சிறிய இரயில் நிலையத்தைச் சென்னையில் இருந்து இரயிலில் வரும் தியாகராஜ பாகவதரை இரசிகர்கள் பார்ப்பதற்காகவே மத்திய ரயில்வே அரசாங்கமே நிறுவி பெருமைப்படுத்தியது.

இலட்சுமிகாந்தன் கொலை

இலட்சுமிகாந்தன் என்பவர் "சினிமா தூது" என்ற ஏடு மூலம், பொதுவாழ்விலும், தொழில்துறையிலும், கலையுலகிலும் இருந்த பிரமுகர்கள் பலர்மீது பலவிதமான வீண்பழிகளைச் சுமத்தியும், மிரட்டியும், பணம் பறித்து வந்தார். இந்தப் பத்திரிகை பின்னர் சட்டப்படி தடைசெய்ய்யப்பட்டது. அதன் பிறகு, "இந்து நேசன்" என்ற மற்றொரு பத்திரிகை மூலம் எழுதி வந்தார் இலட்சுமிகாந்தன்.

1944 நவம்பர் 9ஆம் நாள் சென்னையில் இலட்சுமிகாந்தனைச் சிலர் வழிமறித்துக் கத்தியால் காயப்படுத்தினர். பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மறுநாள் அதிகாலையில் மர்மமான முறையில் இறந்துவிட்டார்.

1944 நவம்பர் 27ஆம் தேதி பாகவதரும், என்.எஸ்.கிருஷ்ணனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர். இவர்களைப் பற்றி இலட்சுமிகாந்தன் அவதூறாகச் செய்திகள் வெளியிட்டதைக் கொலைக்குக் காரணமாகக் காவல்துறை குறிப்பிட்டது. நீண்ட விசாரணைக்குப் பிறகு பாகவதர், என்.எஸ்.கிருஷ்ணன் மற்றும் நால்வர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதன்மீது செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதன்மீது மேலும் இலண்டன் பிரிவி கவுன்சிலுக்கு முறையீடு செய்யப்பட்டது. அதன் பிறகு பாகவதரும், கிருஷ்ணனும் விடுதலை செய்யப்பட்டனர்.

பாகவதர் சிறையிலிருந்து வெளிவந்ததும் எல்லாப் பற்றுகளையும் விட்டு நீங்கிய, துறவிபோல் ஆகிவிட்டார். மேற்கொண்டு நடிப்பதற்கான பல அழைப்புகளை அவர் தவிர்த்தார்.

மீண்டும் நடிப்பில்

சிறையிலிருந்து வெளிவந்ததும், இராஜமுக்தி (1948), அமரகவி (1952), சியாமளா (1952), புதுவாழ்வு (1957), சிவகாமி (1960) ஆகிய படங்கள் பெரும் வெற்றியைப் பெறவில்லை. ஆனால் அவர் பாடல்கள் அந்தப்படங்களில் எப்போதும்போல் சிறப்பாக அமைந்திருந்தன.

நடிப்பு மற்றும் சங்கீதம்

பாட்டு

எம்.கே.டி-யின் பாடல்கள் பெரும்பாலும் இறைப்பற்றுடனும், தென்னிந்தியப் பாரம்பரிய இசையைச் சார்ந்தே இருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு வழக்கமாக (ஆஸ்தான) பாடலெழுதும் பாடலாசிரியரான பாபநாசம் சிவன்[1], இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில் வல்லவராவார். இவரின் பல பாடல்கள் எம்.கே.டி-யின் புகழை உயர்த்தின, மக்களிடையே பெரும்புகழையும் பெற்றன. அவற்றில் சில,

  • உன்னை அல்லால்,
  • நீலகண்டா,
  • அம்பா(ள்) மனம் கனிந்துருகியுனது கடைக் கண் பா(ர்),
  • சொப்பன வாழ்வில் மகிழ்ந்தே(ன்) சுவாமி சுப்ரமணிய(ன்)உனை மறந்தேன்,
  • ஞானக்கண் இருந்திடும் போதினிலே,
  • பூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்,
  • மன்மத லீலையை வென்றார் உண்டோ,
  • தீன கருணாகரனே நடராஜா
  • இராஜன் மஹராஜன்
  • வதனமே சந்திரபிம்பமோ

போன்ற பல பாடல்கள் இவரின் புகழுக்குச் சான்றாக உள்ளன. அவர் பாடல்களில் 41/2 கட்டை (குரல் தடிமன்) சுருதியில் (சுதி) பாடக்கூடியவர். குரலில் பெண்களின் நளினத்தன்மை மிகுந்திருக்கும் பல நேரங்களில் பெண் பாடுவது போல் தோன்றுவதுண்டு. சுருதியின் உச்சநிலையிலிருந்து உடனே கீழே இறங்கிப்பாடும் வல்லமை பெற்றவர். வார்த்தைகளை உடைத்து உடைத்துப் பாடுவதில் வல்லவர். இறுதியில் வல்லினமெய் தெரியாமல் பாடக்கூடியவர்.

அவரின் கர்நாடக இசைக்குச் சான்றாக தஞ்சை அருகே நடந்த நிகழ்வைச் சான்றாகக் கூறுவர். தஞ்சாவூர் அருகே உள்ள மாவூரில்[1] இசைக் கச்சேரி செய்யும் பொழுது இரவு அங்கிருக்கும் அரவை இயந்திர நிறுவனத்தின் வழக்கமான அறிவிப்புச் சங்கொலி முழங்கியது, அப்பொழுதும் பாடுவதை நிறுத்தாமால், அந்தச் சங்கொலிக்கு நிகராக தன் குரலை இழுத்து அது முடியும் வரை பாடினார்[1]. மக்களின் கவனம் முழுவதும் அவரின் குரலின் மீதுதான் இருந்தது.

அரிதாஸ் படத்தில் வரும் பாடலான மன்மதலீலை[1] என்ற பாடல் சாருகேசி எனும் பாரம்பரிய இசையில் பாடப்பட்டது. அந்தப் பாடலுக்குப்பிறகே பிற கர்நாடக இசை வித்துவான்கள் சாருகேசி (26 வது மூலராகம்-(மேளகர்த்தா))[1] இசையைக் கச்சேரியில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதைப் பிரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு[1] "சாருகேசியைப் பிரபலமாக அறிமுகப்படுத்தியவர்" என்று தியாகராஜ பாகவதைரை இவ்வாறு வர்ணிக்கின்றார்.

அவரின் இசையைச் செல்வந்தர் முதல் பாமரர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி இரசித்தன்ர்[1]. அனைவருக்கும் புரியும்படி பாடினார்.

நடிப்பு

அன்றைய நாளில் நாடக மோகம் அதிகமிருந்த காலகட்டமானாதால், திரைப்படத்திற்கு நாடகக் கலைஞர்களையே தேர்வு செய்தனர். நாடகக்கலைஞர்களுக்கு நடிப்புடன் பாடவும் தெரிந்திருக்கவேண்டும்[1]. ஆகையால் பாரம்பரிய இசைக்கலைகளைக் கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தனர். பாகவதரும் அவ்வாறு தேர்ச்சி பெற்றவராவார். அவரின் இசைப்புலமைக்குப் போட்டி போட்டுக் கொண்டு திரைப்படமெடுக்க மதுரை செல்வந்தரான நாட்டாமை மல்லி. என். எம். ஆர். வேங்கட கிருட்டிணன், மதுரை டாக்கிஸ் என்ற குழுஅமைத்துப் படமெடுக்க முன்வந்தார். மதுரை செல்வந்தரால் மதுரை டாக்கீஸ்[1] நிறுவனத்தால் எடுத்து திரையிடப்பட்ட சிந்தாமணி படம் அமோக வெற்றி பெற்றதினால் அத்திரையரங்கு சிந்தாமணி திரையரங்கம்[1] என்று பெயர் பெற்று இன்றுவரை அவ்வாறே அழைக்கப்படுகின்றது.

அவரின் சிகையலங்காரம் பாகவதர் சிகையலங்காரம் என்று அனைவராலும் அன்றைய நிலையில் பின்பற்றபட்டு அனைத்துத் தரப்பினரும் அலங்கரித்துக் கொண்டனர்.

தமிழ்த்திரையுலகின் முதல் உயர் நட்சத்திரமாகக் (சூப்பர் ஸ்டார்)[1] கருதப்படுகின்றார். இவர் 1934 இல் பவளக்கோடியின் மூலம் அறிமுகமானவர் மறைவிற்கு முன் வரை 14 படங்களில் நடித்தார். அதில் பெரும்பாலும் வெற்றி பெற்ற படங்களே. திருநீலகண்டர், அம்பிகாபதி, சிந்தாமணி, முதல் வெற்றியைக் கொடுத்த படங்கள். 1944 இல் வெளியிடப்பட்ட அரிதாஸ் 3 வருடம் ஒரே திரையரங்கமான பிராட்வே திரையரங்கில் ஓடிச் சாதனைப் படைத்தது. அவர் நடித்த கடைசித் திரைப்படம் சிவகாமி[1].

மறைவு

சிவகாமி படத்தின் இறுதிக் காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காட்சிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்குத் தள்ளப்பட்டவரானார். கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்கத் தடுமாறினார்[1]. சிந்தாமணியில் பாடிய

என்று அவர் அப்படத்தில் பாடிய நிலைமைக்குத் தள்ளப்பட்டவரானார்[1].

இறுதியில் 1959 நவம்பர் 1 அன்று சென்னைப் பொதுமருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அங்கு காலமானார்.

இவர் நடித்த திரைப்படங்கள்

  1. பவளக்கொடி (1934)
  2. நவீன சாரங்கதரா (1935)
  3. சத்தியசீலன் (1936)
  4. சிந்தாமணி (1937)
  5. அம்பிகாபதி (1937)
  6. திருநீலகண்டர் (1939)
  7. அசோக்குமார் (1941)
  8. சிவகவி (1943)
  9. ஹரிதாஸ் (1944)
  10. ராஜ முக்தி (1948)
  11. அமரகவி (1952)
  12. சியாமளா (1952)
  13. புது வாழ்வு (1957)
  14. சிவகாமி (1959)

இவரைப் பற்றிய நூல்கள்

  • எம். கே. டி. பாகவதர் கதை - விந்தன்
  • பாகவதர் வரலாறு - மாலதி பாலன்

மேற்கோள்கள்

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 பிபிசி தமிழ் அலையோசை திரையுலகில் கொடிகட்டிப் பறந்த தியாராஜ பாகவதர் திடீர் வீழ்ச்சி கண்டு இளவயதிலேயே மறைந்தார் என்ற முக்தா சீனிவாசன் அவர் புகழ் குறித்து கூறுகின்றார்-பாட்டொன்று கேட்டேன் தொடர் வானொலி கட்டுரை 5 ஆம் பாகம்-தயாரிப்பு ஜி.சம்பத்குமார்-திரை இசை விமர்சகர் வாமணன், ராண்டார் கை.
  2. S. Sankaranarayanan (1–15 March 2010). "A legend in his lifetime". Madras Musings (S. Muthiah) 19 (22). http://madrasmusings.com/Vol%2019%20No%2022/a-legend-in-his-lifetime.html. பார்த்த நாள்: 10 April 2011. 
  3. 3.0 3.1 சாரு நிவேதிதா, தீராக்காதலி, சென்னை உயிர்மை பதிப்பகம், முதற்பதிப்பு திசம்பர் 2008, பக்.12
  4. Guy, Randor (12 March 2010). "The first Tamil superstar". The Hindu இம் மூலத்தில் இருந்து 11 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201011163450/https://www.thehindu.com/features/cinema/The-first-Tamil-superstar/article16566621.ece. 

சான்றுகள்

வெளி இணைப்புகள்

-

"https://tamilar.wiki/w/index.php?title=தியாகராஜ_பாகவதர்&oldid=396280" இலிருந்து மீள்விக்கப்பட்டது