செய்கு சனான் காப்பியம்
செய்கு சனான் காப்பியம் என்பது ப. மு அன்வர் எழுதிய ஒரு மலேசிய இசுலாமியத் தமிழ்க் காப்பியம் ஆகும். நம்குரலில் தொடர் கதையாக வெளிவந்த இக் காப்பியம் 2002 ஆம் ஆண்டு நூல்வடிவு பெற்றது.
இந்த நூலின் பாயிரத்தில் "காவியத் தமிழில் ஓவியச் சொற் புணர்ந்து உயர் செய்கு சனான் எனச் சிறுகாப்பியம் புனைந்தேன்" என்று குறிப்பிடுகிறார்.[1]
கதை
இக் கதை பாரசீக நாட்டைச் சேர்ந்த செய்கு சனான் என்பவரைத் தலைவராகக் கொள்கிறது. இசுலாமிய நெறியில் உறுதியோடு முன்மாதிரியாகத் திகழ்ந்தார் செய்குசனான். ஒருநாள் அவர் ஒரு கொடுங் கனவு கண்டார். அக் கனவின் பொருள் அறிய அவர் ரூம் நகரம் சென்றார். அங்கு அவர் மாரியம் என்ற கிறித்தவப் பெண்ணிடம் மோகம் கொண்டார், காதல் கொண்டார். அவள் அவரை இசுலாமிய நெறியை விட்டுவிடும்படி நிபந்தனை விதித்தாள். அவரும் அவள் நிபந்தனைகளுக்குப் பணிந்து செயற்பட்டார். சில காலம் சென்றபின், அவரை இளம்பருவ நண்பர் ஒருவர் வந்து பார்த்து, செய்கு சனானின் நிலை கண்டு வருந்தி, தொழுது, அல்லாவின் உதவியுடன் அவரை மீட்டார். செய்குசனானின் பிரிவினால் மாரியம் கவலை கொண்டாள். அவரைத் தேடிப் புறப்பட்டாள். அவள் அவரைச் சந்தித்து "திரை அகற்றுங்கள், எனக்கு இஸ்லாத்தைப் புகட்டுங்கள்" என்றாள். செய்குசானான் உரைத்தார். அவள் அவரைச் சந்திக்கும் போது மிகுந்து நலிவுற்று இருந்தாள். அவள் உயிர் பிரிந்தது.[1]
எடுத்துக்காட்டுப் பாடல்
- அகப்பொருளும் புறப்பொருளும் ஆய்ததமைந்த
- ஆண்மையினால் முறுக்கேறித் திகழும் மேனி
- பகப்புலவரும் பரிதியெனச் சுடரும் நெஞ்சம்
- பழமறையில் தோய்ந்ததனால் இனிக்கும் சொற்கள்
- தொகைப்படுத்தி துறைப்படுத்தி வகுத்த வாழ்க்கைத்
- துணிப்பொருள்கள் அத்தனையும் தெளிந்த செம்மல்
- திகைப்பூட்டும் துறவுநெறி நிற்கும் ஆசான்
- தீன் நிறுத்தும் செய்குசனான் தேர்ந்த ஞானி