திரு அவதாரம் (நூல்)
திரு அவதாரம் என்னும் கிறித்தவக் காப்பியம் இராவ்சாகிப் மறைத்திரு மாணிக்கவாசகம் ஆசீர்வாதம் என்பவரால் பாடப்பெற்றுள்ளது. இக்காப்பியப் பாடல்கள் தமிழ்ச்சபை, தீபிகை, நற்போதகம் ஆகிய மாத இதழ்களில் 1936ஆம் ஆண்டு முதல் 1946ஆம் ஆண்டுவரை வெளிவந்துள்ளன.
நூலாசிரியர் 1946இல் இறந்ததைத் தொடர்ந்து அவருடைய மகன் ஆர்தர் ஆசீர்வாதம் என்பவர் திரு அவதாரம் என்ற அக்காப்பியத்தை 1979ஆம் ஆண்டு நூலாகப் பதிப்பித்தார்.
நூல் பிரிவுகள்
இக்காப்பியம் பாலகாண்டம், உத்தியோக காண்டம், ஜெயகாண்டம், ஆரோகண காண்டம் என்னும் நான்கு பகுதிகளைக் கொண்டது.
பாலகாண்டத்தில் 143 பாடல்களும், உத்தியோக காண்டத்தில் 1756 பாடல்களும், ஜெயகாண்டத்தில் 350 பாடல்களும், ஆரோகண காண்டத்தில் 37 பாடல்களுமாக மொத்தம் 2286 பாடல்கள் நூலில் உள்ளன.
நூல் பொருள்
இக்காப்பியத்தில் மூவொரு கடவுளின் இரண்டாம் ஆளாகிய இறைவாக்கு மனித உருக்கொண்டு இயேசு கிறித்துவாக உலகில் அவதரித்தது, அவர் சிலுவையில் மாண்டு உயிர்பெற்றெழுந்து மனித குலத்தை மீட்டது, இறுதியில் விண்ணேறி வானகத் தந்தையின் மாட்சியில் பங்கேற்றது ஆகிய விவிலிய நிகழ்ச்சிகளை ஆசிரியர் பாடுகிறார். இயேசுவின் வாழ்வினை எடுத்துக் கூறுவதாக இந்நூல் உள்ளதால் இதில் காப்பியத்தின் கூறுகள் முழுமையாகப் பின்பற்றப்படவில்லை.
நூலின் நோக்கம்
நூலை ஆக்கியதின் நோக்கத்தை ஆசிரியர் இவ்வாறு கூறுகிறார்:
அவனிதனில் தெய்வசுதன் உற்பவித்த
அமலோற்பவ ஆச்சரியச் சம்பவமும்
அவனிதனில் மானுடர்சீர் பெற்றுயவே
அவனேஅருள் மாட்சிமிகு போதனையும்
அவனிதனில் துன்பமுற்ற மானுடருக்கு
அதியற்புத நன்மையருள் ஊழியமும்
அவதியொடு குருசினினே மாண்டுயிர்த்த
அழிமானுடர் மீட்புமாம் அன்பின் சரிதை
ஆதாரம்
இர.ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).