பவுலடியார் பாவியம் (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பவுலடியார் பாவியம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை பாவலர் ம.யோவேல் என்னும் ஜோயல் டேவிட்சன் சாமுவேல் படைத்துள்ளர். இக்காப்பியம் 2003இல் வெளியானது.

காப்பியத் தலைவர் புனித பவுல்

பெரும்பாலான கிறித்தவக் காப்பியங்கள் விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டு, இயேசுவின் வாழ்க்கை, போதனை பற்றியும், அன்னை மரியா, யோசேப்பு போன்றோரின் சிறப்புப் பற்றியும் அமைந்தவை. புதிய ஏற்பாட்டுத் தொகுப்பில், இயேசுவின் போதனைகளுக்குப் பிறகு, மிக விரிவான போதனை வழங்குபவர், புனித பவுல். அவருடைய வரலாறு மற்றும் நற்செய்திப் பணி, போதனை ஆகியவற்றை உள்ளடக்கி இக்காப்பியம் பாடப்பட்டுள்ளது.

யூத மதத்தில் மிகுந்த பிடிப்புக் கொண்டவராய் வாழ்ந்த சவுல் கிறித்தவர்களைத் துன்புறுத்தியவர். ஒருமுறை கிறித்தவர்களைச் சிறைப்பிடித்து வர அவர் சென்றபோது, ஓர் அதிசய ஒளிப்பிழம்பு அவர்முன் தோன்றவே அவர் கண்கள் குருடாகிப் போயின. அப்பொழுது அவருக்கு இயேசுவின் காட்சி கிடைத்தது. இயேசு அவரைத் தேர்ந்தெடுத்து தம் நற்செய்தியை உலகெங்கும் அறிவிக்க அவருக்குப் பொறுப்பு அளித்தார். இயேசுவை எதிர்த்துச் செயல்பட்ட சவுல் அன்றிலிருந்து இயேசுவின் பிரமாணிக்கமான சீடனாக, பவுல் என்னும் பெயரேற்று, புது மனிதராக மாறினார். கி.பி. முதல் நூற்றாண்டுக் காலத்தில் உரோமைப் பேரரசு பரவியிருந்த பல பகுதிகளுக்கும் சென்று பவுல் இயேசுவின் நற்செய்தியை அறிவித்து, பல கிறித்தவ சமூகங்களை உருவாக்கினார். அச்சமூகங்களுக்கு அவர் எழுதிய கடிதங்கள் புதிய ஏற்பாட்டில் இடம் பெற்று, இன்றும் ஆன்ம வாழ்வுக்கு, வளமூட்டும் உணவாக உள்ளன.

நூல் பிரிவுகள்

இக்காப்பியத்தில் இளமைக் காண்டம், மனமாற்றக் காண்டம், பணிபுரி காண்டம், வெற்றிக் காண்டம் என்னும் உட்பிரிவுகள் உள்ளன. இளமைக் காண்டம் ஐந்து படலங்களையும், மனமாற்றக் காண்டம் மூன்று படலங்களையும், பணிபுரி காண்டம் முப்பத்தேழு படலங்களையும், வெற்றிக் காண்டம் பன்னிரண்டு படலங்களையும் பெற்றுள்ளன. மொத்தம் ஐம்பத்தேழு படலங்களில் 2697 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

வரலாற்றுக் காப்பியம்

பவுல் பற்றிய இக்காப்பியம் உண்மை நிகழ்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டது என்பதை ஆசிரியர் வலியுறுத்திக் கூறுகிறார்:

இளமையிலே சவுலென்னும் பெயரைக் கொண்டான்
     இன்னாருடன் கூடியதும் வரலாற் றுண்மை
வளமையுறு தமக்குநிகர் கிறித்தோர் தம்மை
     வதைத்திடவே சென்றதுவும் வரலாற் றுண்மை
தளர்வுறவே ஒளிக்காட்சி வழியில் பெற்று
     தன்விழியை இழந்ததுவும் வரலாற் றுண்மை
வளர்சமயம் உய்க்கவதன் வளர்ச்சிக்காக
     வாழ்நாளை அளித்ததுவும் வரலாற் றுண்மை.

ஆதாரம்

இர. ஆரோக்கியசாமி, கிறித்தவ இலக்கிய வரலாறு, கிறித்தவ ஆய்வு மையம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி, 2010. (நூல் கிடைக்குமிடம்: பூரண ரீத்தா பதிப்பகம், 1130 பழனியப்பா நகர், 3-வது தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர் - 613006).