சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்

தமிழர்விக்கி இல் இருந்து
(சீர்காழி சட்டைநாதர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
தேவாரம் பாடல் பெற்ற
சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):பிரம்மபுரம், சீர்காழி
பெயர்:சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்
அமைவிடம்
ஊர்:சீர்காழி
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர்
உற்சவர்:சோமஸ்கந்தர்
தாயார்:பெரியநாயகி, திருநிலைநாயகி
தல விருட்சம்:பாரிஜாதம், பவளமல்லி
தீர்த்தம்:பிரம்மத் தீர்த்தம் முதலாக 22 தீர்த்தங்கள்
ஆகமம்:பஞ்சரத்திர ஆகமம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:சம்பந்தர், அப்பர், சுந்தரர்
வரலாறு
தொன்மை:1000-2000 வருடங்களுக்கு முன்
அமைத்தவர்:சோழர்கள்

சீர்காழி பிரம்மபுரீஸ்வரர், சட்டைநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவத்தலமாகும். இத்தலம் மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இத்தலம் சம்பந்தரின் அவதாரத் தலம் எனப்படுகிறது. சம்பந்தர் ஞானப்பால் உண்டமை, பிரமன் வழிபட்டமை, புறாவடிவில் வந்த அக்கினியால் சிபி மன்னன் பேறுபெற்றமை முதலிய அற்புதங்கள் நிகழ்ந்த தலமென்பது தொன்நம்பிக்கை. திருஞானசம்பந்தர் ‘தோடுடைய செவியன்‘ என்று உலகம் உய்யத் திருப்பதிகம் பாடியது இத்தலத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 14வது தலம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 14 வது தேவாரத்தலம் ஆகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.[1]

தேவார முதலிகள் மட்டுமன்றி மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், கணநாதர், நம்பியாண்டார் நம்பிகள், பட்டினத்தார், சேக்கிழார், அருணாசல கவிராயர், மாரிமுத்தா பிள்ளை, முத்து தாண்டவ தீட்சிதர் ஆகியோரும்கூட இத்தலத்தின் மீது பாடல்கள் பாடியுள்ளனர்.

தொன்மம்

இந்தப் பேரண்டத்தைச் சுற்றி வளைந்து கிடக்கும் பெருங்கடல் ஊழிக்காலத்தில் பொங்கி எழுந்து அண்டத்தையே அழித்தபோது, உமாமகேசுவர் பிரணவத்தை தோணியாகக் கொண்டு கடலில் மிதந்து, இத்தலத்துக்கு வந்து தங்கித் திரும்பவும் அண்டத்தை உருவாக்கியிருக்கிறார் என்பது நம்பிக்கை. இரணியனது உயிர் குடித்த நரசிங்கம் அகங்கரித்துத் திரிந்தபோது அதனை அடக்கி, அதன் எலும்பைக் கதையாகவும், தோலைச் சட்டையாகவும் தரித்த வடுக நாதரே சட்டைநாதர் என்று தலவரலாறு கூறும். இது சிவனது பைரவ மூர்த்தங்களில் ஒன்று. இவரையே ஆபத்துத்தாரணர் என்று மக்கள் வணங்குகின்றனர். என்று தலபுராணம் கூறுகிறது. இதே சட்டைநாதர் முத்துச் சட்டைநாதர் என்ற பெயரோடும் கோயிலின் வலம்புரி மண்டபத்தில் யோக ஸ்தானத்தில் அஷ்ட பைரவர் உருவிலும் காட்சி கொடுக்கிறார்.

கோயில் அமைப்பு

இந்தக் கோயில் ஒரு மாடக் கோவில் ஆகும். கோயில் மூன்று தளங்களைக் கொண்டதாக இருக்கிறது. பெரிய பகுதியில் இறைவன் தோணியப்பர், சட்டைநாதர் எல்லாம் உள்ளனர். வட பக்கத்தில் திருநிலை நாயகி கோயில் உள்ளது. அக்கோயிலின் முன் பிரம தீர்த்தம் உள்ளது. இந்தத் தீர்த்தக் கரையிலேயேதான் திருஞானசம்பந்தர் ஞானப்பால் உண்டிருக்கிறார். இரண்டு கோயில்களுக்கும் இடையில் மேற்குக் கோடியில் ஞானசம்பந்தருக்குத் தனித்ததொரு கோயில் உள்ளது.

கோயிலில் நுழைந்து ஆஸ்தான மண்டபத்தைக் கடந்தால் கருவறையில் லிங்க உருவில் பிரமபுரி ஈசுவரரைக் காண இயலும். அவருக்கு வலப்பக்கத்தில் மகா மண்டபத்தில் ஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக இருக்கின்றார். இந்த உற்சவர் சின்னஞ்சிறு குழந்தை வடிவில், பால்வடியும் முகத்தோடு இருப்பார். இவர் கையிலே வழக்கமாக இருக்கும் பொற்றாளம் இராது. இடது கையில் சிறு கிண்ணத்தோடு இருப்பார். வலது கையோ தோடுடைய செவியனாம் தோணி புரத்தானைச் சுட்டிக் காட்டும் வகையில் இருக்கும்.

இந்த மாடக் கோயிலின் மேற்பிராகாரத்தில் விமானம் வடிவில் உள்ள கட்டு மலைமீது எளிதாக ஏறலாம். அங்கே அந்த மலை மீது குருமூர்த்தமான தோணியப்பர் பெரிய நாயகி உடன் காட்சி அளிக்கிறார். அவருக்கும் மேல் தளத்திலே, மலை உச்சியிலே தென்திசை நோக்கியவராயச் சட்டைநாதர் நிற்கிறார். தோணியப்பரும் சட்டைநாதரும் சுதையாலான திருவுருவங்களே.

இங்குள்ள திருஞானசம்பந்தரின் கோயிலில் செய்யப்படும் அர்ச்சனையானது முருகப்பெருமானுக்கு உரிய அஷ்டோத்தரத்தைச் சொல்லி செய்யப்படுகிறது. காரணம் முருகனது அவதார மூர்த்தமே ஞானசம்பந்தர் என்று கருத்து உள்ளதே காரணம்.

கல்வெட்டுகள்

இக்கோயிலில் நாற்பத்து ஏழு கல்வெட்டுகள் இருக்கின்றன. சோழ மன்னர்களது கல்வெட்டுகளோடு வீர விருப்பண்ண உடையார் கல்வெட்டுகளும், கிருஷ்ணதேவராயரது கல்வெட்டுகளும் இருக்கின்றன. இந்தக் கல்வெட்டுகளிலிருந்து பல பழக்க வழக்கங்களும், நில அளவை முறைகளும், தலம் மூர்த்தி இவைகளின் அமைப்புகளும் விளக்குவதாக உள்ளன. “இராஜராஜ வளநாட்டுத் திருக்கழுமல நாட்டுப் பிரமதேசம் திருக்கழுமலம்” என்ற நீண்ட பெயரில் இத்தலம் குறிப்பிடப்பட்டிருக்கும். வீர ராஜேந்திரன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் ராஜராஜன், ராஜாதிராஜன் முதலிய சோழ மன்னர்கள் ஏற்படுத்தியுள்ள நிபந்தங்கள் கணக்கில் பல இவன்றிம்மூலம் அறியவருகிறது.

தேவாரச் செப்பேடுகள் மற்றும் சுவாமித் திருமேனிகள் கண்டுபிடிப்பு

32 ஆண்டுகளுக்குப் பிறகு இக்கோயில் குடமுழுக்கு நடைபெறவுள்ள நிலையில்[2] குடமுழுக்குக்கு யாகசாலை அமைக்க மண் எடுப்பதற்காக கோயிலின் மேற்குக் கோபுர வாசல் அருகே பள்ளம் தோண்டிய போது விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, சோமாஸ்கந்தர், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் உள்ளிட்ட 22 செப்புச் சிலைகளும், திருஞானசம்பந்தர் பாடிய 462 தேவாரச் செப்பேடுகளும் கண்டெடுக்கப்பட்டது.[3][4]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

  1. வீ. ஜெயபால், சைவ குரவர் நால்வரால் பாடல் பெற்ற திருத்தலங்கள், திருவாசகத் தலங்கள், சைவ சித்தாந்த ஆய்வு மையம், 28, அம்மையப்பா இல்லம், சீனிவாசபுரம் விரிவாக்கம், தஞ்சாவூர் 613 009, டிசம்பர் 2014, ப.10
  2. சீர்காழி சட்டைநாதர் கோவில் குடமுழுக்கு 24 மே 2023 அன்று நடக்கிறது
  3. சீர்காழி சட்டைநாதர் கோயிலில் தேவாரச் செப்பேடுகள் கண்டுபிடிப்பு
  4. சீர்காழி சட்டைநாதர் கோயிலில் செப்புச் சிலைகள், தேவாரச் செப்பேடுகள் கண்டுபிடிப்பு

வெளி இணைப்புகள்