சி. டி. ராஜகாந்தம்
சி. டி. ராஜகாந்தம் | |
---|---|
படிமம்:CTRajakantham.jpg 1950களின் ஆரம்பத்தில் சி. டி. ராஜகாந்தம் | |
பிறப்பு | ராஜகாந்தம் 26 சனவரி 1917 |
இறப்பு | 1999 (அகவை 81–82) சென்னை, இந்தியா |
பணி | நாடக, திரைப்பட நடிகை, பாடகி |
செயற்பாட்டுக் காலம் | 1929–1998 |
வாழ்க்கைத் துணை | அப்புக்குட்டி ஆசாரி |
சி. டி. ராஜகாந்தம் (சனவரி 26, 1917 - 1999) தமிழ்நாட்டின் ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகை. 1940கள்-1950களில் பல திரைப்படங்களில் நடித்தவர்.
வாழ்க்கைக் குறிப்பு
ராஜகாந்தம் 1917 ஆம் ஆண்டு (தமிழ் நாட்காட்டியில், நள ஆண்டு தை 15) கோயம்புத்தூரில் திரவியம் ஆசாரியார், மருதாயி அம்மாள் ஆகியோருக்குப் பிறந்தவர். தந்தை கோவையில் தோல்மண்டி வைத்து வணிகம் செய்து வந்தவர். ராஜகாந்தம் ஐந்து வயதாக இருக்கும் போதே தந்தை இறந்து விட்டார்.[1] பதினைந்து வயதில் 1932 ஆம் ஆண்டில் கோயமுத்தூர் இலக்குமி மில்லில் பணியாற்றிக் கொண்டிருந்த அப்புக்குட்டி ஆசாரி என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார் தாயார்.[1]
நாடகங்களில்
கோயமுத்தூரில் இருந்த ராஜகாந்தத்தின் வீடு மிகப் பெரியது. 1933 இல் அப்போது பிரபலமாக இருந்த எஸ். ஆர். ஜானகி என்பவர் தனது நாடகக் குழுவினருடன் கோவை வந்து மருதாயி அம்மாளின் வீட்டில் தங்கினர்.[2] தங்கியிருந்த காலத்தில் ராஜகாந்தத்திற்கு எஸ். ஆர். ஜானகியுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. தாயின் அனுமதியுடன் அவர் ஜானகியின் நாடகக் கம்பனியில் சேர்ந்தார். ஜானகியின் தூக்குத்தூக்கி நாடகத்தில் தோழியின் பாத்திரம் ஒன்று ராஜகாந்தத்திற்குக் கொடுக்கப்பட்டது.[1] இப்படியாக சில துணைப் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த போது 1933 இல் ராஜலட்சுமி என்ற குழந்தைக்குத் தாயானார். அதன் பின்னர் அழைப்பின் பேரில் மட்டும் சில நாடகங்களில் நகைச்சுவைப் பாத்திரங்களில் நடித்து வந்தார்.[1]
திரைப்படங்களில்
1939 ஆம் ஆண்டில் வெளியான மாடர்ன் தியேட்டர்சின் மாணிக்கவாசகர் திரைப்படத்தில் சிறு பாத்திரம் ஒன்றில் 20 ரூபாய் சம்பளத்தில் நடிக்கும் வாய்ப்பு ராஜகாந்தத்திற்குக் கிடைத்தது. மாணிக்கவாசகரில் ராஜகாந்தத்தின் நடிப்புத் திறமையைக் கண்ட அன்றைய நகைச்சுவை நடிகர் காளி என். ரத்னம் அவரைத் தனது படங்களில் நகைச்சுவைத் தோழியாக நடிப்பதற்குத் தேர்ந்தெடுத்துக் கொண்டார். இருவரும் இணைந்து உத்தம புத்திரன் (1940) திரைப்படத்தில் நடித்தனர். இது மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. தொடர்ந்து ஊர்வசி, சூர்யபுத்திரி, பக்த கௌரி, மாயாஜோதி, தயாளன், சபாபதி, சிவலிங்க சாட்சி, மனோன்மணி, சதி சுகன்யா, கங்காவதார், அல்லி விஜயம், பஞ்சாமிருதம், பிருதிவிராஜ், காரைக்கால் அம்மையார், திவான் பகதூர் மற்றும் பல திரைப்படங்களில் நடித்தார். சில படங்களில் பாடியும் நடித்தார்.[1]
ராஜகாந்தத்திற்கு குணசித்திர பாகத்தைக் கொடுத்த படம் பர்மா ராணி. இதில் பிரித்தானிய உளவாளியாக இருந்த வாத்தியாரம்மா வேடம் ராஜகாந்தத்திற்கு கிடைத்தது. நியூட்டோன் ஸ்டூடியோவில் தயாரிக்கப்பட்ட ஏகம்பவாணன் திரைப்படத்தில் முதற்தடவையாக கே. சாரங்கபாணியுடன் இணைந்து நகைச்சுவைப் பாத்திரத்தில் நடித்தார்.[1]
தனிப்பட்ட வாழ்க்கை
ராஜகாந்தம் தானே ஒரு நகைச்சுவை நாடகக் குழுவை ஆரம்பித்து சில நாடகங்களில் நடித்து வந்தார். ராஜகாந்தத்தின் ஒரேயொரு மகளான ராஜலட்சுமி பின்னணிப் பாடகரும், வானொலிப் பாடகருமான திருச்சி லோகநாதனை மணந்தார்.[1]
நடித்த திரைப்படங்கள்
- சபாபதி (திரைப்படம்) (1941)
- சூர்யபுத்ரி (1941)
- மனோன்மணி (திரைப்படம்) (1942)
- மாயஜோதி (1942)
- பர்த்ருஹரி (திரைப்படம்) (1944)
- பக்த ஹனுமான் (1944)
- பர்மா ராணி (1945)
- மானசம்ரட்சணம் (1945)
- ஆரவல்லி சூரவல்லி (1946)
- வால்மீகி (திரைப்படம்) (1946)
- சகடயோகம் (1946)
- ஏகம்பவாணன் (1947)
- அபிமன்யு (திரைப்படம்) (1948)
- வேதாள உலகம் (1948)
- மச்சரேகை (1950)
- மாங்கல்யம் (திரைப்படம்) (1954)
- முதலாளி (1957)
- அடுத்த வீட்டுப் பெண் (1960)
- தொலைக்காட்சி தொடர் - விடாது கருப்பு, மர்மதேசம்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 ஜகந்நாத், கே. (சனவரி 1951). ""ரத்னஜோடி" சி. டி. ராஜகாந்தம்". பேசும்படம்: பக். 118-126.
- ↑ ராண்டார் கை (5 பெப்ரவரி 2015). "The Ratnam brand of comedy". தி இந்து. http://www.thehindu.com/features/friday-review/in-lighter-vein-column-kali-n-ratnam-ct-rajakantham/article6860504.ece. பார்த்த நாள்: 24 பெப்ரவரி 2015.