எஸ். வி. சகஸ்ரநாமம்
எஸ். வி. சகஸ்ரநாமம் | |
---|---|
250 px | |
பிறப்பு | சிங்காநல்லூர் வெங்கடரமண ஐயர் சகஸ்ரநாமம் 29 நவம்பர் 1913 சிங்காநல்லூர், கோயம்புத்தூர் |
இறப்பு | 19 பெப்ரவரி 1988 | (அகவை 74)
மற்ற பெயர்கள் | எஸ். வி. எஸ் |
பணி | நடிகர், இயக்குனர் |
செயற்பாட்டுக் காலம் | 1935–1988 |
பிள்ளைகள் | ஜானகி, லலிதா, சாந்தி, எஸ். வி. எஸ். குமார், கௌரி |
எஸ். வி. சகஸ்ரநாமம் (S. V. Sahasranamam, நவம்பர் 29, 1913 - பெப்ரவரி 19, 1988) நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகரும் ஆவார். தமிழ் நாடகக் கலைக்காக அரும்பணி ஆற்றியவர். தமது சிறப்பானப் பணிக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர். 200க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர்.
இளமைக் காலம்
கோவையை அடுத்த சிங்காநல்லூரில் பிறந்தவர்[1]. சிறு வயதிலேயே தாயை இழந்த சகஸ்ரநாமம் தமது வறிய, பெரிய குடும்பத்தின் வீட்டுக் கஷ்டத்தினால் சித்தப்பாவின் பலகாரக் கடையில் வேலை செய்ய சென்றபோது தற்செயலாக உள்ளூரில் பாய்ஸ் கம்பெனி நாடகம் ஒன்றைப் பார்த்து, குடும்ப நெருக்கடியிலிருந்து தப்பித்துப் போய்ச் சுதந்திரமாக ஆடிப்பாடி நடிக்கும் வாழ்க்கையில் ஈடுபாடு கொண்டார். வீட்டை விட்டு ஓடிப் போய் அப்பாவின் பொய்க் கையெழுத்தைப் போட்டு, மதுரை பாலசண்முகானந்த சபா மேலாளர் காமேஸ்வர அய்யரிடம், "சம்மதம்" என்று கடிதத்தைக் கொடுத்து நாடகக் கம்பெனியில் சேர்ந்துவிட்டார். இருப்பினும் காமேசுவர அய்யர் இதைக் கண்டுபிடித்து அவரது தந்தையின் உடன்பாட்டுடன் அவரை நாடக கம்பனியில் சேர்த்துக் கொண்டார்.
சுதந்திரப் போராட்ட உணர்வுகளை எதிரொலிக்கும் நாடகங்கள்
பாய்ஸ் கம்பெனிகள் ஆங்கில அரசாங்க கெடுபிடிகளுக்குப் பயப்படாமல் இந்தியாவின் சுதந்திரப் போராட்ட உணர்வுகளை எதிரொலிக்கும் நாடகங்களை நிகழ்த்தி மக்களை விடுதலைப் போராட்டத்துக்கு ஆவேசப்படுத்தின. வெ. சாமிநாத சர்மா எழுதிய பாணபுரத்து வீரன் என்ற ஆங்கிலத் தழுவல் நாவல், விடுதலை எழுச்சியைப் பூடகமாகத் தூண்டும் விதமாக இருந்தது. பாரதியார் பாடல்களையும் சேர்த்து நாடகமாக உரையாடல்களை எழுதியவர் பாஸ்கரதாஸ்.
தூக்குக் கயிறு
தூக்குக் கயிறு நாடகத்தில் சகஸ்ரநாமம், வாலீசன் என்ற பாத்திரத்தில் நடித்தார். "சுதந்திரத்துக்காகப் பாடுபடுவது குற்றமென்றால் அந்தக் குற்றத்தைச் செய்து கொண்டுதான் இருப்பேன்..." என்று ஒரு நீண்ட வசனத்தைப் பேசி முடித்தவுடன் அரச உத்தரவின் பேரில் அவன் தூக்கிலிடப்படுவான். இந்த நாடக அரங்கேற்றத்துக்குச் சில வாரங்கள்முன் தான் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பகத்சிங், சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டார்கள். அரசன் தூக்கிலிட உத்தரவிட்டதும், மக்கள் “வாழ்க சுகதேவ் வாழ்க பகத்சிங் “ என்று முழங்குவார்கள்.
1945 வரை சகஸ்ரநாமம் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வேறு சிறு தொழில்களிலும் ஜீவனத்தை நடத்தியிருக்கிறார். உயிருள்ள பாம்பைக் கழுத்தில் போட்டுக்கொண்டு பயத்தில் உதறாமல் ஜதி சுத்தமாக ஆடத் துணிந்ததால் அவருக்கு அநேகமாக சிவன் வேடமே திரைப்படங்களில் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
சேவா ஸ்டேஜ் நாடகக் குழு
அவருடைய மொத்த அனுபவமும் 1946 க்குப் பின் ஒரு நல்ல நாடகக் குழுவை ஏற்று நடத்துவதற்கான திறமையையும் துணிவையும் கொடுத்தது.
"கலைவாணர்" என். எஸ். கிருஷ்ணன் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகள் சிறை சென்று மீண்டு வரும்வரை என். எஸ். கே. நாடக சபையின் நிர்வாகியாகவும் முக்கிய நடிகராகவும், சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் வெற்றிகரமாக நாடகங்கள் நடத்தியிருக்கிறார். 1950க்குப் பிறகு திரைப்படங்களில் வாய்ப்புகள் இருந்த போதும் சகஸ்ரநாமம், சேவா ஸ்டேஜ் என்கிற குழுவை ஆரம்பித்துத் தமிழ் நாடகங்களுக்குத் தற்காலத் தன்மையை ஏற்றியிருக்கிறார். மேடை அரங்க நிர்மாணம், ஒளி அமைப்புகள் இவற்றிலெல்லாம் கலாபூர்வமான நூதன மாற்றத்தைப் பொருட்செலவைப் பார்க்காமல் நிறுவிக் காட்டியது சேவா ஸ்டேஜ் நாடக மன்றம்தான். நாடகத்தில் பின்பாட்டு உத்தியை அறிமுகப்படுத்தியதும் சகஸ்ரநாமத்தின் முயற்சிதான். சேவா ஸ்டேஜ் நாடகங்களில் முக்கியமான பாத்திரங்களை ஏற்று நடித்து அனுபவமும் புகழும் பெற்றதால் திரை நட்சத்திரங்களானவர்கள் பலர். இவர்களில் ஆர். முத்துராமன், தேவிகா, எஸ். என். லட்சுமி முதலியவர்களைக் குறிப்பிடலாம்.
நடித்த திரைப்படங்கள்
- பூம்பாவை (1944)
- நல்ல தம்பி (1949)
- சிங்காரி (1951)
- மர்மயோகி (1951)
- மணமகள் (1951)
- பராசக்தி (1952)
- கண்கள் (1953)
- குலதெய்வம் (1956)
- நாலுவேலி நிலம் (1959)
- அல்லி பெற்ற பிள்ளை (1959)
- போலீஸ்காரன் மகள் (1962)
- படித்தால் மட்டும் போதுமா (1962)
- ஆனந்த ஜோதி (1963)
- உரிமைக்குரல் (1974)
- மேனகா
கொல்கத்தா பயணம்
1950இல் கொல்கத்தாவில் நடைபெற்ற தாகூர் நூற்றாண்டு விழாவிற்கு தமிழகத்திலிருந்து ஜீவானந்தம், தொ. மு. சி. ரகுநாதன், கே. முத்தையா, சகஸ்ரநாமம், மாஜினி உள்ளிட்ட 15 நபர்கள் கொண்ட குழு சென்றது. இதில் நாடகம் குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை இக்குழுவினர் கூட்டாக தாக்கல் செய்தனர்.[2]
சுதந்திர போராட்ட உணர்வு
1959இல் இயல் இசை நாடக மன்றத்தின் ஆதரவு மூலம் சேவா ஸ்டேஜ் தயாரித்த கவிதை நாடகங்கள் மகாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதமும் குயில் பாட்டும். அவை தமிழ் நாடகத்துக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பான கொடைகள் எனக் கூறலாம்.
அறுபத்தி இரண்டில் நிகழ்ந்த சீனப் போர் சமயத்தில் தேச எல்லைப் பாதுகாப்பு நிதிக்காக நன்கொடை நாடகங்கள் நடத்திக் கொடுத்தது மட்டுமல்லாமல் தனக்கு சினிமா நாடகத் துறையில் சன்மானங்களாக அளிக்கப்பட்ட கணிசமான
தங்கம் வெள்ளிப் பதக்கங்கள், கோப்பைகள், சங்கிலிகள் அத்தனையையும் காமராஜரிடம் சமர்ப்பித்திருக்கிறார்.
விருதுகள்
- சங்கீத நாடக அகாதமி விருது, 1967, வழங்கியது இந்திய அரசு [3]
- சங்கீத கலாசிகாமணி விருது, 1980, வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி[4]
மறைவு
சகஸ்ரநாமம் தனது 74வது வயதில் காலமானார்.
மேற்சான்றுகள்
- ↑ மேஜர்தாசன் (15 சனவரி 2013). "Potpourri of titbits about Tamil cinema - S.V. Sahasranamam". கல்யாணமாலை இதழ். பார்க்கப்பட்ட நாள் 6 திசம்பர் 2013.
- ↑ கே. முத்தையா எழுத்துலகில் அரை நூற்றாண்டு- எஸ். ராமக்கிருட்டிணன்-காலம் வெளியீடு-1999- மதுரை.
- ↑ "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018 இம் மூலத்தில் இருந்து 2018-03-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.
- ↑ AWARDEES OF SANGEETHA KALASIKHAMANI