இசைத்தமிழ்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

தமிழ்
கொடுந்தமிழ்
செந்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்
முத்தமிழ்
துறை வாரியாகத் தமிழ்
அறிவியல் தமிழ்
ஆட்சித் தமிழ்
இசைத்தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
சட்டத் தமிழ்
செம்மொழித் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
மருத்துவத் தமிழ்
மீனவர் தமிழ்
முசுலிம் தமிழ்
பிராமணத் தமிழ்
வட்டார வழக்குகள்
திருநெல்வேலித் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ்
குமரி மாவட்டத் தமிழ்
கொங்குத் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
சென்னைத் தமிழ்
மட்டக்களப்புப் பேச்சுத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
மணிப்பிரவாளம்
மலேசியத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
சுனூன் தமிழ்
பாலக்காடு தமிழ்
பெங்களூர் தமிழ்

தொகு


தமிழை இயல், இசை, கூத்து (நாடகம்) என மூன்றாகப் பகுத்து முத்தமிழ் எனக் காண்பது பண்டைய நெறி. இயற்றமிழ் (இயல் தமிழ்) இயல்பாகப் பேசும் தமிழ் எனவும், இசைத்தமிழ் என்பது பண்ணிசைத்துப் பாடும் தமிழ் எனவும், கூத்து ஆடிப் பாடும் தமிழ் எனவும் அழைக்கப்படுகிறது. சொல்லக்கருதிய கருத்துக்களைக் கேட்போர், விரும்பியேற்றுக் கொள்ளும் படி, இனிய ஓசையோடு கூடிய சொற்களாற் புலப்படுத்துவது இசைத்தமிழ் ஆகும். மூலாதாரம் தொடங்கிய எழுத்தோசை ஆளத்தியாய்ப் பின் இசையென்றும், பண்ணென்றும் அழைக்கப்படுகிறது. பல இயற்பாக்களோடு, இன்னோசையாகிய நிறத்தை இசைத்தலால், இசையென்று பெயராயிற்று என்பர். இயற்றமிழ்ப் பாவினோடு,[1] இசையினை இயைத்துப் பாடுதலென்பது, ஓவியர் நிறங் தீட்டுதல் போல்வதோர் செய்கையாகும். "நிறந் தோன்ற" எனச் சிலப்பதிகார வுரையாசிரியர் வழங்கி இருத்தலை நோக்குங்கால், நிறம் என்னும் தமிழ்ச் சொல் இராகம் என்ற பொருளில் வழங்கியதென்பது பெறப் படும். கடைச் சங்கத்தார் இயற்றிய பரிபாடல் நூலில் இப்போது கிடைத்திருக்கும் பாடல்களில் பலவற்றிற்குப் பாடினார் பெயரும், பண்ணின் பெயரும், இசை வகுத்தார் பெயரும் குறிக்கப்பட்டுள்ளன. அவர்கள் வகுத்தெழுதிய இசை முறையும், அம்முறைபற்றிய இசைக்குறிப்பும் இக்காலத்திற் கிடைக்கவில்லை.

வகை

பா என்பதோடு, இயைத்துரைக்கப்பட்ட இசையினை, “நெஞ்சு, கண்டம், நா, மூக்கு, அண்ணம், உதடு, பல், தலை” என்னும் எட்டிடங்களிலும் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம், ஒலி, உருட்டு, தாக்கு என்னும் எண் வகைத் தொழில்களால் உருவாகப் பண்ணிச் சீர்ப்படுத்திப் பாடப்பெறுவது, பண்ணாதலின் பண்ணென்றக் காரணப் பெயர் வந்ததென்பர். மிடற்றுப் பாடல், குழல், யாழ் முதலிய இசைக் கருவிகளின் ஒலி, அவற்றின் கால அளவினைப் புலப்படுத்தும் தாளம் ஆகிய இவை மூன்றும் ஒத்திசைத்து இயங்குவதே இசையென்பர். இன்பத்திலும், துன்பத்திலும், பாட்டுத் தோன்றி உள்ளத்திற்கு ஆறுதலளிக்கின்றது. செய்யுளில் எழுத்துக்கள் பெறும் மாத்திரை யளவுரைக்கும் இலக்கணம் இயற்றமிழுக்கும் இசைத் தமிழுக்கும் பொதுவாகும். வெண்பா , ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களுக்கும் உரிய செப்பல், அகவல், துள்ளல், தூங்கல் என்னும் ஓசை விகற்பங்கள், தாளத்தினை அடிப்படையாகக் கொண்டவை. தாளம் பிழையாது நிற்கப் பாவினது உருவம் செவிக்குப் புலனாகும்.

இலக்கியத்தில் இசைத்தமிழ்

அடியார்க்கு நல்லார்

"இசைத் தமிழ் நூலாகிய பெருநாரை பெருங்குருகும், பிறவும், தேவ இருடி நாரதன் செய்த பஞ்சபாரதீயமும் முதலாகவுள்ள தொன்னூல்கள் இறந்தன என அடியார்க்கு நல்லார் கூறுகின்றார்.

சிகண்டியென்னும் செந்தமிழ் முனிவர் இயற்றிய இசைநுணுக்கமும்,

யாமளேந்திரர் செய்த இந்திர காளியமும்,

அறிவனார் செய்த பஞ்சமரபும்,

ஆதிவாயிலார் செய்த பரதசேனாபதீயமும்,

பாண்டியன் மதிவாணனார் செய்த மதிவாணர் நாடகத்தமிழ் நூலும் ஆகிய ஐந்து நூல்களும், அடியார்க்கு நல்லார் காலத்தே தமிழ் மக்களால் பயிலப்பெற்றன என்பதும், இவற்றிற் சொல்லப்பட்ட இசை நாடக முடிபுகளை, ஒரு புடையொப்புமையாகக் கொண்டு சிலப்பதிகாரத்திற்கு, அடியார்க்கு நல்லார் விரிவுரையியற்றினரென்பதும் சிலப்பதிகார உரைப்பாயிரத்தே கூறப்பட்டன. இந் நூல்களும் பிற்காலத்தே மறைந்தன. கலாசேத்திர வெளியீடான பரதசேனாபதீயம் ஆதிவாயிலார் இயற்றியதன்று. இவற்றிலிருந்து மேற்கோளாகக் காட்டப் பட்ட ஒருசில சூத்திரங்களே, இந்நாளிற் கிடைக்கின்றன. சிலப்பதிகாரவுரைப் பகுதியிலும், இசைத்தமிழ்த் திறம் விளக்கும் கானல்வரியுரை கிடைக்கவில்லை.

சிலப்பதிகாரம்: இந்நூல் இயற்றிய காலத்தில், காவிரிப்பூம் பட்டினத்திலே மருவூர்ப்பாக்கத்திலே பெரும் பாணர்க்கு இருக்கை அமைந்திருந்ததென்பதையும், அக்காலத்து வாழ்ந்த இசையறிஞர் துளைக்கருவி வாசிப் போர், தோற்கருவி வாசிப்போர், நரம்புக்கருவி யிசைப் போர், கண்டத்தாற் பாடுவோர் என நால்வகைப் பிரிவினராக அமைந்து இசை வளர்த்தார்களென்பதனையும் சிலப்பதிகாரத்தில் இந்திர விழவூரெடுத்த காதையால் அறிகிறோம். ஆடல் மகள் நாடக அரங்கிற் புகுந்து ஆடும் போது ஆடலாசிரியன், இசையாசிரியன், இயற்றமிழ் வல்ல கவிஞன், மத்தளம் முழக்குவோனாகிய தண்ணுமையாசிரியன், வேய்ங்குழலூதுவோன், யாழாசிரியன் என்னும் இவர்கள் அவளது ஆடலுக்குத் துணைபுரிந்தனர் 'எனச் சிலப்பதிகார அரங்கேற்று காதையால் அறிகின்றோம்.

பிற

தொல்காப்பியம் இசைத்தமிழை ‘இசையொடு சிவணிய நரம்பின் மறை’ அளபு இறந்து உயிர்த்தலும், ஒற்று இசை நீடலும், உள என மொழிப, இசையொடு சிவணிய நரம்பின் மறைய என்மனார் புலவர் என்று குறிப்பிடுகிறது.[2] இயற்றமிழ்ப் பாடல்களில் தொல்காப்பியம் காட்டும் வண்ணங்களும் இசைத்தமிழே ஆகும்.

பரிபாடல் நூலிலுள்ள பாடல்களுக்கு இசையும் இசையமைத்துத் தந்தவரும் குறிப்பிடப்பட்டுள்ளன.

அப்பர், சம்பந்தர் தேவாரப் பாடல்களுக்குப் பண்ணிசைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. கோயில்களில் ‘ஓதுவார்’ எனப்படுவோர் இவற்றைப் பண்ணிசையுடன் இசைத்தமிழாகப் பாடிவருகின்றனர்.

அருணகிரிநாதர் , வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முத்துத் தாண்டவர் போன்றோரின் பாடல்களும் இசைத்தமிழே ஆகும்.

இருண்ட காலம்

கி. பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையுள்ள காலப்பகுதி, தமிழக வரலாற்றில் இருண்ட காலம் எனக் கூறப்படுகிறது.[3] அப்போது இசைக்கலை மிகவும் அருகி மறையத் தொடங்கியது. தமிழரது வாழ்க்கையோடு, தொடர்பில்லாத வேற்றுச் சமயங்கள், தமிழ்நாட்டிலே புகுந்து, வேரூன்றினமையால், தமிழ் மக்கள் மனவுறுதி யிழந்தவராய்த் தமது இசை முதலிய கலைநலங்களையும் இழந்து சோர்வுற்றனர். இத்தகைய அல்லற்காலத்தும், இசைத்தமிழ் வழக்கிழந்து சிதையாதபடி அருளாசிரியர் சிலர் தோன்றி இயலும் இசையும் வளர்த்தனர்.[4] இக்காலத்தே வாழ்ந்த காரைக்காலம்மையார் அருளிச் செய்த திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகமும், மூத்த திருப்பதிகமும், தெய்வத் தமிழிசைப் பாடலுக்குச் சிறப்புடைய இலக்கியங்களாகத் திகழ்கின்றன.

இவற்றையும் காணவும்

தொல்காப்பியத்தில் தமிழிசை

மேற்கோள்

  1. https://cpsharavanan.blogspot.com/2016/12/tamil-music.html
  2.  
    அளபு இறந்து உயிர்த்தலும் ஒற்று இசை நீடலும்
    உள என மொழிப இசையொடு சிவணிய
    நரம்பின் மறைய என்மனார் புலவர். (தொல்காப்பியம் 1-33)

  3. அகரமுதலி கட்டுரைப்பக்கம்
  4. http://www.tamilsurangam.in/general_knowledge/research_ideas/research_ideas_9.html

துணை நூல்கள்

"https://tamilar.wiki/index.php?title=இசைத்தமிழ்&oldid=11027" இருந்து மீள்விக்கப்பட்டது