மாறுபடுபுகழ்நிலையணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மாறுபடுபுகழ்நிலையணி என்பது தான் கருதிய பொருளை மறைத்து, அதனைப் பழிப்பதன் பொருட்டு வேறொன்றைப் புகழ்வது[1].

தண்டியலங்கார ஆதாரம்

12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் மாறுபடுபுகழ்நிலையணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது:

நூற்பா

கருதிய பொருள் தொகுத்து ஆங்குஅது பழித்தற்கு
வேறொன்று புகழ்வது மாறுபடு புகழ்நிலை
                                 --(தண்டியலங்காரம், 83)

(எ.கா.)

இரவறியா யாவரையும் பின்செல்லா நல்ல
தருநிழலும் தண்ணீரும் புல்லும் - ஒருவர்
படைத்தனவும் கொள்ளாஇப் புள்ளிமான் பார்மேல்
துடைத்தனவே அன்றோ துயர்.
                                 --(தண்டியலங்கார மேற்கோள்)

(இரவு - யாசித்தல்; தரு - மரம்; பார் - உலகம்)

பாடல்பொருள்:
இப்பாடலில் புள்ளிமான்கள் புகழப்பட்டிருக்கின்றன. அவை புகழப்பட்டிருக்கும் முறையைக் கூர்ந்து நோக்கினால், மறைமுகமாக இகழப்பட்டிருப்பவர் யார் என்பது புரியும்.

இந்தப் புள்ளிமான்கள் இரத்தல் செயலை அறியாதவை; எவர்பின்னும் தம் குறைசொல்லிச் செல்லாதவை; தமக்குத் தேவையான மரநிழல், தண்ணீர், புல் ஆகிய பொருள்களைப் பிறர் ஈட்டித் தராமல் தாமே தேடி அடைந்து கொள்ளும். ஆகவே இம்மான்கள் உலகில் துயரற்று வாழ்கின்றவை அல்லவா!

மான்கள் இரந்து, பிறர்பின் சென்று வாழாமல் தாமே உழைத்து இன்ப வாழ்வு வாழ்கின்றன எனும் புகழ்ச்சியில், இரந்து, பிறர்பின் சென்று, அவர்கள் கொடுக்கும் பொருளைப் பெற்றுத் துன்ப வாழ்வு வாழும் இரவலனின் இகழ்ச்சி மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை உணரலாம். இவ்வாறு இரவலனைப் பழிப்பதற்காக மான்களைப் புகழ்ந்திருப்பதால் இது மாறுபடு புகழ்நிலை அணி ஆகும்[2].

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=மாறுபடுபுகழ்நிலையணி&oldid=13552" இருந்து மீள்விக்கப்பட்டது