பிறிது மொழிதல் அணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

பிறிது மொழிதல் அணி என்பது தான் கருதும் பொருளை வெளிப்படையாகக் கூறாமல் பிறிதொன்றால் ஏற்றிக் கூறுதல். அதாவது கருத்திலே ஒன்றைக் கொண்டு, அது குறிப்பால் விளங்கித் தோன்றுமாறு வேறு ஒன்றைக் கூறுவது போல பிறிதொரு பொருள் மேல் ஏற்றிக் கூறுவது. புலவர் தான் கருதிய பொருளை வெளிப்படையாகக் கூறாமல் அதனை வெளிப்படுத்துவதற்குரிய ஒத்த பிறிதொன்றினைச் சொல்வது.

தன்மை

பிறிது மொழிதல் அணி உவமானத்தை மட்டும் கூறி உவமேயத்தை உணர்த்தி நிற்கும்.

எடுத்துக்காட்டு

  • உவமை அணி - மயில் போலும் பெண் வருகிறாள். (அது போல இது)
  • உருவக அணி - மயில் வருகிறாள். (இதுதான் அது)
  • பிறிது மொழிதல் அணி - அது போல இது என்றும் வராது. இதுதான் அது என்றும் வராது.

பிறிதுமொழிதல் அணிக்கு மிகவும் நல்ல உதாரணமாக அமைபவை திருவள்ளுவரின் திருக்குறள்கள்.

உள்ளுறை உவமம்

பிறிது மொழிதல் அணியை உள்ளுறை உவமம் என்றும் சொல்லலாம். உள்ளுறை உவமம் என்றால் உள்ளே மறைந்திருப்பது என்று பொருள் பெறும்.

எடுத்துக்காட்டு

உச்சி வகிர்ந்தெடுத்து
பிச்சிப்பூ வைச்ச கிளி
பச்சைமலைத் தோட்டத்திலே
மேயுதென்று சொன்னாங்க

[1]

இதில் அவர், தனது மனைவி தவறு செய்கிறார் என்ற ஊராரின் கூற்றை "கிளி மேயுது" என்கின்ற வார்த்தைகளால் ஆற்றாமையுடன் வெளிச் சொல்கிறார். பசு மேயும். கிளி மேயாது. அவர் தன் மனைவியில் சந்தேகம் ஏற்பட்டதால், தன் மனைவியை நினைத்துக் கொண்டு, மனைவி என்ற சொல்லையே பாவிக்காமல் "கிளி ஊர் முழுக்க மேய்கிறது" என்று சொல்வது பிறிது மொழிதல் அணி.

எடுத்துக்காட்டு 2

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்

சால மிகுத்துப் பெயின்.

இதில் வள்ளுவர் மயிலிறகு சிறிதாக இருந்தாலும் அதிகமாக வண்டியில் ஏற்றினால் வண்டியானது பாரம் தங்காமல் அச்சாணி முறிந்துவிடும் என வெளிப்படையாகக் கூறி உள்ளுறையாக பகைவர்கள் சிறியவர்களாக இருந்தாலும் அதிகமானால் நம்மை எளிதில் வென்று விடுவர், என்பது ஆகும்.

  1. vbvhjhb
"https://tamilar.wiki/index.php?title=பிறிது_மொழிதல்_அணி&oldid=13572" இருந்து மீள்விக்கப்பட்டது