கே. இராஜேஸ்வர்
கே. இராஜேஸ்வர் | |
---|---|
பிறப்பு | இந்தியா |
மற்ற பெயர்கள் | சோமசுந்தரேஸ்வர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இலயோலாக் கல்லூரி, சென்னை |
பணி | திரைப்பட இயக்குநர் |
செயற்பாட்டுக் காலம் | 1989–தற்போது வரை |
கே. இராஜேஸ்வர் (K. Rajeshwar) என்பவர் ஓர் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் தமிழ் படங்களில் இயங்கிவருகிறார். இவர் 1990களில் தீவிரமாக திரைப்பட இயக்குநராகவும், எழுத்தாளராகவும் செயல்பட்டார். இவர் பெரும்பாலும் பிரதாப் போத்தனுடன் இணைந்து செயல்பட்டார்.
தொழில்
இராஜேஸ்வர் மும்பையில் வளர்ந்தார், இவரது தந்தை அங்கு வணிகத்தில் ஈடுபட்டிருந்தார். இராஜேஸ்வர் திரைப்படங்களில் ஆர்வம் கோண்டவராக இருந்தார். திருநெல்வேலியில் கல்வி பயின்ற இவர், பொருளாதாரம் பயில சென்னை இலயோலா கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் பயின்ற காலத்தில், துணுக்கு மற்றும் நாடகங்கள் எழுதுவதில் தீவிரமாக ஈடுபட்டார். பின்னர் திரைப்படத்திலும், எழுத்திலும் ஆர்வம் கொண்டார். இவர் சென்னைத் திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார்.[1] இராஜேஸ்வர், சோமசுந்தரேஷ்வர் என்ற பெயரில் திரைக்கதை எழுத்தாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது முதல் திரைக்கதை அவள் அப்படித்தான் (1978). இவரது கல்லூரி மூத்த மாணவரான சி. ருத்ரைய்யா ஒரு சிறுகதையை அடிப்படையாக கொண்டு இரசினிகாந்து மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் நடித்த முழு நீள திரைப்படத்தை உருவாக்கினார். இப்படம் வெளியானதும், விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. மேலும் இது எல்லா காலத்திலும் மிகச்சிறந்த தமிழ் படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதன்பிறகு காதல் நாடகங்களான பன்னீர் புஷ்பங்கள் (1981), கடலோரக் கவிதைகள் (1986), சொல்ல துடிக்குது மனசு (1988) உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு திரைக்கதைகளையும் எழுதினார்.[2] அந்த காலகட்டத்தில் சோமாசுந்தர் என்ற பெயர் கொண்ட இயக்குனரிடமிருந்து இவரை வேறுபடுத்த விரும்பிய பாரதிராஜாவின் வற்புறுத்தலைத் தொடர்ந்து இவர் தனது திரைப் பெயரை இராஜேஸ்வர் என்று மாற்றிக்கொண்டார்.
கமல்ஹாசன் நடித்த வெற்றிப் படமான வெற்றி விழா படத்திற்கு திரைக்கதை எழுதி பாராட்டுகளைப் பெற்றார். இதன் பின்னர் இவர் நியாயத் தராசு (1989) படத்தின் வழியாக இயக்குநராக அறிமுகமானார். இப்படமானது தமிழ்நாடு அரசின் சிறந்த திரைப்படத்திற்கான விருதில் இரண்டாவது பரிசை பெற்றது. இப்படம் மலையாள திரைப்படமான பஞ்சாக்னியின் மறு ஆக்கம் ஆகும். மேலும் இப்படத்திற்கு மு. கருணாநிதி திரைக்கதை எழுதி இருந்தார். பின்னர், கார்த்திக் நாயகனாக நடித்த இதயத் தாமரை, அமரன் ஆகிய வெற்றிப் படங்களை இயக்கினார். பின்னர் பிரதாப் போத்தானின் சீவலப்பேரி பாண்டி (1994) படத்திற்கு திரைக்கதை எழுதினார். சுவேதா மேனன் நடிக்க 1996ஆம் ஆண்டிலேயே கோவில்பட்டி வீரலட்சுமி என்ற பெயரில் ஒரு படத்தை எடுக்கத் திட்டமிட்டார், ஆனால் இந்த படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்கவில்லை.[3] பிந்தைய அந்த இரண்டு படங்களும் நிஜமாக வாழ்ந்த கதாபாத்திரங்களை அடிப்பபடையாக கொண்டவை. அந்த காதாபாத்திரங்களால் ஈர்க்கப்பட்டு, இராஜேஷ்வர் அந்தந்த கிராமங்களுக்குச் சென்று ஆராய்ந்து திரைக்கதை எழுத நீண்ட காலத்தை எடுத்துக்கொண்டார்.[1]
பின்னர் சிம்ரன் முன்னணி பாத்திரத்தை ஏற்க கோவில்பட்டி வீரலட்சுமி படத்தின் பணிகளைத் துவக்கினார். படம் வெளிவருவதற்கு முன்பே நல்ல விளம்பரம் பெற்றபோதிலும், படம் 2003இல் வெளியாகி வணிக ரீதியாக தோல்வியை தழுவியது.[4] இராஜேஸ்வர் 2007ஆம் ஆண்டில் மல்லிகை மலரே என்ற பெயரில் ஒரு படத்தை அறிவித்தார். அப்படத்தில் , நமீதா ஐந்து வேடங்களில் நடிக்கிறார் எனப்பட்டது, ஆனால் படம் எடுக்கப்படவில்லை.[5] ஸ்ரீகாந்த், நமீதா, ஸ்ருதி மராத்தே ஆகியோரைக் நடிக்க இந்திர விழா படத்தை இயக்க 2009இல் மீண்டும் வந்தார், இருப்பினும் இந்த படம் வெளியிடப்பட்டு மோசமான விமர்சனங்களைப் பெற்றது.[6] இராஜேஷ்வர் அஜப் பிரேம் கி கசாப் கஹானி என்ற இந்தி திரைப்படத்திற்கான கதையை ராஜ்குமார் சந்தோஷியுடன் இணைந்து எழுதினார். அப்படத்தின் தமிழ் மறு ஆக்கமாக 2010ஆம் ஆண்டில், திடீர் நகரில் ஓரு காதல் கானா என்ற பெயரிலான படத்தில் தனது மகன் ரஞ்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தான் இயக்க இருப்பதாக அறிவித்தார். படத்தின் தயாரிப்புப் பணிகள் தொடங்கியது, ஆனால் வெளிவரவில்லை.[7] 2015ஆம் ஆண்டில், தன் மகன் நடிக்க இன்னொருவர் இந்த படத்தை எடுக்க உள்ளதாகவும், அது தயாரிப்புக்கு முந்தைய கட்டத்தில் இருப்பதாகவும் அறிவித்தார்.[1] பின்னர் 2015ஆம் ஆண்டில், கார்த்திக் நடித்த அமரனின் தொடர்ச்சியாக ஒரு படத்தின் பணியைத் தொடங்கினார், ஆனால் நடிகரின் உடல்நிலை சரியில்லாமல் போனதால் இந்த படம் நிறுத்தப்பட்டது.[8]
திரைப்படவியல்
இயக்குநராக
ஆண்டு | படம் | குறிப்புகள் |
---|---|---|
1989 | நியாயத் தராசு | 3 வது - சிறந்த படத்திற்கான தமிழ்நாடு அரசின் திரைப்பட விருது |
1990 | இதயத் தாமரை | |
1992 | அமரன் | |
1996 | துறைமுகம் | |
2000 | அதே மனிதன் | |
2003 | கோவில்பட்டி வீரலட்சுமி | |
2009 | இந்திர விழா |
எழுத்தாளராக
- அவள் அப்படித்தான் (1978)
- பன்னீர் புஷ்பங்கள் (1981)
- ஏழாவது மனிதன் (1982)
- மீண்டும் ஓரு காதல் கதை (1985)
- கடலோரக் கவிதைகள் (1986)
- துளசி (1987)
- சொல்ல துடிக்குது மனசு (1988)
- வெற்றி விழா (1989)
- சீவலப்பேரி பாண்டி (1994)
- அஜாப் பிரேம் கி கசாப் கஹானி (2009; இந்தி)
பாடல் வரிகள்
- துறைமுகம் (அனைத்து பாடல்களும்)
குறிப்புகள்
- ↑ 1.0 1.1 1.2 "K. Rajeshwar Interview: Future Perfect"" இம் மூலத்தில் இருந்து 9 January 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150109103207/http://silverscreen.in/features/rajeshwar-interview-futuristic/.
- ↑ https://baradwajrangan.wordpress.com/2009/02/14/between-reviews-a-small-slice-of-great-genius/
- ↑ https://groups.google.com/forum/#!topic/soc.culture.tamil/J68fuQkdCtw
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2003-05-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20030503075218/http://sify.com/movies/tamil/preview.php?id=12631728&ctid=5&cid=2423.
- ↑ http://www.indiaglitz.com/namitha-in-malligai-malarae-tamil-news-30327
- ↑ http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/glam-game-gone-awry-indira-vizha/article3021683.ece
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-11-15 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101115152442/http://sify.com/movies/director-rajeshwar-launches-his-son-news-tamil-klnjP6gjjeb.html.
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/Gautham-Karthik-offers-his-tips-for-Amaran-2/articleshow/47624398.cms