வீரோதய சிங்கையாரியன்
வீரோதய சிங்கையாரியன் 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் யாழ்ப்பாணத்தை ஆண்ட அரசனாவான். இவன் ஆரியச் சக்கரவர்த்திகள் வம்சத்தைச் சேர்ந்தவன். இவனது ஆட்சிக்காலம் கி.பி 1371 முதல் 1394 வரையாகும் என செ. இராசநாயகமும், 1344 முதல் 1380 வரையாகும் என சுவாமி ஞானப்பிரகாசரும் கருதுகின்றனர்.
இவன் காலத்தில் வன்னியர்கள் சிங்களவர்களைக் கலகம் செய்யுமாறு தூண்டி விட்டனர். சிங்களவரை அடக்கிய வீரோதயன், வன்னியர்மீது படையெடுத்து அவர்களைத் தண்டித்தான்.
பாண்டியனுக்கு உதவி
அக் காலத்தில் தமிழகத்தில், பாண்டிநாட்டை சந்திரசேகர பாண்டியன் என்பவன் ஆண்டுவந்ததாகவும், அப்போது அந்நாட்டை எதிரிகள் தாக்கி அதனைக் கைப்பற்றிக்கொள்ள, பாண்டியன் தப்பி யாழ்ப்பாணத்துக்கு வந்ததாகவும் யாழ்ப்பாண வைபவமாலை குறிப்பிடுகின்றது. வீரோதய சிங்கையாரியன் நாட்டை இழந்த பாண்டியனுக்கு ஆதரவாகப் படைதிரட்டிச் சென்று அவனுக்குப் பாண்டிநாட்டை மீட்டுக் கொடுத்ததாகவும் அந்நூல் கூறுகிறது.
மேற்கூறிய நிகழ்வு தொடர்பாகத் தமிழகத்திலிருந்து சான்றுகள் எதுவும் இல்லை. எனினும், 13 ஆம் நூற்றாண்டுக் கடைசியிலும், 14 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்திலும், பாண்டிநாட்டை ஆண்ட முதலாம் மாறவர்மன் குலசேகரனின் மக்களான வீரபாண்டியன், சுந்தர பாண்டியன் இடையேயான பூசல்கள், இது தொடர்பில் மாலிக் கபூரின் பாண்டிநாட்டுப் படையெடுப்பு என்பவற்றுடன், வைபவமாலைக் கூற்றைத் தொடர்புபடுத்திய முதலியார் இராசநாயகம், சுந்தர பாண்டியனையே வைபவமாலை சந்திரசேகர பாண்டியன் எனக் குறிப்பிட்டிருக்கக்கூடும் எனக் கருதுகிறார்[1].
வீரோதயன் மரணம்
வீரோதய சிங்கையாரியன் இளம் வயதிலேயே மரணமானான். சாப்பிட்டுவிட்டுப் படுக்கைக்குச் சென்ற இவன் இரவில் படுக்கையிலேயே மரணமானான். இதனைத் தொடர்ந்து இவன் மகனான செயவீர சிங்கையாரியன் மிக இளம் வயதிலேயே அரசனாக முடி சூட்டிக் கொண்டான்.
குறிப்புகள்
- ↑ இராசநாயகம், செ., 1993. பக். 355.
உசாத்துணைகள்
- இராசநாயகம், செ., பழங்கால யாழ்ப்பாணம், ஏசியன் எஜுகேஷனல் சர்வீசஸ், புது டில்லி, 1993. (முதற்பதிப்பு: கொழும்பு 1926)
வெளியிணைப்புக்கள்
- யாழ்ப்பாண வைபவமாலை பரணிடப்பட்டது 2007-09-30 at the வந்தவழி இயந்திரம் நூலகம் இணையத் தளத்திலிருந்து.