மனம் கவர்ந்த குறள்கள் (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மனம் கவர்ந்த குறள்கள் என்பது பேராசிரியர் ப. முருகன் என்பவரால் தொகுக்கப்பட்டு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தால் 2001இல் வெளியிடப்பட்ட திருக்குறள் ஆய்வு நூல் ஆகும். இந்நூலில் வெளியான கட்டுரைகள் "வள்ளுவர் வழி" என்னும் மாத இதழில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.[1]

நூல் அமைப்பு

இந்நூலில் 75 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. இவற்றைப் பல அறிஞர்கள் படைத்துள்ளார்கள். ஒவ்வொருவரும் திருக்குறளின் அருமைபெருமைகளை வெவ்வேறு கோணங்களிலிருந்து ஆய்வுசெய்துள்ளார்கள். இதோ நூல் கட்டுரைகளின் தலைப்புகளுள் சில: மனக் கட்டுப்பாடு; நாவடக்கம் தேவை; சிரிப்பின் சிறப்பு; திருவள்ளுவரும் நீதிபதி வேதநாயகரும்; உலகப் பொதுமறையில் உவமைச் சிறப்பு; வள்ளுவரும் வள்ளலாரும்; வள்ளுவர் கூறும் உடைமைகள்; திருக்குறளில் ஊழ்; குறள் தரும் கனவு - ஓர் உளவியல் சிந்தனை; ஆல்பர்ட் சுவைட்சர் கண்ட வள்ளுவர்; திருக்குறளின் இறுதிக் குறள் எது? ஏன்.

நூலிலிருந்து சில பகுதிகள்

கட்டுரைத் தொகுப்பான இந்த நூலில் டாக்டர் பேராசிரியர் வ. பெருமாள் எழுதியுள்ள "உலகப் பொதுமறையில் உவமைச் சிறப்பு" என்னும் கட்டுரையிலிருந்து:

திருவள்ளுவர் கொடையின் இயல்பை வகுத்ததை நாம் நோக்குமிடத்து, அது தலை, இடை, கடை என்னும் மூன்று நிலைகளை அடிப்படையாகக் கொண்டது என்பதை அவர் வழங்குகின்ற உவமைகளின் வாயிலாக அறியலாம். கடைக்கொடை தன்னலத்தின் அடிப்படையில் எழுவதாகும். இக்கொடையால் மக்கள் நன்மையடைந்த போதிலும் அதன் தலையாய நோக்கம் பொதுநலமன்று; தன்னலமே. கடைக்கொடையின் இயல்பைப் பொதுவாக நோக்குவோர்க்கு அதன் பொதுநலம் புலப்படுமே தவிர அதன் உயிர்நாடியாக உள்ள தன்னலம் வெளிப்படாது. கடைக் கொடையாளனுக்கு ஏற்ற உவமையாகக் குளத்தைக் குறிப்பிடுகின்றார். குளம் தன்பாலுள்ள நீரை மக்களுக்குத் தராவிடின் அக்குளம் குட்டையாகி அக்குட்டை பாழுங்குட்டையாகித் தீய நாற்றத்தை வெளிப்படுத்தும். மக்கள் அதனை வெறுத்து அப்பக்கமும் அணுகார். இறுதியில் அது மக்களால் தூர்க்கப்படும். எனவே, குளம் தான் நன்னிலையில் இருக்கவேண்டும் என்பதற்காகப் பிறர்க்கும் பயன்படுகின்றது. இதுவே கடைக்கொடையின் உண்மையான இயல்பு. இவ்வகையைச் சார்ந்த செல்வர் தம் வாழ்வு நலனைக் கருதிக் கொடையென்னும் பெயரால் அறம் செய்வர். அவ்வாறு அறம் செய்யாவிடின் அதன் இறுதி விளைவை அவர்கள் நன்கு அறிவர். எனவேதான் இத்தகையோரைப் "பேரறிவாளன்" என்று வள்ளுவர் கூறுகின்றார். நீர் நிறைந்த ஊருணி மக்கட்கு நீர் வழங்குவது ஒருவகை என்பதை "நிறைந்த" என்னும் சொல் செய்தது போன்று கடைகொடையாளனுடைய அறிவிப்புப் பெருக்கத்தைச் சுட்டப் "பேரறிவு" என்று இயம்புகிறார். செல்வனை மக்கள் அனைவரும் சென்றாங்கு எதிர்கொள்வர். நீர் நிறைந்த குளம் மக்களாலும் ஏனைய உயிரினங்களாலும் வரவேற்கப்படும். இவ்விரு நிலைகளுக்கும் முற்றிலும் பொருத்தமான "உலகவாம்" என்னும் வெல்லும் சொல் குறளுக்கு உயிர் ஒளியைத் தருகின்றது.

"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு" (215)

இடைக்கொடை, தன்னலம் பொதுநலம் ஆகிய இரு நிலைகளின் அடிப்படையில் எழுவதாகும். மரம் மக்களுக்கும் மாக்களுக்கும் நிழல் கொடுத்தும் புள்ளினம் கூடுகட்டி உறைவதற்கும் இடம் கொடுத்தும் பயன்படுகின்ற காரணம் பற்றி இத்தன்மை பொதுநலத்தின் பாற்படும். ஆனால் கனிகளைக் கீழே வீழ்த்துவதன் காரணம் தன் பொறையைக் குறைக்க வேண்டும் என்னும் குறிக்கோளால் அன்றி எல்லோரும் பயனடைய வேண்டும் என்னும் நோக்கத்தால் அன்று. தானும் வாழ வேண்டும், பிறரும் வாழ வேண்டும் என்னும் குறிக்கோளை உடைய இடைக்கொடையாளனுக்கு நடுவூரில் உள்ள பழுமரத்தை உவமையாகக் கூறுகின்றார் திருவள்ளுவர். இடைகொடையாளன் பிறர் நலம் பேணுவான். ஆனால், தன்னலத்தைப் பொச்சாந்துவிட மாட்டான். மரம் தனக்கும் பிறருக்கும், ஒரே அளவில் பயன்படும் என்பதைப் "பயன்மரம்" என்னும் சொற்களால் குறள் கூறுகின்றது. இடைக்கொடையாளன் தனக்கும், பிறர்க்கும் நன்மை பயப்பான் என்பதை "நயனுடையான்" என்னும் செஞ்சொல் நவில்கின்றது.

"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கட் படின்" (216)

தனக்கென வாழாப் பிறர்க்கென வாழும் வாழ்வே தலைக்கொடையின் நோக்கமாகும். தலைக்கொடைக்கு "மருந்து மரத்தை" உவமையாகக் கூறுகின்றார் வள்ளுவர். மருந்து மரம் தன் காற்று, நிழல், கொழுந்து, தளிர், இலை, அரும்பு, போது, மலர், பிஞ்சு, காய், கனி, குருத்து, சருகு, விழுது, வேர், ஆகியவற்றை மக்கட்கு வழங்கி அவர்களின் நோயைப் போக்குகின்றது. ஊருணியையும் பழுமரத்தையும் விட மருந்து மரம் புரிகின்ற தொண்டு மிகவும் உயர்ந்ததாகும். தாகத்தைத் தீர்க்க ஊருணியும் பசியைப்போக்கப் பழுமரங்களும் பயன்படுகின்றன. ஆனால் மருந்து மரம் மக்கள் உயிரையே காப்பாற்றுகின்றது. தன்னை விற்றாவது ஒப்புரவு செய்யும் தலைக்கொடையாளன் உயர் பண்பைப் "பெருந்தகை" என்னும் செஞ்சொல்லால் குறிக்கின்றார் வள்ளுவர். "தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்" (56) என்னும் குறட்பா இவண் நோக்கத்தக்கது. மருந்து, மரம், காலம், இடம், மதம், இனம், மொழி ஆகிய வேற்றுமையின்றி அனைவர்க்கும் பயன்படுவது போன்று தலைக்கொடையாளன் மனித இனம் முழுமைக்கும் பயன்படுவான்.

"மருந்தாகித் தப்பா மரத்தற்றால்; செல்வம்
பெருந்தகை யான்கட் படின்" (217)

மருந்து மரம் மக்கள் நடமாட்டமற்ற காட்டில் இருப்பினும் அது மக்கட்குத் தப்பாது நன்மை பயக்கும். இவ்வுண்மையை இப்பாவிலுள்ள "தப்பா" என்னும் சொல் உணர்த்துகின்றது. தலைக்கொடைக்கு எடுத்துக்காட்டாக குமணன் திகழ்வது நோக்கத்தக்கது. முதலில் ஊருணியும், இடையில் பயன்மரமும், இறுதியில் மருந்து மரமும் அமைந்துள்ள பான்மையும், அவை முறையே கடை, இடை, தலைக்கொடையாளர்களுக்கு உவமையாக அமைந்துள்ள தன்மையும், நவில்தொறும் நயம் பயப்பனவாகவும் உள்ளன. சிறந்த பொருளை இறுதியில் கூறுகின்ற இலக்கிய மரபு ஈண்டு நன்கு விளங்குகின்றது. (பக்கங்கள்: 151-154)

குறிப்பு

  1. ப. முருகன், மனம் கவர்ந்த குறள்கள்: வள்ளுவர்வழி இதழில் அறிஞர்கள் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, 2001, பக்கங்கள்: 425.