பூர்ணம் விஸ்வநாதன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பூர்ணம் விசுவநாதன்
பிறப்பு 15 நவம்பர் 1921
முன்னீர்பள்ளம், திருநெல்வேலி
இறப்பு (2008-10-01)அக்டோபர் 1, 2008 (அகவை 87)
சென்னை,  இந்தியா
உறவினர் அண்ணன் உமாசந்திரன்

பூர்ணம் விஸ்வநாதன் (Poornam Vishwanathan; 15 நவம்பர் 1921 - 1 அக்டோபர் 2008) தமிழ்நாட்டின் பழம்பெரும் நாடக, மற்றும் திரைப்பட நடிகர் மற்றும் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளர்.

துவக்க வாழ்க்கை

பூர்ணம் விஸ்வநாதன் பாளையங்கோட்டை அருகில் உள்ள முன்னீர்பள்ளம் என்ற சிற்றூரில் பிறந்தார். இவரது தந்தை பெயர் பூர்ணகிருபேஸ்வரர் என்பதாகும். பள்ளிக் கல்வியை தென்காசியிலும், புதுக்கோட்டையிலும் பயின்றார்.[1] புதுக்கோட்டையில் பள்ளியில் பயிலும்போதே பள்ளி நாடகங்களில் மேடை ஏறினார். இவரது அண்ணனான பூர்ணம் சந்திரன் (எழுத்தாளர் உமாசந்திரன்) அனைத்திந்திய வானொலியின் சென்னை நிலையத்தில் பணியில் இணைந்தார்.

நாடக வாழ்வு

தனத 18வது வயதில் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். தன் அண்ணனைப் பின் தொடர்ந்து 1945 இல் அகில இந்திய வானொலியின் தில்லி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராக பணிக்கு சேர்ந்தார். 1947இல் அகில இந்திய வானொலியில் முதன் முறை இந்தியா விடுதலைச் செய்தியைக் கூறியுள்ளார்[2]. மேடை நாடகங்களில் நடிக்க ஆரம்பித்து கலைத்துறையில் நுழைந்தார். பூர்ணம் தியேட்டர்ஸ் என்ற நாடகக் குழுவை ஆரம்பித்து ஏராளமான நாடகங்களை மேடை ஏற்றினார். அந்த நாடகக் குழுவின் பெயராலேயே சாதாரண விஸ்வநாதனாக இருந்த அவர், பூர்ணம் விஸ்வநாதன் என்று அழைக்கப்பட்டார்.

தில்லியில் 20 ஆண்டுகள் பூர்ணம் விசுவநாதனின் வாழ்க்கை கடந்த நிலையில் தில்லியில் நாடக விழாவுக்கு வந்த எழுத்தாளர் சுஜாதாவுடன் அறிமுகமானார். அப்போது சுஜாதா தன் ஒரு கொலை.. ஒரு பிரயாணம் என்ற தன் நாடகத்தை பூர்ணம் விசுவநாதனிடம் அளித்து, படித்துப் பாருங்கள் பிடித்தால் அரங்கேற்றுங்கள் என்றார். மேலும் தில்லியில் இருந்து சென்னைக்கு வந்துவிடுமாறு ஆலோசனை கூறினார்.[1]

அவர் கொடுத்த நாடகத்தைப் படித்து வியந்த பூர்ணம் விசுவநாதன் அந்த ஆண்டே தில்லியிலிருந்து பணிமாறுதல் பெற்று 1965 இல் சென்னையில் குடியேறினார். அதன்பிறகு எழுத்தாளர் சுஜாதா வின் 10 நாடகங்களை பூர்ணம் விஸ்வநாதன் மேடை ஏற்றினார். 1979ம் ஆண்டு துவங்கி 1997ம் ஆண்டு வரை அவர் நாடகங்களை நடத்தி வந்தார். ஒரு கொலை.. ஒரு பிரயாணம், அடிமைகள், கடவுள் வந்திருக்கிறார், அன்புள்ள அப்பா, வாசல், ஊஞ்சல், சிங்கம் அய்யங்காரின் பேரன், பாரதி இருந்த வீடு உள்ளிட்ட 10 நாடகங்களை சுஜாதா எழுதி, பூர்ணம் விஸ்நாதன் மேடை ஏற்றினார்.

அண்டர் செக்ரெட்டரி, 50=50 போன்ற நாடகங்களை தானே எழுதியும் நடித்துள்ளார். கடைசியாக 1997 ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் பாரதி இருந்த வீடு என்ற நாடகத்தை அரங்கேற்றினார். அதன்பின்னர், அவரது குழுவைச் சேர்ந்தவர்கள் கோகுலம் ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி என்ற பெயரில் நாடகங்களைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். தில்லி, லக்னோ, மும்பை ஆகிய நகரங்களில் இவர் நாடகம் நடித்துள்ளார்.

குடும்பம்

இவருக்கு சுசீலா என்ற மனைவியும், உமா மோகன், பத்மஜா ராமச்சந்திரன், சித்தார்தன் என்ற மூன்று பிள்ளைகள் உண்டு.[1]

திரைப்படங்களில்

86 படங்களில் இவர் நடித்திருக்கிறார்.

  1. வருஷம் 16
  2. வறுமையின் நிறம் சிவப்பு
  3. தில்லு முல்லு
  4. மகாநதி
  5. விதி
  6. மூன்றாம் பிறை
  7. புதுப்புது அர்த்தங்கள்
  8. கேளடி கண்மணி
  9. ஆண்பாவம்

விருதுகள்

  1. சங்கீத நாடக அகாதமி விருது[3]

மறைவு

சில மாதங்களாக நோய்வாய்ப்பட்டிருந்த பூர்ணம் விஸ்வநாதன் 2008, அக்டோபர் 1 மாலை 3.30 மணி அளவில் உயிரிழந்தார். மறைந்த பூர்ணம் விஸ்நாதனுக்கு சுசீலா என்ற மனைவியும், உமா, பத்மஜா என்ற மகள்களும், சித்தார்தா என்ற மகனும் உள்ளனர். இவருடைய அண்ணன், முள்ளும் மலரும் உட்பட பல தமிழ் நாவல்கள் எழுதிய எழுத்தாளர் உமாசந்திரன்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=பூர்ணம்_விஸ்வநாதன்&oldid=21984" இருந்து மீள்விக்கப்பட்டது