சித்தர் நூல்களில் அகத்தியர், திருவள்ளுவர் வரலாறு (நூல்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

சித்தர் நூல்களில் அகத்தியர், திருவள்ளுவர் வரலாறு என்னும் நூலை பா. கமலக்கண்ணன் என்பவர் எழுதி 1993இல் வெளியிட்டார். அதன் இரண்டாம் பதிப்பு 2005இல் வெளியானது.[1]

நூல் பிரிவுகள்

இந்நூல் "அகத்தியர் வரலாறு", "திருவள்ளுவர் வரலாறு" என்று இரு பிரிவுகளாக அமைந்துள்ளது. இந்நூலின் "முன்னுரை"யில் ஆசிரியர் பின்வருமாறு கூறுகிறார்:

அகத்தியரைப் பற்றிய் ஆய்வின்போது, அவருடைய சீடரான திருவள்ளுவர் என்பவர் இயற்றிய "ஞானவெட்டியான்" முதலிய பல நூல்கள் காணக் கிடைத்ததால் அந்நூல்களின் ஆசிரியரும், திருக்குறள் இயற்றிய திருவள்ளுவரும் ஒருவராய் இருப்பாரோ என்ற வினாவிற்கு விடை காணவேண்டிய அவசியம் ஏற்பட்டது. என்னே விந்தை! அவருடைய சுய சரிதையே கிடைத்தது. எனவே, திருவள்ளுவரின் வரலாறு இந்நூலின் இரண்டாம் பாகமாக அமைந்துள்ளது.

நூலாசிரியர் தருகின்ற வள்ளுவர் வரலாறு

இந்நூலாசிரியர் சித்தர் பாடல்களை ஆராய்ந்து தாம் பெற்ற முடிவுகளாக சில கருத்துகளைத் தெரிவிக்கிறார். அகத்திய முனிவரின் சீடர் ஒருவர் பெயர் திருவள்ளுவர் என்றும், அவர் "ஞானவெட்டியான்" முதலிய பல நூல்களை இயற்றியவர் என்றும், அவரே திருக்குறள் இயற்றிய திருவள்ளுவர் என்றும் இந்த நூலாசிரியர் கூறுகிறார். மேலும், நூலின் இறுதியில் அவர் தமது முடிவுகளைக் கீழ்வருமாறு தொகுத்துத் தருகின்றார்:

திருவள்ளுவரின் வரலாற்றை ஆராயப் புகுந்த நமக்கு, அவருடைய சுயசரிதையே கிடைத்துவிட்டது! நம்முடைய ஆய்விலிருந்து, திருவள்ளுவருடைய வாழ்க்கையைப் பற்றிய கீழ்க்கண்ட அரிய தகவல்களைத் திரட்டியிருக்கிறோம்.

1. திருவள்ளுவர் ஒரு மெய்ஞ்ஞானி; எனவே, திருக்குறளில் ஆங்காங்கு மெய்ஞ்ஞானக் கருத்துக்களைப் புதைபொருள் சொற்களால் (பரிபாஷையில்) செருகி வைத்துள்ளார்.

2. திருவள்ளுவர், திருக்குறளைத் தவிர ஞானவெட்டியான் முதலான வேறு பத்து நூல்களையும் இயற்றியிருக்கிறார்.

3. தம்முடைய பிற்காலத்திய நூல்களை எளிய அறிவுடையோர் புரிந்துகொள்வதற்காக வழக்குத் தமிழில் பாடியுள்ளார்.

4. வள்ளுவரைப் பற்றிக் கூறப்படும் கதையில் கண்டவாறு, அவர் ஆதிக்கும் பகவனுக்கும் மகனாகப் பிறந்தவரல்லர்.

5. அவர் பிறந்த ஊர் மயிலாப்பூர் அல்ல; கரூர்.

6. அவர் தந்தையார் பெயர் சாம்பசதாசிவன்.

7. அவர் தாழ்த்தப்பட்ட குலமான வள்ளுவர் வகுப்பைச் சேர்ந்தவர்.

8. அவருடைய இயற்பெயர் சாம்புவன் என்ற சாம்புவமூர்த்தி. அவருடைய சந்ததியினர் இன்றும் 'சாம்பான்' என்ற பிரிவாக வாழ்ந்து வருகின்றனர்.

9. கதையில் கூறுகின்றபடி அவர் ஒரே இரவில் கருவாகி உருவாகிப் பிறந்தவரல்லர். தாயின் கர்ப்பத்தில் இயல்பாக ஒன்பது மாதம் இருந்தே பிறந்தவர்.

10. அவர் பிறந்த உடன் வெண்பா பாடியதாகக் கூறப்படும் கதை அபத்தமானது. ஏனெனில் தாம் பிறந்த ஒன்பதாம் மாதத்தில்தான் பேசியதாக அவரே கூறுகிறார்.

11. அவர் ஐந்தாம் வயதில் ஒரு வேதியரிடம் குருகுலக் கல்வி பயின்றார். ஒரே மாதத்தில் கணிதமும் சாத்திரமும் எழுதக் கற்றுக் கொண்டார்.

12. தமது பத்து வயதுக்குள் குருகுலக் கல்வியை முடித்துவிட்டு வெளிவந்தார்.

13. தமது பதினாறாவது வயதில் யோகம் பயின்றார். பின்னர் மக்கள் மத்தியில் நவரத்தின சங்கப் பலகையின் மீதமர்ந்து வேத வேதாங்கங்களுக்கு விரிவுரையாற்றினார். அவருடைய அறிவாற்றலைக் கண்ட வேதியர்களும் சாஸ்திரிகளும் அவரைத் துதித்து வணங்கினர். அவர் பெயரை குறிப்பிடாமல் மரியாதையோடு குலப் பெயரால் "திருவள்ளுவர்" என்று கூறினர்.

14. வள்ளுவர் நெசவுத் தொழில் செய்து வந்தார்; சித்திரக் கம்பளம் நெய்வதில் வல்லவராய் விளங்கினார்.

15. அவர் மனைவி மக்களோடு இன்பமாய் பன்னிரண்டு ஆண்டுகள் இல்வாழ்க்கை நடத்தினார். அதன் பின்னர் கணவனும் மனைவியுமாக இல்லாமல், அகத்துறவு பூண்டு தாயும் மகனும் போலும், குருவும் சீடனும் போலும் இருவரும் மனமொத்து நீடூழி காலம் வாழ்ந்தனர்.

16. வள்ளுவர், அகத்திய மாமுனிவரிடம் உபதேசம் பெற்று தவம் செய்து முத்திநிலை எய்தினார்.

17. ஏலேலசிங்கன், கொங்கணச்சித்தர் ஆகிய இருவரும் திருவள்ளுவரின் சீடராக விளங்கினார்கள்.

18. வள்ளுவர் சுமார் 1600 ஆண்டுகள் மோனத்தவ நிலையில் ஆழ்ந்திருந்து அதன் பின்னர் சமாதிக்கு ஏகினார். - (பக்கங்கள் 125-127)

குறிப்பு

  1. பா. கமலக்கண்ணன், சித்தர் நூல்களில் அகத்தியர், திருவள்ளுவர் வரலாறு, வானதி பதிப்பகம், சென்னை, 2005 (முதல் பதிப்பு: 1999), பக்கங்கள்: 130