கிறித்துவர்களின் திருக்குறள் கொடை (நூல்)
கிறித்துவர்களின் திருக்குறள் கொடை என்னும் திருக்குறள் ஆய்வு நூல் கு. மோகனராசு, வீ. ஞானசிகாமணி ஆகியோரைப் பதிப்பாசிரியர்களாகக் கொண்டு 2004இல் மணிவாசகர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.[1]
நூல் பொருள்
இத்தொகுப்பு நூலை அறிமுகம் செய்கின்ற முனைவர் கு. மோகனராசு பின்வருமாறு "முன்னுரை"யில் விளக்குகிறார்:
திருக்குறள் உலகின் வாழ்வியல் பேரிலக்கியம்: உலகின் பொதுமறை என்னும் பெருமைக்கு முழு உரிமை உடையது. அதனால், அதனை எல்லாச் சமயப் பெருமக்களும் தத்தமக்குரிய நூலாகக் கொண்டு உரிமை பாராட்டி வருகின்றனர்; அவ்வாறு உரிமை பாராட்டுபவர்களுள் கிறித்தவர்களும் அடங்குவர். திருக்குறளையே கிறித்தவ நூல் என்றும், திருவள்ளுவரையே கிறித்தவர் என்றும் உரிமை கொள்பவர்களும் உளர்.
இந்த உரிமை பாராட்டும் உணர்வுக்கு அடிக்கல் நாட்டியவராக விளங்குபவர் டாக்டர். ஜு.யூ. போப் அவர்கள்; இந்த உணர்வுக்கு ஆழமாக வித்திட முயன்றவர்களுள் குறிப்பிடத் தக்கவர்கள் முனைவர் மு. தெய்வநாயகம், பேராயர் முனைவர் இரா. அருளப்பா ஆகியோர் ஆவர்.
கிறித்தவர்களின் திருக்குறள் பணிகள் கடந்த 300 ஆண்டுகளாகவே தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது; இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. திருக்குறள் மொழிபெயர்ப்புகள், திருக்குறள் உரைகள், திருக்குறள் இலக்கண-இலக்கிய ஆய்வுகள், திருக்குறள் ஒப்பாய்வுகள், திருக்குறள் படைப்புகள், அமைப்புகளின் வழியே திருக்குறள் பரப்பும் பணிகள் என அவர்களின் திருக்குறள் பணிகள் பலவாறாகப் பரந்து விரிந்து காணப்படுகின்றன.
அவற்றையெல்லாம் ஒருங்கு தொகுத்துத் தமிழுலகிற்கு வழங்க வேண்டும் என்னும் வேட்கை என் உள்ளத்தில் பல காலமாக இருந்து வந்தது. அதை நிறைவேற்றுவதற்கான ஒரு நல்வாய்ப்பும் கிடைத்தது...
சென்னைப் பல்கலைக்கழகம் தந்த தூண்டுதலைத் துணையாகக் கொண்டு, வரையறுத்த தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகள் வழங்குமாறு அறிஞர் பெருமக்களை அணுகினோம். அவர்களும் மகிழ்வோடு ஆய்வுக் கட்டுரைகள் வழங்கிச் சிறப்பித்தனர். அந்த ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பே தற்போது "கிறித்தவர்களின் திருக்குறள் கொடை" என்னும் நூலாக வெளிவருகின்றது...
நூலில் உள்ள ஆய்வுக் கட்டுரைகள்
இந்நூலில் 11 ஆய்வுக் கட்டுரைகள் அடங்கியுள்ளன. அவற்றின் தலைப்புகளும் அவற்றை ஆக்கியோரும்:
1. திருக்குறள் மொழிபெயர்ப்புகள் - முனைவர் ஜி. ஜான்சாமுவேல்
2. திருக்குறள் தமிழ் உரைகள் - முனைவர் கு. மோகனராசு
3. திருக்குறள் இலக்கிய ஆய்வுகள் - முனைவர் பா. வளன் அரசு
4. திருக்குறள் ஒப்பாய்வுகள் - முனைவர் ஜோசபின் டோரதி
5. திருக்குறள்சார் படைப்பிலக்கியங்கள் - செல்வி க. அற்புதமணி
6. தமிழ்க் கிறித்தவ இலக்கியத்தில் திருக்குறளின் தாக்கம் - திருமதி அன்னாள் வேதகிரி
7. திருக்குறளும் வீரமாமுனிவரும் - முனைவர் சூ. இன்னாசி
8. மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரும் திருக்குறளும் - முனைவர் வீ. ஞானசிகாமணி
9. பேராயர் இரா. அருளப்பாவும் திருக்குறளும் - முனைவர் அன்னி தாமசு
10. பேராசிரியர் சாலமன் பாப்பையாவும் திருக்குறளும் - முனைவர் அரங்க. இராமலிங்கம்
11. பேராசிரியர் பா. வளன் அரசும் திருக்குறளும் - முனைவர் நெல்லை ந. சொக்கலிங்கம்
கிறித்தவர்களின் திருக்குறள் உரை நூல்கள்
கிறித்தவர்கள் திருக்குறளுக்கு எழுதியுள்ள உரை நூல்களாகக் கீழ்வருவன இந்நூலில் குறிக்கப்படுகின்றன:
1. பேராசிரியர் எம்மார் அடைக்கலசாமி, திருக்குறள் மூலமும் உரையும், காந்தளகம், சென்னை, 1995.
2. டாக்டர் இரா. அருளப்பா, திருக்குறள் புத்தாய்வு, மெய்ப்பொருள் பதிப்பகம், சென்னை, 1987.
3. கலைவித்தகர் ஆரூர்தாஸ், அய்யன் திருக்குறள் அகரவரிசைக் குறள் அகராதி, கண்ணபிரான் நூலகம், சென்னை 2000.
4. பேராசிரியர் சாலமன் பாப்பையா, திருவள்ளுவரின் திருக்குறள் - உரையுடன், ஜெயா பதிப்பகம், மதுரை, 1999.
5. மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர், திருக்குறள் தமிழ் மரபுரை, தமிழ்மண் பதிப்பகம், சென்னை 2000.
6. டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா, திருக்குறள் புதிய உரை - அறத்துப்பால், ராஜ்மோகன் பதிப்பகம், சென்னை, 2000.
7. திருக்குறள் ஞாயிறு முனைவர் பா. வளன் அரசு, திருக்குறள் விளக்கம், தினகரன், நெல்லை, 2004.
குறிப்பு
- ↑ முனைவர் கு. மோகனராசு, முனைவர் வீ. ஞானசிகாமணி, கிறித்துவர்களின் திருக்குறள் கொடை, மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004, பக்கங்கள்: 192.