களவியல் காரிகை
களவியற் காரிகை என்பது ஒரு அகப்பொருள் இலக்கண நூல். முதலிலும், முடிவிலும், இடையிலும் பல பாடல்கள் இன்று கிடைக்கவில்லை. இதனால் இதன் ஆசிரியர் யாரென்பதோ அவர் இந்த நூலுக்கு வழங்கிய பெயர் எது என்பதோ தெரியவில்லை. இதை முதலில் பதிப்பித்த பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளையே களவியற் காரிகை என்னும் பெயரை இந்நூலுக்கு வழங்கியவர்.
இறையனார் களவியல் என்னும் நூல் 60 நூற்பாக்கள் கொண்டது. இதன் ஒவ்வொரு நூற்பாவையும் விளக்கிக் காட்டும் வகையில் 60 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் இயற்றப்பட்டு களவியற் காரிகை வெளிவந்துள்ளது.
பெயர்ப் பொருத்தம்
அகப்பொருளில் ஒன்றாகிய களவொழுக்கம் பற்றிக்கூறுவது களவியல் எனப்படும். இறையனார் களவியலைத் தழுவிக் களவியலைப் பற்றிக்கூறும் இந்நூலும் களவியல் என்பதைத் தனது பெயரின் பகுதியாகப் பெற்றது. அத்துடன் இந்நூல் கட்டளைக் கலித்துறைப் பாடல்களினார் அமைந்த்தும், மகடூஉ முன்னிலையில் அமைந்ததாலும் காரிகை என்பதும் இதற்குப் பொருந்துவது ஆயிற்று. களவியல் என்று பொதுவாக அறியப்படும் இறையனார் களவியல் நூலிலிருந்தும், காரிகை எனப் பொதுவாகக் குறிப்பிடப்படும் யாப்பருங்கலக் காரிகையில் இருந்து வேறுபடுத்துவதற்குமாகவே இது களவியற் காரிகை எனப்பெயர் பெற்றது எனலாம்[1]
நாதமுனிப்பிள்ளை கையெழுத்துப் பிரதி
இதன் ஆசிரியர் பெயரோ, நூலின் பெயரோ எதுவும் தெரியாத நிலையில், காகித ஏட்டில் எழுதப்பட்ட பிரதி ஒன்று அரசாங்கத் தொன்னூல் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆழ்வார் திருநகரி மலையப்பப்பிள்ளை என்னும் கவிராயரிடம் பெற்று, நாதமுனிப்பிள்ளை என்பவரால் 1920 ஆம் ஆண்டு கையால் எழுதிய பிரதியாக இது பாதுகாக்கப்பட்டுள்ளது. நூலின் பெயர் தெரியாமல் அவர் அதனை ‘அகப்பொருள் விளக்கம்’ என எழுதி வைத்திருந்தார்.
அமைப்பு
இந்நூல் 60 செய்யுள்களால் அமைந்திருந்ததாகக் கருதப்படுகிறது. முதல் பத்துப் பாடல்களும், இறுதி ஆறு பாடல்களும் இப்போது இல்லை. 11 முதல் 54 வரையான பாடல்களே உள்ளன[2]. இதன் இரண்டாவது பதிப்பில், இந்நூல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
- அகப்பொருள்
- களவொழுக்கம்
- கற்பொழுக்கம்
இந்நூல் அந்தாதியாக அமைந்துள்ளது. தமிழ்நெறி விளக்கம் பொருளியல் பகுதியிலிருந்து 91 பாடல்களும், பாண்டிக்கோவை என்னும் நூலிலிருந்து 154 பாடல்களும், ஆக 416 பாடல்கள் இந்நூலின் உரையில் மேற்கோள் பாடல்களாக வருகின்றன[3]
வையாபுரிப்பிள்ளை பதிப்பு
முதலில் 10, இடையில் சில, இறுதியில் 6 ஆகிய களவியல் நூற்பாக்களுக்கு இதில் கட்டளைக்கலித்துறைப் பாடல்கள் உள்ளன. கிடைத்த பகுதிகளை மட்டும் தொகுத்து சு. வையாபுரிப்பிள்ளை ‘களவியல் காரிகை’ என்னும் பெயர் சூட்டி வெளியிட்டார்.[4] இவற்றில் 11 முதல் 54 வரை உள்ள கலித்துறைப் பாடல்கள் அந்தாதியாக வருகின்றன.
உரைகள்
14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் உரை ஒன்று இதற்கு உண்டு. இவ்வுரை உரையாசிரியர் பற்றிய விபரங்களைத் தராததால் உரையாசிரியருடைய பெயர், ஊர், சமயம் முதலியவற்றைப் பற்றி அறிந்துகொள்ள முடியவில்லை.
பழைய உரை
இதன் பழைய உரை ஒன்றையும் சேர்த்து, சாமிநாதையர் வெளியிட்டுள்ளார்.
உரை
- உரை ‘களவியல்’ நூற்பாக்களை அப்படியே எடுத்தாள்கிறது.
- முதல் விருத்தம் நெய்வேலி முத்தரையரை வணங்குகிறது.
- துறையை விளக்கும் மேற்கோள் பாடல்கள் ‘திருக்கோவையார்’ நூலிலிருந்து தரப்படுகின்றன. மேற்கோள் கிடைக்காதபோது, அரசர் மேலதான பாண்டிக்கோவை போன்ற நூல்களிலிருந்து எடுத்துக்கொள்ளாமல், திருவிடைமருதூர் மும்மணிக்கோவை, தில்லையந்தாதி, கோயிலந்தாதி நூல்களிலிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
பழம்பாட்டு
இந்த உரையில் பழம்பாட்டு என்னும் குறிப்புடன் 33 பாடல்கள் உள்ளன. இவை எல்லாமே அகத்திணைப் பாடல்கள். வேறு எந்த நூலிலும் இல்லாதவை.
மேற்கோள் காட்டும் நூல்கள்
இந்த உரையில் இன்று கிடைக்கப்பெறாத பல நூல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
|
|
காலம்
- இந்த நூல் 1325-1350 ஆண்டுக்கால நூலான பல்சந்த மாலை என்னும் சிற்றிலக்கியத்தைக் காட்டுகிறது. எனவே இந்த நூலின் காலமும் 14ஆம் நூற்றாண்டு (1350-1375) எனக் கொள்ளலாம்.
- இந்த நூற்றாண்டில் நம்பியகப்பொருள், தொல்காப்பிய அகத்திணையைத் தழுவி எழுதப்பட்டது.
- இதுபோல இறையனார் களவியலைத் தழுவி ‘களவியல் காரிகை’ தோன்றியது.
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு, 2005
- இளங்குமரன், இரா., இலக்கண வரலாறு, மணிவாசகர் பதிப்பகம் சென்னை, 2009.
- அரவிந்தன், மு. வை., உரையாசிரியர்கள், மணிவாசகர் பதிப்பகம், மூன்றாம் பதிப்பு (முதற்பதிப்பு 1968)
இவற்றையும் பார்க்கவும்
அடிக்குறிப்பு
- ↑ இளங்குமரன், இரா., 2009. பக்.326
- ↑ அரவிந்தன், மு. வை., பக். 629
- ↑ இளங்குமரன், இரா., 2009. பக்.327, 328
- ↑ களவியல் காரிகை எனப் பெயர் சூட்டி வையாபுரிப்பிள்ளை பதிப்பித்தது, 1931